ரஷ்யாவுக்கு எதிரான பல சட்டங்களில் கையெழுத்திட்ட ஜெலென்ஸ்கி; மத அதைப்புகளுக்கும் தடை
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்யாவுக்கு எதிரான பல சட்டங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உக்ரைன் சேர வழி வகுக்குப்பது உட்பட பல்வேறு சட்டங்கள் இதில் அடங்கும்.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீதான மொஸ்கோவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது போர்க் குற்றங்களை சுமத்தும் வகையில் வழக்குகளை தொடரப்படுவதற்கான வாய்ப்பாக உள்ள ரோம் சட்டத்தை உக்ரைன் அங்கீகரித்துள்ளது.
சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் சுதந்திரமடைந்து 33 ஆண்டுகள் நிறைவடையும் இன்றைய தினத்தில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
உக்ரேனிய குடிமக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு உள்ளிட்ட ரஷ்ய அதிகாரிகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. என்றாலும், பொது மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
மொஸ்கோவுடன் தொடர்புடைய மத அமைப்புகளைத் தடை செய்யும் சட்டத்திலும் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார்.
“இன்று நாங்கள் உக்ரைனின் 33வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். எதிரிகள் எங்கள் நிலத்திற்கு எதை கொண்டு வந்தாரோ அது இப்போது அவர்களின் வீட்டிற்கு திரும்பிவிட்டது” என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரேனிய இராணுவத்தில் போராடும் வெளிநாட்டவர்களுக்கு உக்ரேனிய குடியுரிமையை வழங்கும் சட்டத்திலும் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார்.