உள்ளூராட்சி தேர்தல் மனுக்கள்: அதிரடி தீர்ப்பு வெளியானது
உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை ஒத்திவைத்ததன் ஊடாக, தேர்தல்கள் ஆணைக்குழு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிவிட்டது என உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தேர்தல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதியன்று நடத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும், தேர்தலை நடத்துவதற்கு நிதிவசதி அளிக்கமுடியாது என அரசாங்கம் கையை விரித்துவிட்டது.
இந்த தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் தீர்ப்பு வியாழக்கிழமை (22) வழங்கப்பட்டது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர் நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட, காமினி அமரசேகர, முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்ததற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் தேசிய மக்கள் சக்தி மாற்றுக் கொள்கை மையம் ஆகிய அமைப்புகள் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையம் அதன் உறுப்பினர்கள் குழுவை பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.