எது நற்செய்தி? எது துக்கச் செய்தி?; பாராளுமன்றத்தில் ரணில்,சஜித் கேள்விக் கணை
நாட்டுக்கு எது நற்செய்தி? எது துக்கச் செய்தி? என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே பாராளுமன்றத்தில் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போது நற்செய்திகளாக கருதப்படும் விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்த நிலையில், அது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சனங்களை முன்வைத்து கருத்து வெளியிட்ட நிலையிலேயே இருவருக்கும் இடையே கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன.
எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் போது குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி நற்செய்திகள் என சில விடயங்களை குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரிடம் சில கேள்விகளை கேட்கின்றேன். நாட்டில் போசனைக் குறைபாடு அதிகரித்துள்ளமை நற்செய்தியா? துக்கச் செய்தியா? நாட்டின் கல்விமான்கள் நாட்டைவிட்டுச் செல்வது நற்செய்தியா? துக்கச் செய்தியா? வறுமைநிலை அதிகரிப்பு நற்செய்தியா? துக்கச் செய்தியா? தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழில் முயற்சியாளர்கள் வியாபாரத்தில் இருந்து விலகுவது நற்செய்தியா? துக்கச் செய்தியா? பாடசாலைகளில் பிள்ளைகள் மயங்கி விழுவது நற்செய்தியா? துக்கச் செய்தியா? கட்டிட நிர்மாண தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளமை நற்செய்தியா? துக்கச் செய்தியா? மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இப்போது ஒரு வேளை உணவை மட்டும் உண்பது நற்செய்தியா? துக்கச் செய்தியா? என கேட்கின்றேன் என்றார்.
இதனை தொடர்ந்து இது தொடர்பில் பதிலளித்த ஜனாதிபதி கூறுகையில்,
எதிர்க்கட்சித் தலைவர் சில கேள்விகளை கேட்டார். மந்த போசனையால் மாணவர்கள் வகுப்புகளில் மயங்கி விழுவது நற்செய்தியா? துக்கச் செய்தியா? என்று கேட்டார். அது துன்பச் செய்திதான் அதனால்தான் அஸ்வெசும கொடுப்பனவு, அரிசி கொடுப்பனவு, மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
அத்துடன் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக கூறினார். அது துக்கச் செய்திதான். அதனாலேயே ஒரு இலட்சம் பேருக்கு உறுமய வேலைத் திட்டத்தை முன்னெடுக்கின்றோம். வீடுகளை வழங்குகின்றோம். வேலையில்லா பிரச்சினை துக்கச் செய்தி என்பதனாலேயே இங்கே தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. முதலீடுகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கையில் மக்கள் நெருக்கடியில் இருக்கையில் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு கோரும் போது அதனை பொறுப்பேற்காது ஓடியமை நற்செய்தியா? துக்கச் செய்தியா? என்று கேட்டார்.