மீண்டும் எழுதப்பட வேண்டிய வங்கம் தராத வரலாறு !; ஐங்கரன் விக்கினேஸ்வரா
வங்க தேசத்தின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த தந்தை முஜிபூர் ரஹ்மானின் சிலைக்கு நேர்ந்த நிலையை இன்று சமூக ஊடகங்களில் பார்க்க கூடியதாக உள்ளது.
சிலைக்கு நேர்ந்த நிலை :
ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் தான் பங்களாதேஷ் நாட்டை உருவாக்கியவர். வங்கதேச விடுதலைக்கு காரணமான தேசத் தந்தை எனப் போற்றப்பட்டவர். ஆனால், வங்கதேசம் விடுதலையான சில ஆண்டுகளிலேயே முஜிபுர் ரஹ்மானும் அவரது குடும்பத்தினரும் சொந்த நாட்டு இராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டனர்.
அப்போது ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். தற்போது ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் சொந்த நாட்டு மக்களின் புரட்சியால் நாட்டை விட்டே தப்பி ஓடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை பங்களாதேஷில் இராணுவ ஆட்சி என தளபதி வாக்கர் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து இராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.
பங்களாதேஷில் அனைத்து பாடசாலை, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, அந்நாட்டில் இடைக்கால அரசை இராணுவம் அமைப்பதாக இராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவோம். கடினமான சூழலில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். பங்களாதேஷை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தஞ்சமடைந்திருப்பதாக அசல் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது தொடர்பில் அந்நாட்டு மத்திய அரசு எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
பங்களாதேஷில் ஏற்பட்ட வேலையின்மை அதிகரிப்பு, இராணுவ குடும்பங்களுக்கு மாத்திரம் 90 சதவீதமான ஒதுக்கீடுகள் உள்ளிட்ட காரணமாக மாணவர்கள் மற்றும் படித்த பட்டதாரிகளால் போராட்டம் வெடித்தது.
அடிப்படை மதவாத பின்னணி:
வங்கதேச சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வரும் முப்பது சதவீத இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக 2024 ஜூலை இறுதியில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் உர வாக்கப்பட்ட கலவரத்தில் கிட்டத்தட்ட இருநூறுபேர் கொல்லப்பட்டனர்.
மாடவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தது. 93 சதவீத இடங்கள் திறமையின் அடிப் படையில் நிரப்பப்படும் எனவும் அறிவித்தது.
உச்ச நீதிமன்ற அறிவிப்பு வந்து இரு வாரங்களில் ஆகஸ்ட் நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட் டம் வெடித்தது.
இந்த கலவரம் உண்மையில் மாணவர்களால் நடத்தப் படவில்லை. நாட்டில் உள்ள மதவாதிகளால் தூண்டிவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நடத்திய நியாயமான போராட்டங்களில், தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற குழுக்களுடன் பேகம் கலிதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பி.என்.பி ) உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் இணைந்து இந்த கலவரத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில் வங்கதேச தொழிலாளர் கட்சியும் (WPB), கம்யூனிஸ்ட் கட்சியும் (CPB) ஞாயிற்றுக்கிழமையன்றே வன்முறையாளர்களுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வங்கதேச அரசை அந்நாட்டு ராணுவம் பொறுப்பேற்றுள்ளதுடன்,
இடைக்கால அரசாக ராணுவம் செயல்படும் என்றும் புதிய அரசை அமைக்க ராணுவம் உதவும் எனவும் ராணுவத் தளபதி வாக்கர் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார்.
வங்கதேசம் பெருமைகளுடன் திகழும் இந்த மக்களாட்சி நாடு, தற்போது பற்றி எரிந்து வருகிறது. இயற்கையின் பெரும் வளங்களையும் வீர தீரம் மிக்க வரலாறையும் தன்னகத்தே கொண்டுள்ள தெற்காசிய நாடு.
தற்போது வங்கதேசம் வன்முறைகளால் பற்றி எரிகிறது. இந்தப் பரபரப்புக்கெல்லாம் காரணம், மாணவர் உரிமைப் போராட்டமே ஆகும். மாணவர் போராட்டத்தால் வெடித்த தாக்குதலும், இதைத் தொடர்ந்த வன்முறையுமே முக்கிய காரணமாகும்.
வங்கப் பிரிவினையின் பின்னரான புதிய புரட்சி :
1971 இல் இனி கிழக்கு பாகிஸ்தான் அல்ல, சுதந்திர வங்கதேசம் என இன்றைய பங்களாதேஷ் விடுதலை அடைந்தது. இந்திய வரைபடத்தில் பார்த்தால், இந்தியாவுடன் சேர்ந்தே இருக்கும் ஒரு மாநிலம் போலவே தெரியும். மேற்கு வங்கம் என்ற மாநிலத்தின் பெயரே, வங்கப் பிரிவினையின் பின்னர் பங்களாதேஷ் விடுதலை பெற்றது வரலாறு.
இந்தப் போராட்டத்தை ஆதரித்தது இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு. விடுதலைப் போருக்காக படைகளை அனுப்பியது. 1971 டிசம்பர் 16 ல் இந்தியா மற்றும் முக்தி – பாஹினி கூட்டுப்படைகளின் முன்பு சரணடைந்தார் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல். இந்தப் போரின் முடிவு, வங்கதேசம் என்ற புதிய தேசம் உருவாக வழிவகுத்தது.
இந்தப் போரில் 5 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டது. ஏராளமானோர் காணாமல் போயினர். விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தோரின் தியாகத்தைப் போற்றும் விதமாக, அவர்களின் சந்ததிகளுக்கு வேலைவாய்ப்பில் 30 வீத இடஒதுக்கீடு வழங்கியது வங்கதேசம் அரசு. பின்னர் 2018 ல் வெடித்த மாணவர்கள் புரட்சியின் காரணமாக, இந்த இட ஒதுக்கீட்டு முறை ரத்து செய்யப்பட்டது.
நாட்டுக்காக தியாகித்தவர்களை கௌரவிக்கும் வண்ணமே இந்த இட ஒதுக்கீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இதன் விளைவாக மாணவர்களின் போராட்டங்களால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வங்கப் பிரிவினையின் பின்னரான புதிய புரட்சி போல தற்போது நிகழ்ந்துள்ளமை வரலாற்றின் புரட்சியல்ல, வெறும்
பிறழ்ச்சியாகவே தென்படுகிறது. வங்க தேச தந்தை முஜிபூர் ரகுமானின் சிலைக்கு நேர்ந்த நிலையை பார்க்கையில் இந்த போராட்டங்களின் பின்னணியில் பாரிய வெளிநாட்டு சக்திகளின் கைங்கர்யமோ எனவும் ஐயப்பட வேண்டியுள்ளது.