முச்சந்தி

தமிழ் பொதுவேட்பாளரினால் தென்னிலங்கை அச்சமடைந்துள்ளது 

எம்மவர்களைக் கொண்டே எம்மைப் பிரித்தாண்டு எமது ஒற்றுமையை சிதைத்து,எமது அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைத்து எம்மீது மீண்டும் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதற்கு எம்மிடமே ஆணை பெறுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். எனவே நாம் எம்மை பலியிடத் துடிக்கும் சக்திகளைப் புறந்தள்ளி அவர்களின் விருப்பம் நிறைவேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஈழ மக்கள்புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

அண்மையில் சுமந்திரன் எம்.பி.வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு பதிலளித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக அதன்முக்கிய வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸ்ஸநாயக்க போன்றோர் அடிக்கடி வடக்கு-கிழக்குக்கு வருவதும் அங்குள்ள பல்வேறு கட்சிகளையும் தனிநபர்களையும் சந்தித்துப் பேசுவதும் இப்பொழுது கிரமமாக நடைபெற்று வருகின்றது.

இதற்கு மேலதிகமாக தமிழர் தரப்புகளை கொழும்புக்கு வருமாறு அழைத்து அவர்களைச் சந்திக்க விரும்புவது ஒருபுறமும் சுமந்திரன்,சாணக்கியன் போன்றோர் இவர்களைத் தேடித்திரிந்து சந்திப்பது இன்னொருபுறமுமாக அரசியல் நகர்த்தலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுமந்திரன் அண்மைக்காலங்களில் மீண்டும் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கின்றார்

தமிழ் பொதுவேட்பாளரினால் அச்சமடைந்துள்ள தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பலமுனைகளிலும் காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுமந்திரன் தனிநபராக தனது கட்சியினரின் ஒப்புதலோ அல்லது தமிழ் மக்களின் ஒப்புதலோ இல்லாமல் தான் ஜனாதிபதியுடன் பேசுகிறேன் என்றுகூறுவதும் 13 ஐ அவர் முழுமையாகத் தந்துவிடப்போகிறார் என்று சாரப்பட கருத்துகளை வெளியிடுவதும் தேர்தலில் மக்களை பிழையான பாதைக்கு இட்டுச் செல்வதற்கான ஒரு முயற்சியாகும்.

தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த ஜனாதிபதித் தேர்தல் களத்தைப் பாவிக்க வேண்டும் என்றஒரே காரணத்திற்காக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதே தமிழர் தரப்பின்நோக்கம். ஆனால் அதனை எதிர்த்து நிற்பது போன்ற தோற்றத்தைக் காட்டி நிற்கும் சுமந்திரன் தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை முன்னிறுத்தியே இந்த பேச்சு வார்த்தைகளை நடத்திவருகின்றார்.

சுமந்திரனுக்கு பேச்சுவார்த்தைகள் தொடர்பாக குறைந்தபட்ச அனுபவங்களாவது இருக்கும் . மகிந்த ராஜபக்ச தரப்புடன் 17 சுற்றுப் பேச்சுகள் நடத்தப்பட்டு அவை எவ்வாறுதோல்வியில் முடிந்தது என்பது அவருக்குத் தெரியும். இதே போன்று நல்லாட்சி காலத்தில் இதே ரணில்விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசியல் சாசனத்திற்காக 4வருடங்கள் பேசி அது எவ்வாறுதோல்வியில் முடிந்தது என்பதும் அவருக்குத் தெரியும்.

அதன் பின்னர் ரணில் விக்கிரசிங்க ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் தயாரா என்று கேட்டபொழுது மகிந்த ராஜபக்ச உட்படஅனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் அதன் பின்னர் அது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதே காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் வடக்கு-கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடக்கும்வரை ஒரு இடைக்கால சபையை உருவாக்கும்படியும்அதற்கான முழு ஏற்பாடுகளையும் அவருக்கு சமர்ப்பித்தும்கூட அது தொடர்பாகவும் எவ்வித நடவடிக்கையும்எடுக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்ற சமயத்திலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் இலங்கை வந்த சமயத்திலும் 13 ஐ முழுமையாக நிறைவேற்றும்படி வற்புறுத்தியும் கூட அப்பொழுதும் எதுவும் செய்யவில்லை. கடந்த 2 வருடங்களாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகஇருக்கின்ற ரணில் விக்கிரசிங்கவால் அரசியல் சாசனத்தில் காணப்படும் 13 ஆவது திருத்தத்தில் உள்ள ஒரு பகுதியைக்கூட நிறைவேற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாத நிலையில் சுமந்திரன் போன்றோர் தொடர்ச்சியாக ரணிலை சந்திப்பதும் மாகாணசபை அதிகாரங்கள் அனைத்தையும்அவர் கொடுப்பார் போன்ற அறிக்கையை வெளியிடுவதும் தமிழ் மக்களை தவறான பாதைக்கு வழிநடத்தும் ஒருமுயற்சி .

முன்னர்13 ஐ முற்று முழுதாக எதிர்த்து நின்ற சுமந்திரன் இப்பொழுது 13 ஐ தான் ஏதோ பெற்றுக்கொடுப்பதுபோல் படம் காட்டுவதும் தமிழ் மக்கள் அரசியல் ஞானசூன்யங்கள் என்றும் அவர்களுக்கு எதுவும் புரியாது என்ற பாணியில் நடந்துகொள்வதும் அவரது அறிவுமுதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு.

கொரோனா காலத்திற்குப் பின்னர் நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்துவிட்டது என்றசூழ்நிலையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும்பன்முகப்படுத்தப்பட்ட நிதி நிறுத்தப்பட்டது. ஆனால் ஜனாதிபதி இப்பொழுது தான் விரும்பும்எம்.பி.க்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தான் விரும்பியவாறு ஒதுக்கும் நிலையைக்காணமுடிகின்றது. இதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை இலகுவாகப் பெற்றுவிடலாம் என்று ரணில் கனவுகாண்பதாகவும் தோன்றுகின்றது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ஜெனிவாவிலும்சரி நியூயோர்க்கிலும் சரி சுமந்திரனின் நடவடிக்கைகள்என்பது தமிழ் மக்களது கோரிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிராகவே இருந்திருக்கின்றது.இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறுவதும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துவிட்டதுஎன்று கூறுவதும் தொடர்ந்து அரசாங்கத்திற்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுப்பதிலும் அவர் முன்னின்றுசெயற்பட்டுள்ளார் . இவை அனைத்தையும் புரிந்துகொள்வதினூடாக நாம் ஏன் தமிழ்பொது வேட்பாளரை களமிறக்குவது என்ற முடிவை எடுத்தோம் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.