நடுவானில் கையை பிடித்து இழுந்த பயணி: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பணிப் பெண்ணுக்கு நேர்ந்த சங்கடம்
குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் பயணி ஒருவரால் பணிப்பெண் ஒருவர் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறித்த பயணி விமான பணிப்பெண்ணின் கையை இழுத்து கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய பயணி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-230 (30) அதிகாலை 02.00 மணியளவில் குவைத் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது.
விமானம் புறப்பட்டு 03.30 அளவில் பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டு பின்னர் பரிமாறப்பட்ட வெற்று உணவுப் பெட்டிகளை அகற்ற ஆரம்பித்தனர்.
பயணிக்கு பரிமாறப்பட்ட வெற்று பெட்டிகளை விமானப் பணிப் பெண் அகற்ற முற்பட்ட போது, அந்தப் பணிப்பெண்ணின் கையை பிடித்து இழுத்து கடும் வார்த்தைகளால் திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி விமான ஊழியர்களுக்கு தெரிவிக்க விமான பணிப்பெண் நடவடிக்கை எடுத்ததுடன், அவர்களும் விமானிக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன் பிரகாரம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இது தொடர்பில் அறிவிக்க விமானி நடவடிக்கை எடுத்ததையடுத்து (30) காலை 08.45 க்கு விமானம் தரையிறங்கிய பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழு குறித்த பயணியை கைது செய்துள்ளனர்.
ஹொரணை, பொக்குனுவிட்ட வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பயணி மாரடைப்பு காரணமாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் விமான பணிப்பெண்ணும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பயணியின் மனைவி, தனது கணவரை விமான ஊழியர்கள் தாக்கியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.