மகிந்த அணியின் வேட்பாளரை அறிவிக்க பிரமாண்ட கூட்டம்; ஏற்பாடுகள் மும்முரம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிநிறுத்த உள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், தமது வேட்பாளரை அறிவிக்க பிரமாண்ட கூட்டமொன்றுக்கு பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்து வருவதாக அறிய முடிந்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இனி ஆதரவளிக்கப்போவதில்லை என அக்கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதால் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன,
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயரை சம்பிரதாய முறைப்படி அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் தொகுதி வாரியானக் கூட்டங்கள் மற்றும் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டதில் பொதுஜன பெரமுனவின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்ற கருத்தின் பிரகாரமே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
“போட்டியிடுவது என்று முடிவு செய்து அதை அறிவிக்கிறோம். அதன்பிறகு, வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு வெளிப்படுத்தி, எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
மிகக் குறைந்த நாட்களுக்குள் வேட்பாளரை அறிவிக்க உள்ளோம். அதற்காக பிரமாண்ட கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.