அமெரிக்கத் தேர்தல்; ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் முதல் கூட்டுப் பிரசாரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான திருவாட்டி கமலா ஹாரிஸ், துணை அதிபர் வேட்பாளரும் மின்னசோட்டா மாநில ஆளுநருமான திரு டிம் வால்ஸ் இருவரும் முதல்முறையாக இணைந்து ஒரே மேடையில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி, பென்சில்வேனியா மாநிலத்தின் ஃபிலடெல்ஃபியாவில் அவர்கள் பிரசாரம் செய்தனர்.
‘டெம்பிள்’ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
கூட்டத்தினரின் ஆரவாரத்துக்கிடையே திரு வால்ஸ், நெப்ராஸ்கா மாநிலச் சிற்றூரில் தாம் பிறந்து வளர்ந்ததையும் காற்பந்துப் பயிற்றுவிப்பாளராகவும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றிய பிறகு 24 ஆண்டுகாலம் ராணுவப் படைத் திரட்டுப் பிரிவில் (ஆர்மி நேஷனல் கார்ட்) பணியாற்றியதையும் எடுத்துரைத்தார்.
“என் மாணவர்கள்தான் என்னை துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட ஊக்குவித்தனர்,” என்றார் அவர்.
“பொதுநலத்துக்கான கடப்பாட்டையும் தனிமனிதனால் மாற்றத்தைக் கொண்டுவர இயலும் என்ற நம்பிக்கையையும் அவர்களுள் விதைக்க நான் முயன்றேன். அதே பண்புகளை அவர்கள் என்னில் கண்டார்கள்,” என்று திரு வால்ஸ் குறிப்பிட்டார்.
குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் சட்டத்தைக் கேலி செய்து, குழப்பத்தையும் பிரிவினையையும் விதைப்பதாகத் திரு வால்ஸ் சாடினார். கொவிட்-19 நெருக்கடியின்போது திரு டிரம்ப்பால் சரிவரச் செயலாற்ற முடியவில்லை என்றும் நாட்டின் பொருளியலை மிக மோசமான நிலைக்கு அவர் இட்டுச் சென்றதாகவும் திரு வால்ஸ் கூறினார்.
திரு வால்சின் உரைக்குமுன் பேசிய திருவாட்டி ஹாரிஸ், திரு வால்சுக்கு ஏற்கெனவே கணவர், தந்தை, ஆசிரியர், பயிற்றுவிப்பாளர், அனுபவமிக்க அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர், ஆளுநர் எனப் பல அடையாளங்கள் இருந்தாலும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்குப்பின் அமெரிக்காவின் துணை அதிபர் என்ற புதிய அடையாளமும் கிட்டும் என்று முன்னுரைத்தார்.
மக்களைத் தம் வயப்படுத்தி மிகப் பெரிய கனவுகளை நோக்கி இட்டுச் செல்லும் ஆற்றல் வாய்ந்தவர் திரு வால்ஸ் என்று திருவாட்டி ஹாரிஸ் கூறினார்.
பென்சில்வேனியா மாநிலம், ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.