ஹமாஸ் இஸ்மாயில் ஹனியே படுகொலை;… மொசாட்டின் பழிக்குப் பழி!… ஈரானில் வைக்கப்பட்ட இலக்கு!!!… ஐங்கரன் விக்கினேஸ்வரா
ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
ஈரானில் மெய்ப்பாதுகாவலருடன் அவர் தனது இல்லத்தில் குறிவைக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவலர் படை தெரிவித்துள்ளது. ஈரானில் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். தற்போது இச்சம்பவத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து வருவதாக ஈரானிய அரசு கூறியுள்ளது.
ஈரானில் படுகொலையான ஹமாஸ் தலைவர்:
இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை நாற்பது ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இதுவரை 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
குறிப்பாக பாலஸ்தீன போராளிகளைக் குறி வைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Hamas’ top political leader Ismail Haniyeh) கொல்லப்பட்டார்.
ஈரானின் புதிய அதிபராக தேர்வான மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார் இஸ்மாயில் ஹனியே. தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியது. இதில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர் என 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஹனியே படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஆயினும் பாலஸ்தீன போராளிகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் படைகளும், உளவு அமைப்பு மொசாட்டும் மிகத்தீவிரமாக வேட்டையாடத் தொடங்கி உள்ளன.
யாரிந்த இஸ்மாயில் ஹனியே:
இஸ்மாயில் ஹனியே கடந்த 2017 முதல் ஹமாஸின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.
அத்துடன் இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் போராளிக் குழுவின் நாடுகடத்தப்பட்ட அரசியல் தலைவராக இருந்து வந்தார். சமீபத்திய ஆண்டுகளில் கத்தாரில் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்.
தற்போதய போது இஸ்ரேல்-காசா போரில், அவர் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் ஒரு பேச்சுவார்த்தையாளராக செயல்பட்டார். அத்துடன் ஹமாஸின் முக்கிய நட்பு நாடான ஈரானுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டமை அரபுலகில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மொசாட்டின் பழிதீர்க்கும் படலம்:
இப் படுகொலைக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் சந்தேகம் உடனடியாக இஸ்ரேல் மீது விழுந்ததுள்ளது. ஹனியே மற்றும் ஹமாஸின் பிற தலைவர்களை அக்டோபர் 7 இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வண்ணம் கொல்ல இஸ்ரேல் உறுதியளித்தது.
ஆயினும் இக்கொலை எப்படி நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இஸ்ரேல் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால் அவர்களின் மொசாட் உளவுத்துறை நிறுவனத்தால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு அது பெரும்பாலும் உரிமை கோருவதில்லை.
இவ்வருட ஏப்ரலில் ஹனியே கத்தாரில் இருந்தபோது காசா பகுதியில் வான்வழித் தாக்குதலில் ஹனியேவின் மூன்று மகன்களையும் அவரது பேரக்குழந்தைகள் பலரையும் இஸ்ரேல் கொன்றது.
தற்போது லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு ஒரு உயர்மட்ட ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொசாட்டின் தப்பாத குறி:
சமீபத்திய ஆண்டுகளில் ஈரானிலும் பிற இடங்களிலும் பல ஹமாஸ் உயர்மட்ட படுகொலைகளை நடத்திய இஸ்ரேல், இதுவரையில்்ஹனியேவின் கொலை குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
2004 இல், இஸ்ரேல் காஸாவில் வான்வழித் தாக்குதலை நடத்தி, அப்போது ஹமாஸின் தலைவர் அப்தெல் அஜிஸ் ரந்திசி கொன்றது. அதே ஆண்டு, காசா நகரில் ஹமாஸ் போராளிக் குழுவின் நிறுவனர்களில் ஒருவரான அகமது யாசினையும் படுகொலை செய்தது.
தற்போது ஹனியே படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சில மணிநேரங்களுக்குப் முன்னர், இஸ்ரேலிய படைகள் செவ்வாயன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் மூத்த ஹெஸ்புல்லா தளபதி ஃபுவாட் ஷுகூரைக் கொன்றதாக ‘ஐடிஎஃப்’ தெரிவித்துள்ளது.
பழிக்குப் பழியாக கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு கோலன் ஹைட்ஸ் பகுதியில் ஒரு கால்பந்து மைதானத்தைத் தாக்கிய ராக்கெட் தாக்குதலுக்குபொறுப்பான தளபதியைக் குறிவைத்து கொன்றுள்ளது.
மத்திய கிழக்கில் போர்ப் பதட்டங்கள் அதிகரித்துள்ள வேளையில், விரைவில் பிராந்திய மோதலாக ஏற்படுமா என்று பல மேற்குலக நாடுகள் அஞ்சுகின்றன. குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள தலைவர்களும் அதிகாரிகளும் லெபனான், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள பிரதிநிதிகளை அணுகி பரந்த பிராந்தியப் போரைத் தடுக்க முயன்று வருகின்றனர்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா