அமெரிக்க கப்பலை அடுத்து இலங்கையை நோக்கி வரும் சீன கப்பல்: காரணம் என்ன?
கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் சீன கடற்படைக்கு சொந்தமான போலன்ஸ் (PLANS Po Lang) என்ற கப்பல் சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இக்கப்பல் இம்மாதம் இறுதி வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளது. 85 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் 18 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கக் கூடியது. 50 கடற்படை கேடட்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதியும் உள்ளது.
கடற்படை அதிகாரிகளிடையே தொழில்முறை திறன்களை வளர்ப்பது மற்றும் பிற நாடுகளின் கடற்படைகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பொதுவான எதிர்காலத்துடன் கடல் நடவடிக்கைகளை தொடங்குவது இந்த பயணத்தின் நோக்கமாகும் என்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளர் கேர்னல் ஜாங் சியாவோங் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் தனது பயணத்தில் வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் பயணிக்கும். அத்துடன், ஹாங்காங்கில் தொழில்நுட்ப வசதிகளை பெறும் என்றும் குறித்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஒகேன் (USS O’kane) என்ற கப்பல் கடந்தவாரம் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துச் சென்றது.
இந்த கப்பலின் வந்தமைக்கான நோக்கம் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் சீன கப்பல்கள் இலங்கையை நோக்கி வருவது தொடர்பில் சர்வதேச அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் கடற்பரப்பிற்குள் எவ்வித சர்வதேச ஆய்வு கப்பல்களும் அனுமதிக்கப்படாதென அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவொன்றை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதன் பின்னர் ஆய்வு கப்பல்களின் வருகை குறைந்தது.
அடிக்கடி சீனாவின் கடல்சார் ஆய்வு கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்தமையால் இந்தியா இதற்கு கடுமையான எதிர்ப்பை அரசாங்கத்திடம் வெளிப்படுத்தியதன் பின்னரே சர்வதேச ஆய்வு கப்பல்களின் வருகைக்கான தற்காலிக தடையை இலங்கை விதித்தது.
இலங்கையின் தடை குறித்து சீனா தமது அதிருப்தியை வெளியிப்படுத்தியிருந்தது. இதன் பின்னர் இலங்கையில் கப்பல்களின் வருகை தொடர்பிலான சர்ச்சை சற்று ஓய்ந்திருந்தது.
என்றாலும், அவ்வபோது அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனாவின் சில கப்பல்கள் வந்து செல்கின்றன. இவை ஆய்வு கப்பல்களாக இல்லாத போதிலும் அவற்றின் வருகை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளும் இராஜதந்திர நெருக்கடிகளையும் இலங்கை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் தற்போது வருகைதரவுள்ள சீன கடற்படை கப்பல் தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் அவதானம் செலுத்தியுள்ளன.