ரணிலை ஆதரிக்கும் மொட்டு எம்.பி.க்கள் குழப்ப நிலையில்; பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியில் போட்டி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியில் போட்டியிட்டு எவ்வாறு வெற்றி பெறுவதென்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் அடுத்தடுத்த காலப்பகுதிகளில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற சென்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனினும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்களிடையே ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவானவர்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அல்லது தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவர்களில் மக்கள் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனநாயக இடதுசாரி முன்னணியை சேர்ந்த ஒருவர், ஐக்கிய மக்கள் கட்சியின் உறுப்பினர் ஒருவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 02 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 09 (நிமல் சிறிபால டி சில்வா கட்சி), புதிய கூட்டணி உறுப்பினர்கள் 05, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் என அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்
மேலும் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்தும் மற்றும் ஏனைய கட்சியில் போட்டியிட்டு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களில் ஈ.பி.டி.பி. கட்சிக்கு 02 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் 04 பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, மலையக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களென அனைவரும் இவ்வாறு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி மட்டத்தில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் மீண்டும் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறியாகியுள்ளது. அத்துடன் ஏனைய கட்சிகளில் போட்டியிட்டு இறுதியில் சுயாதீனமாக அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு தங்களின் எதிர்கால அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்கள் தங்களுடைய கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.