வன்முறைகளால் பற்றியெரியும் பிரித்தானியா: கடும் நெருக்கடியில் அரசாங்கம்
13 ஆண்டுகளின் பின் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள மோசமான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக போராடி வருகின்றது.
இந்நிலையில், பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ள புகலிட கோரிக்கையாளர்களை இலக்கு வைத்து தீவிர வலதுசாரி கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை சவுத்போர்ட்டில் (Southport) கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பெண் குழந்தைகள் கொல்லப்பட்டதை அடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் வன்முறை வெடித்தது.
வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 400க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர் இஸ்லாமிய புகலிடக் கோரிக்கையாளர் என்று பரவிய தவறான வதந்திகளைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததாக கூறப்படுகின்றது.
இந்த வன்முறை சம்பவங்களின் போது, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், பொது சொத்துகள், கடைகள், கார்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், லிவர்பூல், மான்செஸ்டர் மற்றும் லீட்ஸ் போன்ற நகரங்களில் வன்முறை எதிர்ப்புகள் மற்றும் பொலிஸாருடன் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர வலதுசாரி கிளர்ச்சியாளர்கள், தஞ்சம் கோருவோரை குறிவைத்து குறைந்தது இரண்டு ஹோட்டல்களையாவது முற்றுகையிட்டு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, Rotherham அருகே புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக பயன்படுத்தப்படும் Holiday Inn Express அருகே நூற்றுக்கணக்கான மக்கள் கூடி போராடியிருந்தனர்.
இதன்போது பொலிஸார் மீது செங்கற்களை வீசி, பல ஹோட்டல் ஜன்னல்களை உடைத்து, தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களால், உள்ளூர் சமூகங்களுக்குள் பெரும் இடையூறு மற்றும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.