வங்காளதேச இடைக்கால அரசுடன் தொடர்பில் உள்ளோம்; அமெரிக்கா
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, பதவியை ராஜினாமா செய்து விட்டு, டாக்காவில் இருந்து சகோதரியுடன் ஷேக் ஹசீனா வெளியேறினார். ஹசீனா ராஜினாமா செய்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வங்காளதேசத்தின் இடைக்கால அரசுடன் தொர்பில் இருந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “வங்காளதேச இடைக்கால அரசுடன் அமெரிக்க அரசு தொடர்பில் உள்ளது.
இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசின் பதவியேற்பு விழாவில் அமெரிக்க தூதர் கலந்து கொண்டார். வங்காளதேச மக்களுக்கு ஜனநாயகமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என இடைக்கால அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.