அமெரிக்க பத்திரிகையாளர் உட்பட பலரை விடுவித்த ரஷ்யா!; வெள்ளை மாளிகை தகவல்கள்
வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச் மற்றும் முன்னாள் அமெரிக்க கடற்பரை வீரர் பால் வீலன் ஆகியோரை ரஷ்யா விடுவித்துள்ளது என்று வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் அறிக்கையின்படி, ஐந்து ஜேர்மனியர்கள் மற்றும் ஏழு ரஷ்ய அரசியல் கைதிகள் உட்பட 16 பேரை ரஷ்யாவிலிருந்து மேற்கு நாடுகள் விடுதலை செய்துள்ளன.
விடுவிக்கப்பட்ட கைதிகள் ரஷ்யாவிலிருந்து துருக்கிக்கு வந்துவிட்டதாகவும், விரைவில் அவர்கள் அமெரிக்காவிற்குச் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையாளர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2023 இல் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
அதேநேரம், வீரர் பால் வீலனும் 2020 இல் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
எவ்வாறெனினும், இரு கைதிகளையும் “தவறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது.
இந்த நிலையில், மொஸ்கோ மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே விரிவான கைதிகள் இடமாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த விடுவிப்பு வந்துள்ளது.
ரஷ்யா, ஜேர்மனி மற்றும் மூன்று நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை கூறியது.
ஒரு வருடத்திற்கும் மேலாக இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் 24 கைதிகள் இருந்தனர்.
இதில் 16 பேர் ரஷ்யாவிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தடுத்து வைக்கப்பட்ட எட்டு கைதிகள் ரஷ்யாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.