இந்தியாவுக்கு காணிகளை விற்காதே முத்து நகரில் மக்கள் போராட்டம்
திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனங்களுக்கு மக்களின் காணிகளை துறை முக அதிகார சபையினர் குத்தகைக்கோ அபகரிப்பு செய்யவோ விடக் கூடாது என வலியுறுத்தி மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவிற்கு காணிகளை விற்காதே எங்கள் நிலம் எங்களுக்கு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி முத்து நகரில் குறித்த பகுதி மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கப்பல் துறை , முத்து நகர் போன்ற பகுதியில் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர் இக் காணிகள் இலங்கை துறை முக அதிகார சபைக்கு சொந்தமானது என அதனை வெளிநாடுகளுக்கு தாரைவார்க்க வேண்டாம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது இருந்த போதிலும் குறித்த பகுதிக்குள் மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க முடியாது என திருகோணமலை நீதிமன்ற நீதவானால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என சீனக்குடா பொலிஸார் நால்வர் அடங்கிய பெயரை குறித்து தடை உத்தரவை வழங்கியுள்ளதாக குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் தெரிவித்தார்.