முச்சந்தி

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சவம் (Photos)

இதிகாச சிறப்பு பெற்ற கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இன்று அதன் இரத உற்சவம் சிறப்பாக மக்கள் அலைக்கு மத்தியில், அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

 

இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வெளிவீதி பஞ்சமுக விநாயர் தேரில் ஆரோகணிக்க அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று பெண்கள்,ஆண்கள் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.

தேர் உற்சவத்தின்போது இரண்டு பருந்துகள் தேரினை வலம்வந்த காட்சி அற்புத காட்சியாக இங்கு பதிவுசெய்யப்பட்டது.

இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும்கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்துவருகின்றது.

அனுமன் இலங்காபுரியை எரித்தபோது தனது வாலினை நனைத்து கோபம் தனிந்த ஆலயம் என்ற இதிகாச புராணக்கதையினைக்கொண்டதாகவும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றுசிறப்பு காணப்படுகின்றது.
இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்குளத்தில் நடைபெறவுள்ளது.

                      

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.