கனடாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி: யாழ்ப்பாண இளைஞர் விமான நிலையத்தில் கைது
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் சென்ற நபரை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (06) இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்.
இவர் நேற்று (06) இரவு 07.20 மணியளவில் சவூதி அரேபியாவின் தமாம் நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-263 இல் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்தனர்.
இவருடைய கடவுச்சீட்டு, கனடாவில் விசா பெற்றுள்ள மற்றுமொரு இலங்கையருக்கு சொந்தமான கடவுச்சீட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
18 லட்சம் ரூபாயை தரகர் ஒருவரிடம் கொடுத்து, கடவுச்சீட்டில் தனது புகைப்படம் மற்றும் பிற அடிப்படைத் தகவல்களை இணைத்து இந்தக் கடவுச்சீட்டை போலியாகத் தயாரித்தது தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேகநபரின் பயணப் பையை சோதனை செய்த போது அதில் அவரது உண்மையான கடவுச்சீட்டு, போலி விமான டிக்கெட், போலி துபாய் குடியுரிமை விசா மற்றும் போலி குடியேற்ற முத்திரை ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.