கட்டுரைகள்

எங்கள் தமிழாம் சிங்கார சென்னைத் தமிழும்! … சொல்…5…. சங்கர சுப்பிரமணியன்.

 நிலங்களி்ல் பலவகை உண்டு. நீர்ப் பாசணவசதி நிரம்பிய நெல்விளையும் பூமியை நஞ்சை என்றால் வானம் பார்த்து விளையும் பூமியும் உண்டு. வானம் பார்த்த நிலம் என்றால் தண்ணீர் வசதியற்ற பூமியாகும். மழைபெய்தால் அந்த நீரால் மட்டும் பயிர் வளரும் பூமி புஞ்சை நிலமாகும்.
தரிசு நிலம் என்றொரு நிலமும் உள்ளது. நெடுநாட்களாக பயிரிடப் படாமல் இருக்கும் நிலமாகும். இந்த நிலம் பண்படுத்தி திரும்பவும் விவசாயத்துக்கு பயன் படுத்தவோ அல்லது மற்ற தேவைகளுக்கோ விடப்பட்ட நிலமாகும்.
இது தவிர புறம்போக்கு நிலம் என்ற நிலமும் உள்ளது. இந்த நிலம் விவசாயத்துக்கு பயன்படாதது. ஆனால் சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்படும். இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது. இந்த நிலப்பகுதி வரி அல்லது தீர்வை விதிக்கப் படாத பகுதியாகும்
சில சொற்களை இரண்டு இடங்களில் பயன்படுத்தலாம். சான்றாக அரசு என்ற சொல் அரசாங்கத்தையும் குறிக்கும் அதே சமயம் அரசு என்ற பெயரை மனிதருக்கும் வைப்பார்கள். இதைப்போன்றே புறம்போக்கு என்ற சொல்லை விவசாயத்துக்குப் பயன்படாத நிலத்துக்கும் பயன்படுத்துவர் யாருக்கும் உதவாதவர்களைத் திட்டுவதற்காகவும் பயன்படுத்துவர்.
நான் வாசித்து அறிந்ததன்படி, 
தமிழ்நாட்டிலுள்ள வேளாண்மை செய்யமுடியாத நிலங்களான கடற்கரை, ஆறு, ஓடை மற்றும் வாய்க்கால் போன்ற நீர் நிலைகள் மற்றும் சாலை, மேய்ச்சல் நிலம், இடுகாடு போன்றவை புறம்போக்கு என்று அறியப்படுகின்றன. இச்சொல் சோழர் காலத்திலிருந்தே வழக்கில் உள்ளது.
 
இந்த தமிற்சொல் அப்படியே ஆங்கிலத்துக்கும் சென்று poramboke என்று ஆங்கிலச் சொல்லாகவும் மாறியது. இதன் பொருள் அரசாங்கத்துக்கு சொந்தமான நிலம் என்பதாகும்.
 
இச்சொல் இன்னொரு கோணத்திலும் பார்க்கப்படுகிறது. காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளில் ஆங்கிலேயர்கள் வரி வசூலாகாத இடத்தை அரசுடமையாக்க Lands of Earl of Pembroke Act என்ற சட்டத்தை பென் புரோக் என்பவர் இயற்றினார். அப்படி பயன் பாடற்ற நிலங்கள் Pembroke என்றாகி அதன்பின்
Poramboke ஆகி தமிழில் புறம்போக்கானது என்றும் கூறப்படுகிறது.
வேளாண்மை செய்ய இயலாத நிலங்கள் எப்படி புறம்போக்கானதோ அதுபோல ஒன்றுக்கும் உதவாதவர்களை புறம்போக்கு என்று அழைக்கும் வழக்கு சிங்காரச் சென்னையில் தொடங்கி தமிழ்நாடு கேரளா என்று தனது எல்லையை விரிவு படுத்தியுள்ளது. அவன் ஒரு சரியான மாங்கா என்று மடையன் ஒருவனை குறிக்க உதவுவதுபோல் இச்சொல்லும் சென்னை வட்டார வழக்கு சொல்லாக வலம் வருகிறது.
இதுபோன்று பல சொற்கள் சென்னைத் தமிழில் வட்டார வழக்காயுள்ளன. கணவனை இழந்த பெண்ணை கைம்பெண் என்பார்கள். தந்தையில்லாமல் கைம்பெண்ணால் வளர்க்கப்பட்ட குழந்தைகளை ஆங்கிலேயர்கள் ஹே, கைம்பெண் நாட்டி பாய் என்றழைப்பார்கள். இது கம்னாட்டி பாய் ஆகி நாளடைவில் ஒருவரைத் திட்ட உதவும் கம்னாட்டி என்ற சொல்லாகவும் மாறியது.
பேமானி என்பது பெர்சிய வேர்ச் சொல்லை தழுவியது. “பே” என்றால் இல்லை. “மானி“ என்றால் மானம். பேமானி என்ற சொல் நேர்மையற்றவர்களைக் குறிக்க பயன்படுகிறது. கம்முனு கிட என்றால் be calm. காமா இரு (அமைதியா இரு) என்பது நாளடைவில் கம்முனு கிட என்றாகியது.
பஜாரில் கடைக்காரர்களிடம் சண்டை போட்டு பேரம் பேசும் பெண்களுக்கு பஜாரி என்று பெயர் ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் அடையாறுக்கு மேற்குள்ள பகுதியை கன்ட்ரி சைடு என்றழைத்தனர். அதுவே காலப்போக்கில் மருவி கன்டி என்று மாறி கிண்டி ஆனது.
Hampton bridge சென்னையிலுள்ளது. இதை உருவாக்கியவர் ஹமில்டன் என்ற ஆங்கிலேயர். ஹமில்டன் என்பது ஹம்டன் ஆகி அம்பட்டன் ஆனது. அம்பட்டன் என்றால் முடிதிருத்துபவர். Bridge என்றால் தமிழில் பாலம். சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆறு, ஓடை என நீர் வரும் இடங்களுக்கு வாராவதி என்று சொல்லும் வழக்கமுள்ளது.
வார் என்றால் நீர், வதி என்றால் வழி. இந்தவகையில் வாராவதி ஆகியிருக்கலாம்.
ஹமில்டன் முடிதிருத்துபவரும் இல்லை. Bridge வாராவதியாகி அம்பட்டன் வாராவதி ஆனது. இதுவெல்லாம் சென்னைத் தமிழ் வழங்கிய கொடையாகும்.
புட்டுகிச்சி, பூட்டகேஸூ போன்ற சொற்கள் உணர்த்தும் உணர்ச்சியை பிற மொழிகளிலும் பிற வழக்குகளிலும் இவ்வளவு சிக்கனமாக வெளிப்படுத்த முடியாது. மேலும் சென்னைத் தமிழென்பது நாக்கை அதிகம் துன்பறுத்தாமல் எளிமையாக பேசக்கூடிய கொச்சைத் தமிழ் என்பதை ஒரு வலைப்பதிவை மூலம் அறிந்தேன்.
சான்றாக சிலவற்றை பார்ப்போம். வந்து கொண்டிருக்கிறான் என்பதை வந்துனுகுறான் என்றும் கிழிச்சிடுவேன் என்பதை கீசிடுவேன் என்றும் போய்விட்டது என்பதை பூட்ச்சி என்று சொல்வார்கள்.
பிற மொழிகளை உள்வாங்கி தன் வயப்படுத்தும் திறன் சென்னையின் சிறப்புக்களில் ஒன்று. ஒன்றா? இரண்டா?
கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், பிரெஞ்ச், பெர்சியா, உருது, ஆங்கிலம் என பல எண்ணற்ற மொழிகளை உள்வாங்கி தனக்கென ஒரு வட்டார வழக்கை உருவாக்கியதுதான் சென்னைத் தமிழ்.
சில மொழிகளின் கலப்பாலேயே நம் இலங்கைத் தமிழில் கதிரை, பாண், சப்பாத்து, குசினி போன்ற பல சொற்கள் ஊடுருவி வட்டார வழக்காய்
பேசப்படும்போது பல மொழிகளின் கலப்பு ஏற்பட்டுள்ள நம் சென்னைத் தமிழ் கஸ்மாலம், அப்பாடக்கர், துபாக்கூர், பேமானி, நாஸ்தா, பஜாரி, கஸ்டம், நஸ்டம் போன்ற எண்ணற்ற சொற்களால் வட்டார வழக்கானதில் வியப்பில்லை.
“ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு”
என்று அன்று வள்ளுவன் சொன்ன குறளில்
வட்டார வழக்கு எதுவும் உள்ளதா?
“வங்கக் கடலில் ஏற்படும் மிகுந்த
காற்றழுத்தத்தால் தமிழக கரையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனத்தமழை
பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.”
இந்த பொதுத் தமிழ் செய்திவாசிப்பில் ஏதாவது வட்டார வழக்கு தென்படுகிறதா?
ஒருவர் உழைத்த உழைப்புக்குண்டான கூலியை இன்னொருவருக்கு கொடுப்பது நியாயமில்லை. சென்னையின் வட்டார வழக்கு சென்னைத் தமிழரால் உருவானது. திரைப்படத் துறையினரால் உருவாக்கப்பட்டது அல்ல. திரைப்படத் துறையினர் அதைப் பயன்படுத்திக் கொண்டனர்.
திரைப்படத்தை சில வட்டாரங்களில்
படமாக்கினால் அதில் வரும் வட்டார வழக்கு பின் வருவன போன்றே இருக்கும்.
ஏல பைய போன்னா கேக்க மாட்டியா
ஒனக்கு கோட்டியா புடுச்சிருக்கு – நெல்லைத் தமிழ்
அங்கிட்டு இங்கிட்டுன்னு எங்கிட்டும் தேடாம அங்கனக்குள்ளாரயே தேடு – மதுரைத் தமிழ்
அப்படியா சொல்றீங்கோ நம்ப முடியலயங்கோ – பெங்களூர்த் தமிழ்
ஒன்ற தம்பி என்ற வீட்ல நாலு மாசமா இருந்தாப்ல அம்மணி – கோவைத் தமிழ்
அந்திக்கு அடிச்சு கதச்சவர் ஓம் எண்டார் – இலங்கைத் தமிழ்
இன்னா சார் படா பேஜாரா பூச்சு அப்பீட்டு ஆயிடு – சென்னைத் தமிழ்
இத்தகைய வட்டார வழக்குகளை
தாழ்த்தியோ உயர்த்தியோ அல்லது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் கதைப்பவர்களை குறைத்து மதிப்பிடவோ கூடாது. அவரவர் வட்டார வழக்கு அவரவர்களுக்கு உயர்ந்தது. ஆதலால் எல்லா வட்டார வழக்குகளையும் ஏற்றே ஆகவேண்டும். இல்லையெனில்,
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய் என்று சங்ககாலத்தில் காதலியிடம் பேசியது போல்தான் பேசவேண்டும்.
இன்றைய வழக்கில் கதைக்க இயலாது.
-சங்கர சுப்பிரமணியன்.
(முற்றும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.