முச்சந்தி

நேரடி மோதலுக்கு தயாராகிறதா நேட்டோ ?… உக்ரேன் படைகளின் ‘கூர்ஸ்க்’ ஊடுறுவல் தாக்குதல்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

நேட்டோவால் ஆயுதம் மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட உக்ரேனிய இராணுவம் கூர்ஸ்க் (Kursk) மோதலில் சம்பந்தப்பட்டிருந்தது என்ற உண்மையும், உக்ரேனிய போரின் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையை இந்த மோதல் குறிக்கின்றது.

நேட்டோவின் ஆயுதம்:

இதற்கு முன்னர் ரஷ்ய நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது உக்ரேன் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது. முந்தைய ஊடுருவல்கள் உக்ரேனின் இராணுவ உளவுத்துறையின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவப் பிரிவுகளால் நடத்தப்பட்டது.

இரண்டரை ஆண்டுகால போருக்குப் பிறகு ரஷ்யப் படைகளிடம் உக்ரைன் தொடர்ந்து அதன் நிலப்பரப்பை உக்ரேன் இழந்து வருகிறதும் உணமையே. இப்போர் ஏற்கனவே அரை மில்லியன் உயிரைப் பறித்துள்ளது. அத்துடன் ஜூலை 16 இல், ஒரு புதிய சட்டம் உக்ரைனில் நடைமுறைக்கு வந்தது. அது 18 முதல் 60 வயதுக்குட்பட்ட மில்லியன் கணக்கான உக்ரேனிய ஆண்களை இராணுவ சேவைக்கு
கட்டாயப்படுத்தியுள்ளது.

நேட்டோ -ரஷ்யா நேரடி மோதல்:

உக்ரேனிய ஊடுருவலுக்கு அமெரிக்கா நேட்டோ ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவை இலக்கில் வைத்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பல இராணுவ வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

ரஷ்ய விமானத் தளங்கள் மற்றும் ரஷ்யாவிற்குள் ஆழமான பிற இலக்குகளைத் தாக்க அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அது இன்னும் அனுமதி வழங்கவில்லை.

கடந்த மே மாதம், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டேவிட் கேமரூன் ராய்ட்டர்ஸிடம், பிரிட்டன் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் ரஷ்ய எல்லையைத் தாக்க பயன்படுத்தலாம் என்று கூறினார்.

ஏப்ரல் மாதம், பைடென் நிர்வாகம் 190 மைல்களுக்கும் அதிகமான தூரத்தில் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேனுக்கு ரகசியமாக அனுப்பியதை உறுதிப்படுத்தியது. இந்த ஆயுதங்களை பயன்படுத்தி கடந்த மே மாதம் கிரிமியாவில் உள்ள விமானப்படை தளம் மீது உக்ரேன் தாக்குதல் நடத்தியது. அசோவ் கடல் பகுதியில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகத்தைத் தாக்கவும் இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்கா ரகசியமாக ஆயுதங்களை வழங்கியதை உறுதிப்படுத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், மார்ச் மாதத்தில், அவைகள் இப்போது உக்ரேனில் உள்ளன, சில காலமாக உக்ரேனில் உள்ளன என்று கூறினார்.

ஜூலை மாதம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரஷ்ய எல்லைக்குள் “எங்கும்” தாக்க அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனை அமெரிக்கா அனுமதிக்கிறது என்று வலியுறுத்தினார்.

இன்றுவரை, ரஷ்யாவிற்குள் ஆழமான தாக்குதல்களை நடத்த அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. எவ்வாறிருப்பினும், கூர்ஸ்க் தாக்குதல் மீதான தற்போதைய ஊடக பிரச்சாரம் மீண்டுமொருமுறை உக்ரேனை உசுப்பேத்தி விடும் உக்தியாகவே கருதப்படுகிறது.

கூர்ஸ்க் போர்க்களம்:

எண்பத்தொரு ஆண்டுகளுக்குப் முன்பு கூர்ஸ்க் நிலப்பரப்பின் ஒரு பகுதியில் ரஷ்யாவிற்கு எதிராக ஏவி விடப்பட்ட ஜேர்மன் கவச வாகனங்கள் அமெரிக்க வாகனங்களுடன் இணைந்து, உக்ரைன் சண்டையிட்டு வருகின்றது என்பது தான் இன்றைய நிலையாகும்.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் படைகள், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துடன் கூட்டு சேர்ந்து, நாஜி ஜேர்மனியின் படைகளை தீர்க்கமாக தோற்கடித்த போரே கூர்ஸ்க் (Kursk) போராகும்.

கூர்ஸ்க் டாங்கி போர் (Battle of Kursk) என்பது 1943 கோடையில் தென்மேற்கு ரஷ்யாவில் நாஜி ஜெர்மனி யுடன்- சோவியத் யூனியனின் படைகளுக்கு இடையேயான இரண்டாம் உலகப் போரின் கிழக்கு முன்னணிப் போராகும்.

இதன் இறுதி விளைவாக சோவியத்க்கு வெற்றி கிடைத்தது. கூர்ஸ்க் போர் என்பது போர் வரலாற்றில் மிகப்பெரிய (Battle of Tanks) டாங்கிப் போராகும். இப்போருக்கு முன்னர் நடந்த ஸ்டாலின்கிராட் போருடன், ஐரோப்பியப் போரின் அரங்கில் குறிப்பிடப்பட்ட இரண்டு திருப்புமுனைகள் ஏற்பட்டன.

நேட்டோ தயவில் உக்ரேன்:

தற்போதய கூர்ஸ்க் தாக்குதல் நேட்டோவின் கீழ் உக்ரேனுக்கான மேற்கத்திய ஆதரவினையும், ஆயுத தளவாட வழங்கலை மறுசீரமைத்துள்ளமை தெளிவாக தெரிகிறது. அத்துடன் நூறாயிரக்கணக்கான நேட்டோ துருப்புக்களை முழு அளவிலான போரில் ஈடுபடுத்துவதற்கான ஒரு உயர்நிலை தயார்நிலையில் வைக்க நேட்டோவின் படைகளை மறுசீரமைப்பதற்கான தொலைநோக்கு திட்டங்களையும் தற்போது செயல்படுத்தி வருகிறது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை உக்ரேனுக்கு மேலும் 125 மில்லியன் டொலர்கள் ஆயுதங்களை அனுப்புவதாக அறிவித்துள்ளது.

போர் ஆய்வுக்கான பயிலகத்தின் கூற்றுப்படிடாங்கி எதிர்ப்பு அமைப்புகள்; ரொக்கட் ஏவிகள், ஒளியியல்-கண்காணிப்பு, டாங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள்; பல்நோக்கு ரேடார்கள்; பல்நோக்கு சக்கர வாகனங்கள்; சிறிய ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் கூடுதல் ஆயுத உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகள் என்பன அவற்றில் அடங்குகின்றன.

கூர்ஸ்க்கில் மிகப் பெரிய ஊடுருவல்:

கடந்த 6/8/24 செவ்வாய்க்கிழமை அதிகாலை, உக்ரேனிய படைகள் ரஷ்ய பிராந்தியத்திலுள்ள எல்லைப் பகுதியான கூர்ஸ்க்கில் மிகப் பெரிய ஊடுருவலைத் தொடங்கின. ரஷ்ய இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த தாக்குதலில் உக்ரேனிய ஆயுதப் படைகளின் ஒரு பிரிவிலுள்ள 1,000ம் துருப்புக்களுடன், ஏழு டாங்கிகள் உட்பட 50 கவச வாகனங்கள் ஈடுபட்டன.

ரஷ்ய – உக்ரேனிய துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் எல்லைக்கு வடக்கே 7 கிலோமீட்டர் வரை நடந்தன. ஐரோப்பாவிற்கு விநியோகிக்கப்படும் ரஷ்ய எரிவாயு வழங்கும் சுட்ஜா நகரில் உள்ள ஒரு எரிவாயு அளவீட்டு நிலையத்தை உக்ரேனிய துருப்புக்கள் குறிவைத்துள்ளன என்றும் தெரிவித்தன.
ஆயினும் புதன்கிழமை மாலைக்குள் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ரஷ்ய அரசாங்கம் அறிவித்தது. இருப்பினும், கூர்ஸ்க் பிராந்தியத்தில் அவசரகால நிலை இன்னும் நடைமுறையில் உள்ளது.

அப்பகுதியை இலக்கு வைத்து உக்ரேனிய ஆயுதப் படைகள் நடத்திய குறைந்தது ஏழு ஏவுகணைகளை ரஷ்ய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின.

ஆறு குழந்தைகள் உட்பட 31 குடிமக்கள் காயமுற்றிருப்பதை ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், ரஷ்ய ஊடகங்கள் பல துணை மருத்துவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.