காஸா பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: 15 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரையில் நடைபெற்று வருகின்றது.
காசாவை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரையில் 39 ஆயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர்.
மருத்துவமனை, பாடசாலைகள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்ற விதி இருந்தும், தொடர்ந்தும் இஸ்ரேல் படையினர் அதை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை உலக நாடுகள் கண்டித்து, போரை நிறுத்தும்படி வலியுறுத்தினாலும் இஸ்ரேல் அதை காதில் வாங்குவதாக இல்லை.
இந்நிலையில், காசாவிலுள்ள ஷெஜையா எனுமிடத்தில் பலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள பாடசாலையொன்றின் மீது நேற்று வியாழக்கிழமை இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 29 பேர் காயமடைந்துள்ளனர்.
இத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘குறித்த பாடசாலை வளாகத்துக்குள் இயங்கி வந்த ஹமாஸ் அமைப்பினரை குறி வைத்தே இத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் பொதுமக்களுக்கு பெரிதாக எந்த தீங்கும் நேராத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பொதுமக்கள் பயன்படுத்தும் உட்கட்டமைப்பு பகுதிகளில் ஹமாஸ் அமைப்பு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளை இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை என ஹமாஸ் அமைப்பு கூறி வருகிறது.