இலங்கை

ஜனாதிபதியின் வெற்றிக்கு அர்ப்பணிப்போம்: 116 பிரதிநிதிகள் உறுதிமொழி

பாரபட்சமின்றி நாட்டை புதிய கோணத்தில் முன்னோக்கி கொண்டுச் செல்லவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத்திய அரசாங்கம், 09 மாகாண அரசாங்கங்கள் உள்ளடங்களாக 10 அரசாங்கங்களின் கீழ் உள்ள அனைவருக்கும் பொறுப்புகளை வழங்கி நாட்டை முன்னேற்றுவதாக உறுதியளித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபைகளின் முன்னாள் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு அர்ப்பணிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 116 மாகாண சபைகளின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

“நாட்டில் வளர்ச்சி கண்டுவரும் பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீற முடியாது. தேர்தல் நடத்தப்பட்டாலும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் கொலை அதிருப்தியளிப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் , ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஏனைய உலக நாடுகளில் ஏற்படக்கூடிய நிலைமைகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க தேவையான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

எனக்காக இங்கு வந்து என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. நாம் அனைவரும் 2022 ஜூலை மாதத்தில் வீடுகளை இழந்தோம். இந்த நாட்டுக்கு எதிர்காலம் இருக்காது என்றே மக்களும் நினைத்தனர்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்று பலரும் நினைத்தனர். ஏன் இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொண்டீர்கள் என்று சிலர் என்னிடம் கேட்டனர். இந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்று சொன்னேன். மொட்டுக் கட்சிக்கு அதற்கான அனுபவம் உள்ளதா என்று சிலர் கேள்வி எழுப்பினர். இருப்பவர்களை வைத்து வேலை செய்வதே சிறந்தது.

மாறாக புதியவர்களை வடிவமைக்க எமக்கு நேரம் இருக்கவில்லை. அதனால் இந்த பயணத்தை தொடர்வோம் என்றேன். இப்போது நல்ல குழுவொன்று உருவாகியுள்ளது.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என அனைவரும் ஒன்றிணைந்து முதலில் இந்த நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்கினோம். அன்று நாட்டில் பெரும் அச்சம் நிலவியது. எம்.பி.க்கள் வீதியில் கொல்லப்பட்டால் நாட்டின் நிலை என்னவாகும்? அப்படிப்பட்ட நிலையை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

நாட்டை வழமையான நிலைக்கு கொண்டு வரவும், வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்கவும் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனால் அந்த பணிகள் முடிந்துவிடவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின்படி நாம் செயல்பட வேண்டும். அதை உடைத்தால் நாடு மீண்டும் படுகுழியில் விழும்.

அவர்கள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே எமக்கு நிதி உதவிகளை வழங்குகின்றனர். நாமும் அதற்கு உடன்பட்டிருக்கிறோம். அதற்கமைய பயணிக்க வேண்டும். டிசம்பர் வரையில் போதுமான பணம் மட்டுமே எம்மிடம் உள்ளது. ஜனவரியில் சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றுமொரு ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டியுள்ளது.

அதனால் ஜனவரி பெப்ரவரிக்குள் அந்த பணம் கிடைத்துவிடும். ஆனால், இது குறித்து புதிதாக ஆராய நீண்ட காலம் தேவைப்படும். அதன் பின்னர் இந்த பணிகளை நிறைவு செய்ய ஒரு வருடமாவது தேவைப்படும். பணம் இல்லாமல் நாம் முன்னேற முடியாது. எனவே, இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து பணத்தைப் பெறுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

நாட்டிலுள்ள இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அவர்களுக்கு தொழில் வழங்க வேண்டும். வறுமையை ஒழித்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். அந்த நடவடிக்கைகளுக்காக நான் 09 மாகாண அரசாங்கங்கள் மற்றும் மத்திய அரசாங்க உள்ளடங்களாக 10 அரசாங்கங்களின் கீழ் உள்ள அனைவருக்கும் பொறுப்புகளை வழங்குவோம்.

புதிய கோணத்தில் முன்னோக்கி கொண்டுச் செல்லவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த பயணத்தை தொடர்வோம். அனைவரும் இணைந்து முன்னேறுவோம்.

2022 இல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் பெரும்பான்மையானவர்கள் என்னை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். அந்த ஆதரவு இல்லாவிட்டால் இன்று நாடு இந்த நிலையை அடைந்திருக்காது. எனவே, அந்த தீர்மானத்தை எடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூறுகிறேன். அவரின் தீர்மானம் நாட்டைக் காப்பாற்றியது. கட்சிகளை பிளவுபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. முடிந்தவரையில் கட்சிகளை பாதுகாத்துக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும்.

இன்று உலகில் பல பிரச்சினைகள் உள்ளன. ஹமாஸ் தலைவர் இன்று காலை தெஹ்ரானில் கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலை கண்டிக்கிறேன். காஸா போர் குறித்து ஒரு தீர்வை எட்டியிருக்கலாம் அவ்வாறான நிலையில், இவ்வாறான பிரச்சினைகளால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பிரச்சினைகள் தீவிரமடையும். அதில் எமக்கு உடன்பாடு இல்லை. ஒரு நாடாக வாழ்வதற்கான உரிமையை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.

அந்த சர்வதேச பிரச்சினை காரணமாக மேலும் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. போர் நடந்தால் எண்ணெய் விலை என்னவாகும்? ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அனைவரையும் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர வேண்டி வரும். 1991 இல் குவைட் கைப்பற்றப்பட்ட போது அவ்வாறான நிலைமை காணப்பட்டது. அப்போது வருமானத்தை இழக்க நேரிட்டது. வளர்ந்து வரும் நாடாக இலங்கைக்கு அந்த நிலையை எதிர்கொள்வது கடினமாகும்.

இது தொடர்பில் ஏனைய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் கலந்துரையாடுமாறு வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்தேன். இந்நிலைமையைக் கட்டுப்படுத்த கூட்டாகச் செய்யக்கூடிய வேலைத்திட்டம் குறித்து ஆலோசிக்கிறோம். நமது சபாநாயகர் தற்போது தெஹ்ரானில் இருக்கிறார். அவரை விரைவில் அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த சூழ்நிலைகளுக்கு நாம் இப்போதே தயாராக வேண்டும். அதற்காக பிரதமர், வெளிவிவகார அமைச்சர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஆகியோர் தலைமையிலாக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்படக்கூடிய பொருளாதார விளைவுகள் குறித்து ஆராய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் நிதி அமைச்சு, எரிசக்தி அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

எனவே, எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது. மேடையில் இருந்து கூச்சலிடுவதில் அர்த்தமில்லை. பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னேற வேண்டும். சர்வதேச ஒப்பந்தங்களை திரும்பப் பெற முடியாது. அதை பாதுகாத்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் வந்தாலும் அது நமது கடமையாகும்.

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும். அந்தத் தேர்தலை 1988 முறைப்படி நடத்த எதிர்பார்க்கிறோம். இது குறித்து நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் பேசினேன். அவரும் இணக்கம் தெரிவித்தார். அந்தத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்காமல் மாகாண சபைகளுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். அனைவரும் அரசாங்கமாக செயலாற்ற வேண்டும்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஒன்பது பேருடன், அரசாங்கத்தின் கீழ் நிதி அமைச்சர்கள் குழுவும் உள்ளது. அரச சபையொன்றையும் முன்மொழியவிருக்கிறோம். அதில் ஜனாதிபதி, பிரதமர், கட்சித் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்கள் அங்கம் வகிப்பர். 2017 ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தக் குழுவுக்கு வழங்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளின்படி 07 மாகாணங்களின் முதலமைச்சர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

தமிழ் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. பொலிஸ் அதிகாரம் பற்றி பின்னர் பேசலாம், இந்த நடவடிக்கைகளை இப்போது நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவித்துள்ளோம். விவசாயம் நவீனமயமாக்கல், பாடசாலைக் கல்வி, சுற்றுலாப் பொறுப்புகள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும். எம்மிடம் பெரிய பணிக்குழுவொன்று உள்ளது. இந்த 10 அரசாங்கங்கள் ஊடாக நாட்டை முன்னேற்றிச் செல்ல எதிர்பார்க்கிறோம்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.