எங்கள் தமிழாம் சிங்கார சென்னைத் தமிழும்!…. சொல்…1…..சங்கர சுப்பிரமணியன்.
மொழி ஒன்றென்றாலும் அது பேசப்படும் இடத்திற்கு தகுந்தபடி பேசும்விதம் மாறுபடும். தமிழ்மொழியை தமிழ்நாட்டில் ஒருமாதிரியும் இலங்கையில் ஒரு மாதிரியும் மலேசியாவிலும் சிங்கப்பூரில் ஒருமாதிரியும் பேசுவார்கள். ஆங்கிலமொழியை ஐக்கிய ராச்சியத்தில் ஒருவிதமாகவும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒருவிதமாகவும் பேசுவார்கள்.
நான் வசித்த கர்நாடகாவில் வடகர்னாடாகவில் உள்ள பெலகாவி, பிஜாபூர் மற்றும் தார்வாடில் ஒருவகையாகவும் தென் கர்னாடகாவில் பெங்களூர் மற்றும் மைசூரிர் ஒருவகையிலும் கன்னட மொழியைப் பேசுவார்கள்.
தமிழ்நாட்டில் நெல்லத் தமிழ், கோவைத்தமிழ், மதுரைத்தமிழ் மற்றும் சென்னைத் தமிழ் என்று வட்டார வழக்கு இருக்கிறது.மொழிகளைப் பேசும்போது அந்தந்த வட்டாரத்துக்கு ஏற்ப பேசுவதையே வட்டார வழக்கென்கிறோம்.
நான் பிறந்து வளர்ந்த மண்ணான தமிழ்நாட்டில் பள்ளி இறுதிப்படிப்பை முடிக்கும்வரை பதினேழு ஆண்டுகளே வாழ்ந்தேன். அதன்பின் பெங்களூருக்கும் அங்கிருந்து மெல்பனுக்கும் புலம்பெயர்ந்தேன். நான் வாழ்ந்த மற்றும் வாழும் இடத்தை விட பிறந்த மண்ணில் வாழ்ந்த ஆண்டுகள் குறைவே.
இருப்பினும் தமிழ்நாட்டையோ தமிழ்நாட்டின் தலை நகரான சென்னையையோ தமிழையோ தமிழரையோ யாராவதை குறைகூறின் என் மனம் ஏற்பதில்லை. குறையிருப்பினும் கூட அதைக் குறையாக கூறுபவர்களை எண்ணி என் மனம் வேதனையடையும். அது என்னிடமுள்ள குறையாகவும் இருக்கலாம்.
அல்லது என் மொழியின்மீதும் இனத்தின் மீதும் பிறந்ந மண்ணின் மீதும் வைத்திருக்கும் அளவுக்கதிகமான பற்றாகவும் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் அவர்களின் வட்டாரவழக்கில் ஈர்ப்பு இருக்கவே செய்யும். அந்த கண்ணோட்டத்தில்தான் நாம் அணுக வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து ஊடகங்களில் வரும்போது அனைவருக்கும் பொதுவான முறையில் அம்மொழியின் பயன்பாடிருக்கும்.
இப்படியான பொது பயன்பாட்டில் கையாளப்படும் மொழியைத்தவிர எந்த வட்டார வழக்கும் உயர்ந்ததோ அல்ல தாழ்ந்ததோ அல்ல.
வட்டார வழக்கையும் தாண்டி தொடர்பே இல்லாததைப்போல சில சொற்கள் சில வட்டாரங்களில் பேசப்படும். இப்படி பேசப்படும் சொற்களை தொடர்பற்ற சொற்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. நமக்கு அச்சொற்களைப் பற்றி ஒன்றும் தெரியாவிட்டால் அவற்றைப்பற்றி ஏதாவதொன்றைச் சொல்லி எளிதில் கடந்து சென்று விடமுடியாது.
அப்படி சில சொற்கள் தமிழில் உள்ளன. குறிப்பாக சென்னைத் தமிழில் உள்ளன. எனக்கு தெரிந்த அதாவது வாசித்தறிந்த கேட்டும் பார்த்துமறிந்த சொற்களில் சிலவற்றை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அவற்றுள் ஒன்றுதான் டுபாக்கூர். இப்போது இந்த டுபாக்கூர் என்ற சொல் தமிழில் எப்படி வந்தது என்று பார்ப்போம். கட்டுமரமும் மாங்காயும் ஆங்கிலத்துக்கு சென்றதுபோல் அதிதியும் வருடமும் தமிழுக்கு வந்ததுபோல் பிறமொழிச் சொற்களும் தமிழில் வந்துள்ளன. இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. வந்த காரணத்தை அறிந்தால் உணர்ந்து கொள்வோம்.
டுபாக்கூர் என்பது தமிழ்ச்சொல் அல்ல. வடக்கில் இருந்து வந்து தமிழில் ஐக்கியமாகிவிட்ட சொல். சென்னைத் தமிழில் அறியப்படும் சொல்லாகும். ஒரு மொழியில் இதுபோன்ற சொற்கள் கலந்ததை அறியாமல் அவ்வட்டார வழக்க்கை தாழ்த்திச் சொல்வது நன்றன்று. இந்த சொல் தமிழில் எப்படி வந்தது என்பதைப் பற்றி இப்போது அலசுவோம்.
தோ என்றால் வடமொழியில் இரண்டு. பாஷை என்றால் மொழி. இரண்டு மொழிகளை சொல்லும்போது தோபாஷ் என்று சொல்லலாம். இந்த தோபாஷ் என்பது மறவி துபாஷ் ஆனது.
அடுத்ததாக கோர் என்ற சொல்லுக்கு
மோசடி செய்பவன் என்று பொருள். சான்றாக ஹராம்கோர் என்றால் திருடன், கொள்ளைக்காரன் மற்றும் லஞ்சம் வாங்குபவர்கள் என்று மோசடி செய்பவர்களைக்க குறிக்கும் சொல் ஆகும்.
துபாஷ் என்ற சொல்லும் கோர் என்ற சொல்லும் இணைந்து துபாஷ்கோர் ஆனது.
துபாஷ்கோர் காலப்பாக்கில் துபாக்கோர் ஆனது. பின் துபாக்கோர் மருவி டுபாக்கூர் ஆனது.
ஐயா எல்லாம் தெரிந்த ஏகாம்பரம், இரண்டு மொழிக்கு துபாஷ் என்பதும் கோர் என்றால் மோசமானவன் என்பதும் புரிந்துவிட்டது. இப்படி இரண்டு மொழி தெரிந்தவன் எப்படி மோசமானவன் ஆனான்? எங்கோ இடிக்கிறதே என்று மாடசாமி அண்ணாச்சி நினைப்பது புரிகிறது.
இதை உங்களுக்கு புரியவைக்காவிடில் என்னை நீங்கள் டுபாக்கூர் என்று சொல்லிவிடுவீர்கள். ஆதலால் உங்கள் அறிவுப் பசிக்கு உணவளிக்கிறேன்.
வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது அவர்களுக்கு தொண்டு செய்தவர்களில் அடிவருடிகள் இருந்தனர். இவர்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக்
கற்று புலமையடைந்து இருந்தார்கள். பாமர மக்களின் ஆங்கில அறியாமையைப் பயன்படுத்தி புலமைபெற்ற இந்த துபாஷ்கோர் மோசடி செய்து ஏமாற்றி பிழைத்தனர்.
இப்பொழுது புரிகிறதா? மோசடி செய்பவர்கள் எப்படி டுபாக்கூர் ஆனார்கள் என்று. சென்னைத் தமிழில் மோசடி செய்பவர்களை ஏன் டுபாக்கூர் என்கிறார்கள் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என எண்ணுகிறேன். சென்னைத் தமிழ் இழிவானதோ அச்சொல்
கோடம்பாக்கத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களில் வருவதோ அல்ல என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ளும் என்றும் நம்புகிறேன்.
– சங்கர சுப்பிரமணியன்.