தாய்லாந்து என்ன நடக்கிறது?: ‘மக்கள் கட்சி’யாக உருவெடுத்துள்ள எதிர்க்கட்சி
கலைக்கப்பட்ட ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சி, மக்கள் கட்சி (People’s Party) எனப் புதுவடிவம் பெற்று, புதிய தலைமைத்துவத்துடன் தாய்லாந்து நாடாளுமன்றத்தில் ஆகப் பெரிய கட்சியாக உருவெடுக்க முனைகிறது.
கடந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றது ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சி. ஆயினும், ஆட்சியமைக்கவிடாமல் அது தடுக்கப்பட்டது. அத்துடன், அரசியலமைப்பு நீதிமன்றத்தால் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 7) அக்கட்சி கலைக்கப்பட்டது.
அவமதிப்பிலிருந்து அரச குடும்பத்தைப் பாதுகாக்கும் ஒரு சட்டத்தைத் திருத்துவதற்கு ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், அது ஜனநாயகத்தையும் அரசியலமைப்புவழி மன்னராட்சியையும் கீழறுத்துவிடலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்நிலையில், 37 வயது நத்தஃபோங் ருவெங்பன்யவுத் தலைமையிலான புதிய கட்சியில், ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சியின் 143 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளனர்.
மென்பொருள் நிறுவன நிர்வாகிப் பதவியைத் துறந்து, கடந்த 2019ஆம் ஆண்டு ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சியில் இணைந்தார் நத்தஃபோங்.
“‘மூவ் ஃபார்வர்டு கட்சியின் கருத்தியலைத் தொடர்ந்து முன்னெடுப்போம். மாற்றத்திற்கான அரசாங்கத்தை 2027ல் உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய, கட்சியினுடைய குறிக்கோள்,” என்று செய்தியாளர் சந்திப்பின்போது திரு நத்தஃபோங் சொன்னார்.
மேலும், அரச குடும்ப அவமதிப்பைத் தண்டனையாகக் குறிப்பிடும் 112ஆவது சட்டப் பிரிவை மாற்ற முனைவோம் என்றும் அதே நேரத்தில், அதன் தொடர்பில் கவனமாகச் செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அச்சட்டப் பிரிவின்படி, தாய்லாந்து அரச குடும்பத்தை இழிவுபடுத்தினால் 15 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
“மற்றவர்களை இழிவுபடுத்த அச்சட்டப் பிரிவு ஓர் அரசியல் கருவியாக இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில், 112ஆவது சட்டப் பிரிவை மாற்றுவதற்கு முன்மொழிவதாகக் கூறியுள்ளோம். ஆனால், இம்முறை கவனக்குறைவுடன் இருக்க மாட்டோம்,” என்றார் நத்தஃபோங்.
கணினிப் பொறியியல் பட்டதாரியான நத்தஃபோங், ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். அக்கட்சியின் மின்னிலக்கக் கொள்கைகளை அவரே வகுத்தார். அது, அக்கட்சியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்பட்டது.
முன்னதாக, ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சி கலைக்கப்பட்டதற்கு அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் சாடியது குறிப்பிடத்தக்கது.