இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரிடம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள இந்தியா: தமிழக மீனவர் உயிரிழப்பால் முற்றுகைப் போராட்டம்
நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான படகொன்றுடன் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் பயணித்த படகொன்று இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான படகொன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
அவர்களைக் கைது செய்வதற்கு இலங்கை கடற்படை முயற்சித்த போது, மீனவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் பயணித்த மீனவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் ஏனைய மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில், புதுடெல்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், மீனவர்கள் தொடர்பான பிரச்சினை மனிதாபிமான தன்மையுடன் கையாளப்பட வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் இருப்பதையும், அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சு இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த தமிழக மீனவர்களின் உறவினர்கள், இராமேஸ்வரம் பகுதியில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் துறைமுகத்தை முற்றுகையிட்டு அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.