’22’ திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றம் வரும் போது சபையிலிருந்து வெளியேறுங்கள்
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்ய வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கோரியுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தமானது வாக்காளர்களைக் குழப்புவதற்கான முயற்சி எனவும், ஜனாதிபதித் தேர்தல் செயல்முறையை அது சிக்கலாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுமாயின் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அதற்கான திகதியை முடிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் சிலவேளைகளில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படலாம். எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திலிருந்து வெளி நடப்பு செய்தால் இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதை தடுக்கலாம்.எனினும் வெளி நடப்பு செய்யாது சபையில் இருப்பவர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவானவர்கள் என்றே கருதப்படுவர்.
ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்புத் தினத்துடன் முரண்படும் வகையிலான திகதியை ஜனாதிபதி நிர்ணயிக்கக்கூடும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.