அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் குடியேற்ற கொள்கை: சர்வதேச மாணவர் விசா கட்டணம் இரட்டிப்பு
அவுஸ்திரேலியாவில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் இடப்பெயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூலை முதலாம் திகதி முதல் சர்வதேச மாணவர் விசா கட்டணம் 710 அவுஸ்திரேலிய டொலரில் இருந்து 1600 டொரலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வருகையாளர் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் தற்காலிக பட்டதாரி விசாவைக் கொண்ட மாணவர்கள் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“இன்று நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் நமது சர்வதேச கல்வி முறையின் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்க உதவும், சிறந்த இடம்பெயர்வு முறையை உருவாக்க உதவும்” என்று உள்துறை அமைச்சர் கிளேர் ஓ’நீல் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதி வரையான ஆண்டில் நிகர குடியேற்றம் 60 வீதமாக அதிகரித்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதிக்கும் விசா விதிகளில் உள்ள ஓட்டைகளை மூடுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
அந்த வகையில், மாணவர் விசா விதிகளை கடுமையாக்க கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளை சமீபத்திய நடவடிக்கை பின்பற்றுகிறது.
இதன்படி, மார்ச் மாதத்தில் ஆங்கில மொழி தேவைகள் கடுமையாக்கப்பட்டன.
அதே நேரத்தில் சர்வதேச மாணவர்கள் விசா பெறுவதற்கான சேமிப்புத் தொகை மே மாதத்தில் 24,505 அவுஸ்திரேலிய டொலரிலிருந்து 29,710 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது சுமார் ஏழு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிகரிப்பு ஆகும்.
சர்வதேசக் கல்வியானது அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதித் தொழில்களில் ஒன்றாகும்.
மேலும் 2022-2023 ஆம் நிதியாண்டில் பொருளாதாரத்திற்கு 36.4 பில்லியன் டொலர் மதிப்புடையதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.