2023ஆம் ஆண்டு மாத்திரம் 230,000 கடவுச்சீட்டு விநியோகம்: துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தின் போது கண்டறிவு
குடிவரவு மற்றும குடியகல்வு திணைக்களத்தினால் கடந்த 2023ஆம் மாத்திரம் ஒரு மில்லியன் வரையிலான கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்தவகையில், 2023ஆம் ஆண்டு 230,000பேர் மட்டுமே வெளிநாடு பயணத்தை மெற்கொண்டுள்ளதாக பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற திறந்த மற்றும் பொறுப்புடைமை அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தின் போது இது தெரியவந்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய 2023 இல் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றில் 23 விகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் மீதமுள்ள 77விகித கடவுச்சீட்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
இந்தியா மற்றும் நேபாளத்திற்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள தடைகள் உடனடியாக நீக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணம் செலுத்தி கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வது மக்களின் உரிமை என்பதால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில், கோரப்பட்ட கடவுச்சீட்டுகளை வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புதிய ‘குடிவரவு’ சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக் கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டது.
இதன்போது இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், ஒக்டோபர் மாத இறுதிக்குள் 50 இலட்சம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.