350க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தீப்பிடித்த ஏர் கனடா விமானம்
ஏர் கனடாவிற்கு சொந்தமான போயிங் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பிடித்து எரிந்த திகிலூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது பக்க இயந்திரத்தில் தீப்பிடித்துள்ளது. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொரான்டோ பியர்சன் விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் செல்லும் வழியில் விமானம் புறப்பட்டு முப்பது நிமிடங்களுக்குப் பிறகு இந்த பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.
விமானத்தில் இருந்த ஊழியர்கள் அல்லது 389 பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. விமான ஊழியர்கள் விமானத்தை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் தரையிறக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திர கம்ப்ரசரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பராமரிப்பு மற்றும் பொறியியல் வல்லுனர்களால் மேலதிக மதிப்பீட்டிற்காக விமானம் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமானம் இரவு 8:46 மணிக்கு புறப்பட்டதாகவும், எனினும், இரவு 9:50 மணிக்கு அதே விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அன்று மாலையே பயணிகள் வேறொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.
குளோபல் நியூஸ் படி, கடந்த இரண்டு வாரங்களில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டொரான்டோ பியர்சன் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
மே 27 அன்று, டொராண்டோவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில், ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக குறித்த விமானம் மீளவும் அவசரமாக தரையிறக்கட்டமை குறிப்பிடத்தக்கது.