தற்கொலை தாக்குதல் ட்ரோன் சோதனை நடத்திய வட கொரியா: நேரில் பார்வையிட்டார் கிம் ஜாங் உன்
புதிய “தற்கொலை ஆளில்லா விமானங்கள்” மூலம் சோதனை இலக்குகளை அழித்ததை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேரில் கண்காணித்துள்ளார்.
இந்நிலையில், ஆளில்லா விமானங்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்களை வலியுறுத்தியதாக அந்நாட்டு அரச ஊடகம் இன்று (26) செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை Drone Institute of North Korea’s Academy of Defense Sciencesஐ நேரில் பார்வையிட்ட கிம் ஜாங் உன் ஆளில்லா விமானங்களின் செயற்பாடுகளையும் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும் வெவ்வேறு முன்னமைக்கப்பட்ட வழிகளில் பறந்து பின்னர் நியமிக்கப்பட்ட இலக்குகளை சரியாகக் கண்டறிந்து அழிக்கும் ட்ரோன்களின் வெற்றிகரமான சோதனையைப் பார்த்தார் என்று மாநில செய்தி நிறுவனம் KCNA தெரிவித்துள்ளது.
இநிநிலையில், நீருக்கடியில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள், உளவு மற்றும் பல்நோக்கு தாக்குதலுக்கும் அதிக தற்கொலை தாக்குதல்களை நடத்தும் ட்ரோன்களை தயாரிக்க கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், வடகொரியா தற்கொலை தாக்குதல் அமைப்புகளை வெளியிட்டமை இதுவே முதல்முறை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் குறைந்தது நான்கு வெவ்வேறு வகையான ட்ரோன்களைக் காட்டியதுடன், அவற்றில் சில சிறிய ரொக்கட் இயந்திரங்களின் உதவியுடன் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வட கொரிய ட்ரோன்கள் 2022 இல் எல்லையைத் தாண்டி தெற்கில் நுழைந்ததுடன், திரும்பிச் செல்வதற்கு முன்பு தென் கொரிய ஜனாதிபதி அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குள் நுழைந்திருந்தது.
இதனையடுத்து, இந்த ஆண்டு வட கொரிய ஆளில்லா விமானங்களை தாக்கிய அழிக்க லேசர் ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக தென் கொரியா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.