கமலா ஹாரிஸ் இந்தியரா?… அல்லது கறுப்பினத்தவரா?… எனக்கு தெரியவில்லை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஜனாதிபதி ஜோ பைடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டதில் தொடங்கி, கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டமை வரையில் பல விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்த வண்ணமே உள்ளன.
அந்த வகையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் குறித்து சக போட்டியாளரான டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சையான ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.
சிக்காகோவில் இடம்பெற்ற தேசிய கறுப்பின பத்திரிகையாளர்கள் சங்க மாநாட்டில், கலந்துகொண்ட ட்ரம்பிடம் கறுப்பின வாக்காளர்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,
“கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தை மட்டும்தான் ஊக்குவித்து வந்தார். தற்போது தன்னை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார். அதனால் அவர் இந்தியரா? அல்லது கறுப்பரா? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நான் அவரை மதிக்கிறேன். ஆனால், அவரிடம் வெளிப்படைத் தன்மை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த பதிலுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதாவது,
“ஒரு கறுப்பின பெண்ணாக உங்களுக்கு போட்டியாக இருக்கிறார்…இது போன்ற பேச்சு அவமானமானது. ஒருவர் தன்னை எவ்வாறு அடையாளப்படுத்துகிறார் என்பது பற்றி கருத்து தெரிவிக்க யாருக்கும் உரிமையில்லை.
கமலா ஹாரிஸூக்கு மட்டுமே அதுகுறித்து பேச உரிமை இருக்கிறது. அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தாய் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறந்தவர்.
இந்தியா, ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்த முதல் அமெரிக்க துணை ஜனாதிபதியாக திகழும் கமலா ஹாரிஸ், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.