முச்சந்தி

கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர்கள்: இலங்கைக்கு அழைத்து வர இராஜதந்திர பேச்சுவார்த்தை

பெலாரஸ் நாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கையின் முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவர்கள் எனக் கூறப்படும் ‘கஞ்சிபானை இம்ரான், லொக்கு பெட்டி மற்றும் ரொட்டம்ப அமில’ ஆகியோரை உடனடியாக கொழும்புக்கு அழைத்துவர இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளியான “திவயின“ என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் சர்வதேச பொலிஸாரும் இணைந்து இந்த குற்றவாளிகளை அழைத்து வருவதற்கு தற்போது கலந்துரையாடி வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘க்ளப் வசந்த’ கொலையின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் இந்த மூன்று பாதாள உலக தலைவர்களும் பெலாரஸில் இருந்து பிரான்ஸுக்குத் தப்பிச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

‘க்ளப் வசந்த’ படுகொலைச் சம்பவத்தின் பின்னர், இந்த மூன்று பாதாள உலகத் தலைவர்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் சர்வதேச பொலிஸாருக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இராஜதந்திர மட்டத்தில் இந்த குற்றவாளிகள் தொடர்பில் தூதரகங்கள் ஊடாக அறிவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, அந்நாட்டு விமான நிலையத்தில் பெலாரஸ் பொலிஸார் லொக்கு பெட்டீயை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

லொக்கு பெட்டீ துபாயில் இருந்து பெலாரஸ் சென்று அங்கு ‘கஞ்சிபானை இம்ரானையும் ரொட்டம்ப அமிலவையும்’ சந்திக்க சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட லொக்கு பெட்டீ, பெலாரஸ் பொலிஸார் விசாரணையின் போது குற்றவாளிகளான ‘கஞ்சிபானை இம்ரான் மற்றும் ரொட்டம்ப அமில பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அப்போது சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீடும் பொலிஸாரால் சோதனையிடப்பட்டதுடன், பாதாள உலக தலைவர்கள் இருவரும் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பெலாரஸ் பொலிஸாரின் விசாரணையில், ‘கஞ்சிபானை இம்ரான் மற்றும் ரொட்டம்ப அமில’ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று குற்றவாளிகளும் தற்போது பெலாரஸ் பொலிஸ் சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு நீண்ட நாட்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்று பாதாள உலகக் குழு தலைவர்களையும் இலங்கைக்கு வரவழைத்து, அதற்கான சூழலை தயார் செய்து, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவை அங்கு அனுப்புவதற்கு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், பாதாள உலக தலைவர் ‘கஞ்சிபானை இம்ரான்’ கைது செய்யப்பட்டமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அவர் வேறு மாற்றுப் பெயர்களில் ஆஜராகியுள்ளாரா என்பதும் தற்போது புலனாய்வுத் துறையினரின் கவனத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.