கட்டுரைகள்
உக்ரைன் அமைதிக்கான சுவிஷ் மாநாடு; ரஷ்யாவை புறக்கணித்த பேச்சுவார்த்தை! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(ஐங்கரன் விக்கினேஸ்வரா)
(சுவிட்சர்லாந்து அமைதி உச்சி மாநாடு மூலம் உக்ரைன் போருக்கு தீர்வு கிடைக்குமா என்று உலகம் எதிர்பார்த்தது. ஆனால், மேற்குலக நாடுகள் தங்கள் வலிமையை ரஷ்யாவுக்கு காட்டவே இந்த மாநாட்டை நடத்தியதாக சர்வதேச அரசியலை கூர்ந்து கவனிப்பவர்கள் கூறுகிறார்கள்)
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போா் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட சுவிட்சா்லாந்தின் பா்கன்ஸ்டாக் விடுதியில் (Bürgenstock Hotels & Resort Lake Lucerne) ஜூன் 15, 16-ஆம் திகதிகளில் சா்வதேச மாநாடு நடைபெற்றது.
ஆயினும் இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் அந்நாட்டுடன் நெருக்கமாக நட்புப் பாராட்டி வரும் சீனாவும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
ரஷ்யா – உக்ரைன் போருக்கு தீர்வு கிடைக்குமா?
சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சிமாநாட்டில் ரஷ்யா – உக்ரைன் போருக்கு தீர்வைத்தேடி, நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ஒன்று கூடினர்.
ஆனால் இந்த மாநாட்டுக்கு சண்டையில் ஈடுபட்டுள்ள ஒரு தரப்பான ரஷ்யா அழைக்கப்படவில்லை. நேட்டோ நாடுகள் ரஷ்யாவுடன் தாம் நடத்தும் மறைமுக யுத்தத்துக்கு பயன்படுத்தும் உக்ரைனை மட்டுமே அழைத்தனர்.
பொதுவாக இருவர் சண்டையிட்டால், சண்டையிட்ட இரு தரப்பினரையும் அழைத்துச் சமாதானம் செய்வதுதான் வழமை.
மாநாட்டில் ரஷ்யா அழைப்பு இல்லை:
சுவிட்சா்லாந்து மாநாட்டில் இந்தியா, சவூதி அரோபியா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பங்கேற்றபோதிலும், இறுதிக் கூட்டறிக்கையில் கையொப்பமிடவில்லை.
இந்த மாநாடு தொடா்பாக நிபுணா்கள் கூறுகையில், உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யாவே முன்னின்று தொடா்ந்து வருகிறது. ஆனால், மாநாட்டில் கலந்துகொள்ள அந்நாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே, போரை முடிவுக்குக் கொண்டு வருவதில், இந்த மாநாடு குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தக் கூடும்’ என்றும் தெரிவித்தனா்.
மாநாட்டில் கலந்துகொள்ளாத சீனாவும், பாா்வையாளராக கலந்துகொண்ட பிரேஸிலும் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த மாற்று வழிகளைக் காண வலியுறுத்தியுள்ளன.
உக்ரைன் ஜனாதிபதி மீது ட்ரம்ப் கடும் கோபம்:
உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. மேற்கு உலக நாடுகளுடன் இணைந்து உக்ரைனும் போரிட்டு வருகிறது.
அமெரிக்கா ஜனாதிபதியாக தேர்தலில் வெற்றி பெற்றால் உக்ரைனுக்கு கொடுத்து வரும் உதவிகளை நிறுத்தப் போவதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு வரும் ஒவ்வொரு முறையும் 6000 கோடி டாலர்களை எடுத்துச்சென்று விடுகிறார் என ட்ரம்ப் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இதுவரை இருந்த அரசியல்வாதிகளிலேயே பெரிய வியாபாரியாக இருப்பார் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
ஒருபக்க சார்பான வேடிக்கையான மாநாடு:
உக்ரைன் – ரஷ்ய போருக்குத் தீர்வு காண்பதற்கென ஒரு உச்சி மாநாட்டை மேற்கு நாடுகள் சுவிற்சலாந்தில் நடத்தியிருந்தாலும், இந்த ஒருபக்க சார்பான நடவடிக்கை காரணமாக உலகின் பல நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாது பகிஸ்கரிப்புச் செய்தன.
பகிஸ்கரிப்புச் செய்த முக்கியமான நாடுகளில் சீனாவும் ஒன்று. ஆயினும் சுமார் 80 வரையிலான நாடுகளே இம்மாநாட்டில் பங்குபற்றின. அவற்றில் பெரும்பாலான நாடுகள் மேற்கத்தைய ஆதரவு நாடுகளாகும்.
அப்படிப் பங்குபற்றிய நாடுகளிலும் சில நாடுகள் மாநாட்டின் இறுதிப் பிரகடனத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டன.
லூசர்ன் நகரில் அமைதி மாநாடு:
உக்ரைனும் ரஷ்யாவும் இரு நாடுகளுக்கும் இடையே 28 மாதங்களாக பரஸ்பரம் தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில், அமைதிப் பாதையில் திரும்பும் வகையில் சுவிட்சர்லாந்தின் லூசர்ன் நகரில் அமைதி உச்சி மாநாடு நடந்தது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார்.
அமெரிக்கா சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பங்கேற்றார். ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட 80 நாடுகளும் அமைப்புகளும் கலந்து கொண்டன. எனினும், ரஷ்யாவும் சீனாவும் கலந்து கொள்ளவில்லை.
பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என ஜெலன்ஸ்கி வலியுறுத்தி வந்த நிலையில், இந்தியா சார்பில் சில பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
உக்ரைன் அதிபர் 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுட்டிக்காட்டிய 10 அம்ச அமைதித் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் உச்சி மாநாடு நடைபெற்றது. ரஷ்ய தாக்குதலை நிறுத்துதல், ரஷ்ய படைகளை திரும்பப் பெறுதல், போருக்கு முந்தைய எல்லைகளை மீட்டெடுத்தல், ரஷ்யாவின் போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை நிறுவுதல், பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுத்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கும்.
நிபந்தனைகளை ஏற்க ரஷ்யா மறுப்பு:
எனினும் உக்ரைனின் நிபந்தனைகளை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு, நேட்டோ அமைப்பில் சேரும் முடிவை கைவிட்டால், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இதை நிராகரித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உலகின் பெரும்பகுதி நாடுகள் தங்கள் பக்கம் இருப்பதாக கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து அமைதி உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, ரஷ்யாவின் தாக்குதலால் உருக்குலைந்து காணப்படும் உக்ரனை மீண்டும் மறுஉருவாக்கம் செய்யவும், மனிதாபிமான தேவைகளை நிவர்த்தி செய்யவும் ஒன்றரை பில்லியன் டாலருக்கும் அதிகமான உதவி திட்டம் அறிவிக்கப்பட்டது.
நீண்டபோருக்கு தீர்வு கிடைக்குமா?
உக்ரைனில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரஷ்ய வீரர்கள் தற்போது போரில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் உக்ரைனின் டொனெட்ஸ்க் (DONETSK) மற்றும் லுஹான்ஸ்க் (LUHANSK) ஆகிய இரண்டு பிராந்தியங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. கெர்சன் (KHERSON) மற்றும் சபோரிஜியாவை (ZAPORIZHZHIA) பகுதிகளையும் ஆக்கிரமிக்க ரஷ்யா முயற்சிக்கிறது.
சுவிட்சர்லாந்து அமைதி உச்சி மாநாடு மூலம் உக்ரைன் போருக்கு தீர்வு கிடைக்குமா என்று உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், மேற்குலக நாடுகள் தங்கள் வலிமையை ரஷ்யாவுக்கு காட்டவே கூடியுள்ளதாக சர்வதேச அரசியலை கூர்ந்து கவனிப்பவர்கள் கூறுகிறார்கள்.
80 நாடுகள் கூட்டாக அமைதி வலியுறுத்தின:
ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான எந்தவொரு அமைதி ஒப்பந்தத்துக்கும் பிராந்திய ஒற்றுமை அடிப்படையாக இருக்க வேண்டும் என்று சுவிட்சா்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் 80 நாடுகள் கூட்டாக வலியுறுத்தின.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்த மாநாடு பயனளிக்கும். அவ்விரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவாா்த்தையில், கத்தாா் போன்ற நாடுகளின் முயற்சிகளை விரிவுபடுத்த பிற நாடுகள் முன்வருகின்றன என்றாா்.
மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான எந்தவொரு அமைதி ஒப்பந்தத்துக்கும் பிராந்திய ஒற்றுமை அடிப்படையாக இருக்க வேண்டும் என்று 80 நாடுகள் வலியுறுத்தின.
ஐ.நா. சாசனம், பிராந்திய ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதே உக்ரைனில் நீடித்து நிலைக்கும் அமைதியை எட்டுவதற்கு அடிப்படையாக இருக்கும் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.