எழுத்தாளனின் முக்கிய கடமை சமூக சிந்தனையை மேம்படுத்துவதே!… பிரிஸ்பேர்ன் நூல் வெளியீட்டில் ஐங்கரன் விக்கினேஸ்வரா உரை !
பிரிஸ்பேர்னில் உள்ள மவுண்ட் ஒமாணி நூலக (Mt Ommaney Library) மண்டபத்தில் ஆகஸ்ட் நாலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன் ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்களின் வெளியீடு சிறப்புற நடைபெற்றது.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்துரையை ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் ‘தாமரைச் செல்வி’ திருமதி. ரதிதேவி கந்தசாமி அவர்கள் ஆற்றினார். அத்துடன் தமிழ் வாழ்த்துப் பாடலை பிரிஸ்பேர்ன் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் சிறப்புற பாடினர்.
இந்நிகழ்வின் தலைமையுரையை அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், குயின்ஸ்லாந்து கிளையின் மூத்த செயற்பாட்டாளர் திரு. செந்தில் குமரன் அவர்கள் ஆற்றினார். பின்னர் பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை இலக்கிய ஆர்வலர் திரு. சிவா கைலாசம் நிகழ்த்தினார்.
அதன்பின் ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை டாக்டர். துஷ்யந்தன் திசைநாயகம் அவர்கள் ஆற்றினார். இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை திரு. ரஜினிகாந்த் ஜெயராமன் அவர்கள் தமிழக இலக்கிய ஆர்வலாராக இருப்பினும், ஈழத்து ஊடகவியலைப் பற்றி சிறப்புற உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வினை பிரிஸ்பேர்ன் சுதா சிறப்புற தொகுத்து அளித்தார்.
அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், குயின்ஸ்லாந்து கிளையின் அனுசரணையில் நடைபெற்ற
இந்நூல்கள் வெளியீடும் இலக்கிய அரங்கில் பெருந்திரளான பிரிஸ்பேர்ன் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் ஏற்புரையை நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்தினார். தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது, என்று எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா குறிப்பிட்டார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவின் ஏற்புரையில் அவர் பேசுகையில் கூறியதாவது, புத்தகம் வாசிப்பு என்பது மிக முக்கியம் ஆகும். புத்தகங்கள் நம்மை சரியான திசையில் அழைத்து செல்லும். படிக்க, படிக்க சிந்தனைகள் விரிவாகும். புத்தகம் படிப்பதனால் நமது எதிர்கால தலைமுறையினர் சரியான திசையில் அழைத்து செல்லப்படுவார்கள் என நம்பலாம்.
எழுத்தாளர்களின் எழுத்துக்கள் சமூக சிந்தனையை மேம்படுத்துகிறது. அத்துடன் சமூக மக்களின் நலனுக்காக எழுத்தாளர்கள் எழுத வேண்டிய கடமையும் உள்ளது, என்று எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா குறிப்பிட்டார்.
புலம்பெயர் மண்ணில் தமிழை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். நமது மொழி, கலாசாரம் அழிந்து போய் விடக்கூடாது. அதற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பு அவசியம்.
நமது ஈழத்து இலக்கியம், கருத்தாளமிக்க படைப்புக்கள் தமிழின் பெருமையை வெளிக்காட்டுகின்றன. அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது என இந்நிகழ்வில் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா பேசினார்.