மைத்திரியும் தனி வழியில்
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கத் தீர்மானிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் மற்றும் கட்சித் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக தான் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என்று அறிக்கையொன்றை வெளியிட்டு மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கத் தீர்மானிக்கவில்லை. இந்நிலையில் சில ஊடகங்களும், அரச மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் சிலரும் என்னைப் பற்றி வெளியிடும் தகவல்கள் முற்றிலும் பொய்யாகும்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவும் உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பில் இன்னும் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படவில்லை. கட்சியின் முழு அதிகாரங்களும் கட்சித் தலைவருக்கே உள்ளது. இவரை தவிர கட்சியின் வேறு எவராலும் முன்னெடுக்கப்படும் நியமனங்கள் மற்றும் தீர்மானங்கள் செல்லுபடியற்றவையே என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்துள்ளதாக வெளியாகிய செய்திகளை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்காரால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பில், முன்னாள் ஜனாதிபதியுடன் கூட்டு சேர்வதற்கோ அல்லது அவ்வாறான ஆதரவைப் பெறுவதற்கோ ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அவசியம் ஏற்படவில்லை என மரிக்கார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமான தோல்வியை எதிர்நோக்கி, வெறிபிடித்துள்ள அரசாங்கத்திற்கு சார்பான பிரசாரக் குழுக்கள் பொய்யான செய்திகளை உருவாக்கி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.