அசாதாரண காட்சிகளை உலகம் காணும்; பதட்டத்தின் உச்சியில் மத்திய கிழக்கு!
தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.
பழிவாங்குவதாக சபதம் செய்யும் ஈரான் இன்று இரவு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழமைக்கு மாறாக ஈரானிய தொலைக்காட்சி அலைவரிசைகள் வழக்கமான நிகழ்ச்சிகளில் இருந்து இராணுவ அணிவகுப்புகளை ஒளிபரப்புவதற்கு மாறியுள்ளன, இது அதிகரித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
போர் அதிகாரங்களை வழங்கிய ஈரானின் உச்ச தலைவர்
இதற்கிடையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei), நிலைமையின் தீவிரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஜனாதிபதி மெசூட் பெசெஷ்கியானுக்கு (Mesoud Pezeshkian) போர் அதிகாரங்களை வழங்கியுள்ளார்.
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, பல நாடுகள் தங்கள் குடிமக்களை ஈரான் மற்றும் இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன.
மேலும் இஸ்ரேலியர்களை அவசரமாக வெளியேற்றுமாறு ஈரான் வலியுறுத்தியுள்ளது.
ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்த கமேனி உத்தரவிட்டதாக மூன்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்ததாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது இஸ்தான்புல், தெஹ்ரான் மற்றும் டெல் அவிவ் இடையேயான விமானங்கள் இரத்து செய்யப்பட்டமை உட்பட குறிப்பிடத்தக்க பதட்டங்களுக்கு வழிவகுத்தது.
அசாதாரண காட்சிகளை உலகம் காணும்
நிலைமைகள் இவ்வாறு இருக்கையில், ஈரானிய தொலைக்காட்சியானது இராணுவ நடவடிக்கைகளை ஒளிபரப்புவதற்காக அதன் வழக்கமான ஒளிபரப்பு நிகழ்வுகளை இரத்து செய்துள்ளன.
குறிப்பாக சனல் 3 இல் ஒளிபரப்பப்பட்ட நிகழ்வொன்றில் ஈரானிய அரசு தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர்,
“வரவிருக்கும் மணிநேரங்களில், அசாதாரண காட்சிகள் மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்களை உலகம் காணும்” என்று கூறினார். இதற்கிடையில், பிராந்தியம் முழுவதும் வணிக விமானங்கள் இரத்து செய்யப்பட்டள்ளன.
இஸ்ரேலின் விமான நிலைய அதிகார இணையதளம் செயலிழந்ததாக இஸ்ரேல் சேனல் 12 சில மணி நேரங்களுக்கு முன்னர் தெரிவித்தது.
அமெரிக்காவின் முன்னெச்சரிக்கை
மற்றொரு வளர்ச்சியில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர், மத்திய கிழக்கிற்கு விமானம் மற்றும் போர்க் கப்பல்களை அனுப்ப உத்தரவிட்டார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“ஈரான் இஸ்ரேல் மீது பெரிய தாக்குதலை நடத்தும் திறன் மற்றும் தயாராக உள்ளது என்பதை நிரூபித்துள்ளது. பதிலடி கொடுக்கும் ஈரானின் எச்சரிக்கையை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
எச்சரிக்கையில் இஸ்ரேல்
ஈரான் பதிலடி கொடுப்பதற்கு தயாராகி கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.
இதற்கிடையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேசியுள்ளார்.
வெள்ளை மாளிகை, இஸ்ரேலின் பாதுகாப்பை “ஈரானின் அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் எதிராக” பாதுகாப்பதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியது.
பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் இருந்து சாத்தியமான தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க புதிய அமெரிக்க இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்து இருவரும் இதன்போது விவாதித்தனர்.