சர்வதேச சமூகத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீற முடியாது
தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் திறைசேரி ஆகியவற்றினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதற்காக திறைசேரி சமர்ப்பித்த பரிந்துரையையும் சர்வதேச நாணய நிதியம் (IMF)முன்வைத்த மாற்றுப் பரிந்துரையையும் பரிசீலித்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, வரி எல்லையை விரிவுபடுத்துவதற்கும் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்திருக்கும் பரிந்துரைகள் அறிஞர்கள், நடுத்தர வர்க்க சமூகத்திற்கும் நன்மை பயப்பதாக அமையும் என்பதால் அது தொடர்பில் கவனம் செலுத்தியள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் இலங்கையின் உயர்கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் விரிவான சீர்திருத்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற ‘இலங்கையின் உயர்கல்வியை அபிவிருத்தியடைந்த தேசத்திற்கு மாற்றியமைத்தல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் அரச பல்கலைக்கழகங்களுக்கு சுதந்திரமாக செயற்படும் திறனை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
“இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன், நாட்டின் பொருளாதார நிலை குறித்த முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்றேன். அங்கு வெளிப்படுத்தப்பட்டபடி, எதிர்காலத்தில் சாதகமான சில செய்திகளை செவிமடுப்பீர்கள். வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களை தக்கவைக்கவும் இது உதவும் என்பதை குறிப்பிட வேண்டும்.
நமது அமைச்சர்கள் காட்டிய திறமையால், முதல் ஆண்டிலேயே நெருக்கடியிலிருந்து மீண்டு வர முடிந்தது. நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டின் பொருளாதாரத்தை புதிதாக கட்டியெழுப்பினோம். உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் ஏற்கனவே உடன்படிக்கை எட்டியுள்ளோம். அந்த ஒப்பந்தங்களில் பல முன்மொழிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்கள் குறிப்பிடும் அளவுகோல்களுக்குள் நாங்கள் செயல்பட வேண்டும்.
உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவிலுள்ள 17 நாடுகள், சீனா எக்ஸிம் வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி உட்பட மொத்தம் 21 பங்குதாரர்களுடன் உடன்பாடு காணப்பட்டுள்ள பொருளாதார வரையறைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு எங்களுக்கு ஒரு வருடம் ஆனது. இந்த அளவீடுகளை மாற்ற முடியாது.
முதலில், 2025-2032க்குள் முதன்மை வரவுசெலவுத் திட்டத்தில் 2.3% உபரியாக பேண வேண்டும். தற்போது, நாங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6% ஆக இருப்பதோடு 2.3% உபரியை இலக்காகக் கொண்டு நமது வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்க வேண்டும். 2032 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுக் கடன் 95% ஆகக் குறைக்கப்பட வேண்டும். தற்போது 111% வீதமாக அது உள்ளது. 2032 ஆம் ஆண்டில், மொத்த நிதித் தேவைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 13% சதவீதமாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் அது தற்போது 27.8% ஆக உள்ளது.
அதன்படி, அதை பாதியாக குறைக்க வேண்டும். தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2% உடன் ஒப்பிடும்போது வெளிநாட்டு கடன் சேவை 1.3% ஆக குறைக்கப்பட வேண்டும். 2025 ஆம் ஆண்டில், வரி வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% ஐ எட்ட வேண்டும், அதே நேரத்தில் நாம் தற்போது 9.5% ஆக இருக்கிறோம். மேலும், 2028ம் ஆண்டுக்குள் நமது வெளிநாட்டு கையிருப்பு 15 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது எங்களிடம் 5.6 பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பு உள்ளது. பணவீக்கம் 5% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது மற்றும் திறைசேரி பிணையின் அளவு 75% க்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த இரண்டு இலக்குகளையும் நாங்கள் ஏற்கனவே அடைந்துவிட்டோம்.
மேலும் மூன்று மாதங்களுக்கு மேல் அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாமல் இருக்க முடியாது. மத்திய வங்கிக்கு பணத்தை அச்சிட அனுமதியில்லை. மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான இலாபகரமான விலைகள் பேணப்பட வேண்டும் .இலங்கை மின்சார சபை அல்லது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஏற்படும் எந்தவொரு நட்டத்தையும் திறைசேரிக்கு மாற்றுவதன் மூலம் அதனை ஈடுசெய்யப்பட வேண்டும். சமூகப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் நிதிகளுக்கு குறைந்தபட்ச செலவு வரம்புகள் பராமரிக்கப்பட வேண்டும். ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடுகளின்படி சமூக நலன்புரிப் பயனாளிகளின் எண்ணிக்கையை 16 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம். நாடு வங்குரோத்தடைந்த காலத்திலும், நாம் முன்பு வழங்கியதை விட அதிகமான சமூக நல உதவிகளை வழங்க முடிந்தது, மேலும் அந்த போக்கை நாம் தொடர வேண்டும். இந்த விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது .
எங்கள் கடன்வழங்குநர்கள் 10 பில்லியன் டொலர்கள் வரை கடன் நிவாரணம் வழங்க உடன்பாடு தெரிவித்துள்ளனர். சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் ஊடாக எமக்கு மூன்று ஆண்டுகளில் 2.9 பில்லியன் டொலர்கள் கிடைக்கிறது. ஆனால் நாம் செய்துகொண்ட உடன்படிக்கைகளின்படியே நாம் நடக்க வேண்டும். இதற்காகத்தான் பொருளாதார பரிமாற்ற சட்டத்தை கொண்டு வந்தோம்.
இலங்கையை ஏற்றுமதி சார்ந்த மற்றும் போட்டிப் பொருளாதாரமாக மாற்றுவதே எமது இலக்காக இருக்க வேண்டும். இப்போது நாம் வரி வரம்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்த ஆண்டு வலுவான பொருளாதாரச் செயல்பாடுகளை நாங்கள் பெற்றுள்ளோம், அடுத்த ஆண்டிலும் அதைத் தொடர எதிர்பார்க்கிறோம். மேலும், வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி கட்டமைப்பை மாற்றியமைப்பது குறித்து தற்போது பரிசீலித்து வருகிறோம்.
இது தொடர்பில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் திறைசேரி ஆகியவற்றினால் இரண்டு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 1.2 மில்லியன் வரி இல்லாத எல்லையைப் பராமரிக்கும் அதே வேளையில் வரி எல்லையை 5 இலட்சம் ரூபா முதல் 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா வரை பேணி, 36% உயர் வரி விகிதத்தை வைத்திருக்க வேண்டும் என்பதே திறைசேரியின் பரிந்துரையாகும்.
ஆனால் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய எதிர் முன்மொழிவில் வரியில்லா வரம்பை ரூ. 1.2 மில்லியனாக வைத்திருக்கவும் முதலாவது வரி வரம்பை 500,000 ரூபாவிலிருந்த ஒரு இலட்சமாக மாற்றவும் அனைத்து வரி வரம்புகளையும் ரூ. 720,000 வினால் உயர்த்தி ஆரம்ப வரம்பை 500,000 ரூபாவாக பேணி வரி விகிதம் 36% ஆக குறைக்க வேண்டும். அந்த பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இங்கு நாட்டிற்கும் மக்களுக்கும் மிகவும் சிறந்தது என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுக்க எதிர்பார்க்கிறோம்.
தற்போது, பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.அந்த வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த வேண்டும். மனித வளங்களை கொண்டு உச்ச பயனை அடைய வேண்டும். இதற்கு உயர்தரத்திலான கல்வி முறையொன்று தேவை. அதற்கான பாடசாலை கல்வி மற்றும் பாடசாலைக்கு பின்னராக கல்வி முறைமைகள் தொடர்பில் ஆராய்கிறோம்.
அதற்காக 500 தொழிற்பயிற்சி நிலையங்களையும் 09 மாகாண முகவர் நிலையங்களையும் ஒருங்கமைத்து தொழிற்கல்வி கல்லூரியாக மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளோம். “இணை பட்டங்கள்” வழங்கும் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பிலான பல்கலைக்கழகங்களை நிறுவுவது குறித்தும் சிந்திக்கிறோம்.
தொழில் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் ஏன் கற்பித்தீர்கள் என்று பல மாணவர்கள் கேட்கிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்க, இளங்கலை அல்லது முகாமைத்துவ டிப்ளோமாவுடன் வேலைவாய்ப்பு சார்ந்த “இணை பட்டம்” பெறுவதற்காக வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் நாம் ஆராய்கிறோம்.
இந்நாட்டின் பல்கலைக்கழகங்களை உயர்தரம் மிக்கதாக மாற்றுவதே எமது நோக்கமாகும். இதன்கீழ் அரச பல்கலைக்கழகங்களை தரமுயர்த்தி அவை சுயாதீனமாக இயங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்குவோம்.
மேலும், பல்கலைக்கழகங்கள் தங்களுக்கான நிதிகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு மாணவர்களிடம் கட்டணம் அறவிடும் அதேநேரம் உள்நாட்டு மாணவர்களுக்கு அரசாங்கத்தால் நிதி வழங்கப்படும் முறைமை தொடர்பிலும் பல்கலைக்கழகங்கள் ஆராயலாம்.
புதிய பல்கலைகழகங்களை நிறுவுகின்ற அதேநேரம், தற்போது இருக்கின்ற பல்கலைகழகங்களை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கிறோம். தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நான்கு புதிய பல்கலைக்கழகங்களை நிறுவவும், உயர்கல்விக்கான சர்வதேச நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்குமான திட்டங்கள் எம்மிடம் உள்ளன. இதனால் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பற்றாக்குறையும் ஏற்படலாம்.
பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்கக்கூடிய அரச சார்பற்ற பட்டம் வழங்கும் நிறுவனங்களும் நாட்டில் உள்ளன. நிதி மற்றும் முகாமைத்துவத்திற்கான பல்கலைக்கழகங்களுக்கு புதிய கட்டமைப்பு முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் பிராந்தியற்குள் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படும் உயர்கல்விக்கான தேவையை பூர்த்தி செய்வதற்கான மையமாக இலங்கையை மாற்றுவதே எமது இலக்காகும்.
கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பல திட்டங்கள் மற்றும் யோசனைகள் உள்ளன. நாம் தொடங்கிய செயல்முறையை தொடர்ந்தும் முன்னெடுத்து வெற்றியை நோக்கி செல்ல வேண்டும்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.