இலங்கை

நாமல் மலினமாகப் பேசுவதற்கு துணிச்சலைக் கொடுத்தவர்கள் தமிழரசு கட்சியினரே

நாமல் ராஜபக்ஷவின் மலினமான பேச்சுக்களுக்கு விக்னேஸ்வரனும் முழுப்பொறுப்பினை ஏற்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தெளிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“75 வருடங்களாக தமிழருக்கு உரிமை வழங்க மாட்டோம் என்று பேரினவாதிகள் கூறி வருகின்றார்கள். குறிப்பாக பேரினவாதிகள் சிங்கள மக்களுக்கு இவ்வாறான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது ஒரு பௌத்த நாடு. சிங்கள நாடு. இதை பேணிப் பாதுகாப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அது மட்டுமன்றி வட கிழக்கில் 1000 பௌத்த விகாரை அமைப்பதாகவே கூறி வருகின்றனர்.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமும் அவ்வாறு தான் இருந்திருக்கின்றது. சஜீத் பிரேமதாச புத்தசாசன அமைச்சராக இருந்தபோது நீராவியடி பிள்ளையார் ஆலய முற்றத்தில் ஒரு பௌத்த பிக்குவின் சடலம் எரிக்கப்பட்டது.

இவ்விடயம் அமைச்சரின் ஆலோசனை வழிகாட்டலுடன் தான் நடைபெற்றது. இது தவிர அவரது காலத்தில் தான் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சட்டவிரோத விகாரை கூட கட்டப்பட்டிருந்தது.

அனுரகுமார திசாநாயக்கவை பற்றி கூறத் தேவையில்லை. மோசமான இனவெறி கொண்ட ஒருவர். இறுதிப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்து ஒழிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி இராணுவத்துக்கு கொடுத்திருந்த ஒரு கொலைவெறி பிடித்த குழு ஒன்றின் தலைமைச்சக்தியாக அவர் இருக்கின்றார்.

அது மாத்திரமன்றி வடக்கு கிழக்கினை வழக்கு தாக்கல் செய்து பிரித்த இனவெறியர்கள் இவர்கள். இவர்கள் எல்லோரது நிலைப்பாடுகளும் இவைதான். இதில் நாமல் ராஜபக்ஷ விதிவிலக்கானவர் அல்லர்.

இதனால்தான் இவர்களிடம் தமிழருக்கு உரிமை கொடுக்கப் போகின்றோம் என கூறினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுதி உங்களின் சிங்கள மக்களுக்கு சொல்லுங்கள். இந்த தோல்வியடைந்த ஒற்றையாட்சியினை ஒழிக்கப் போகின்றோம். சமஸ்டியை கொண்டுவரப் போகின்றோம் என்பதை தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வெளிப்படுத்தி வாருங்கள் என நாங்கள் கூறுவது நம்பிக்கைக்காக தான்.

இது தவிர இன்று நேற்று முளைத்த காளானாக இருக்கின்ற இந்த நாமல் ராஜபக்ஷவுக்கு சமீப காலமாக பல கருத்துக்களை குறிப்பிடும் துணிச்சலை கொடுத்தது சுமந்திரன், சம்பந்தன், அரியநேத்திரன், சிறிதரன் உட்பட இந்த தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு 2010, 2015, 2020 ஆண்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

விக்னேஸ்வரனும் முழுப்பொறுப்பினையும் ஏற்க வேண்டும். ஏனெனில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு குற்றவியல் விசாரணைகளை நடத்துவதற்கான அதிகாரங்கள் இல்லை என்பது நன்றாக தெரிந்த பிறகும் தொடர்ச்சியாக உள்ளக விசாரணைக்குள் பொறுப்புக்கூறலை முடக்கி சர்வதேச விசாரணை வேண்டாம்.

இனப்படுகொலையாளிகளை பாதுகாப்பதற்காக மேற்கூறியவர்கள் ஒவ்வொருவரும் கூட்டாக செயற்பட்டு வந்தவர்கள். குறிப்பாக இந்த இனப்படுகொலையாளி கோட்டபய ராஜபக்ஷ 2019 ஆண்டு பதவியேற்ற பிறகு ஜனாதிபதியாக இருக்கின்றபோது 2021 ஆண்டு மார்ச் மாதம் இலங்கை தொடர்பாக ஒரு தீர்மானம் வந்த நிலையில் அந்த சந்தர்ப்பத்தில் வந்து பொறுப்புக்கூறல் செயற்பாட்டை மனித உரிமை பேரவையில் இருந்து வெளியே எடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முயற்சியை எங்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட எங்களது கட்சி முக்கியஸ்தர்கள் முன்னெடுக்கின்றபோது இவர்கள் (தமிழ் அரசுக் கட்சியினர்) கடிதம் எழுதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள விடயம் எந்த வடிவத்திலேனும் நிறைவேற்றப்பட வேண்டும். ஏனெனில் இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் தீர்மானம் ஒன்று தேவை என்பதாகும்.

இவ்வாறாக இவர்கள் கொடுத்த ஆதரவு தான் நாமல் ராஜபக்ஷ போன்றவர்களுக்கு திமிரை கொடுத்திருக்கின்றது. அது மட்டுமன்றி நாமல் ராஜபக்ஷ சீன சார்பானவர் என்பதனால் ஊடகங்கள் அவரது கருத்துக்களை பெரிதுபடுத்துகின்றன.

அது மட்டுமன்றி 2010ஆம் ஆண்டு தமிழரசு கட்சியினர் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க சொன்னதை மறக்க முடியுமா? ஆகவே எமது மக்கள் இவ்வாறானவர்களை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

1920ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையில் ஈடுபட்டமைக்காக பிரித்தானியாவில் வழக்கு போடப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இலங்கையில் இருந்து சென்ற தமிழ் தலைவர்கள் வாதாடி அந்த சிங்கள தலைவர்களை மீட்டு கொண்டுவந்தபோது அந்த நன்றிக்கடனுக்காக கொழும்புக்கு வந்திறங்கிய இந்த தமிழ் தலைவர்களை குதிரை வண்டிலில் ஏற்றி குதிரைகளை கழற்றிவிட்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட சிங்கள தலைவர்கள் குதிரைகள் போன்று தோளில் வைத்து வண்டிகளை இழுத்து சென்றார்கள்.

அந்தளவிற்கு தமிழர்களுக்கு சிங்கள தலைவர்கள் கடமைப்பட்டு இருந்தார்கள். பயந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை தமிழ் தலைவர்கள் என்று சொல்கின்ற அடிமைகள் ஜெனிவா வரை சென்று சர்வதேச விசாரணையின்றி மீட்கப்பட்டிருக்கின்ற நிலையில் இன்று எம்மை சிங்கள மக்கள் துரத்தி துரத்தி அடிக்கின்றார்கள்.

எனவே எமது மக்கள் சிந்திக்க வேண்டும். எமது வாக்குகளை பெற இன்று பொது வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றார்களா? இவ்வாறானவர்கள் தான் அரசுடன் பேரம் பேசுவார்களா? என்பதை எமது மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.