பொதுஜன பெரமுனவில் போட்டியிட பலரும் பின்னடிப்பு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளரை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ள போதும், அதற்கான ஆதரவு குறைந்துள்ளமையாலும் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமையாலும் கட்சி சார்பில் வேட்புமனுவை சமர்ப்பிக்க பலரும் தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வாரம் அறிவிக்கப்பட தயாராக இருந்த வேட்பாளர் அறிவிப்பு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஏற்பட்டுள்ள பாரிய பிளவுகளே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் தொண்ணூறு வீதமானோர் ஜனாதிபதியுடன் இணைந்துள்ளனர். மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறான காரணங்களால் பொதுஜன பெரமுனவிற்கான மக்கள் ஆதரவு மற்றும் அமைப்பு பலம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதி வேட்பாளராகக் காத்திருந்த சிலர் தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சகல சூழ்நிலைகளாலும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் மேலும் தாமதமாகியுள்ளது.
எனினும் வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்காக இறுதித் திகதி எதிர்வரும் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதால் அதற்கு முன்பதாக கட்சியின் வெட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவை எட்ட வேண்டிய நிலைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரரேரா உள்ளிட்ட ஐவரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் இவர்களிலிருந்து ஒருவரை வேட்பாளராக அறிவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.