இலக்கியச்சோலை
“தித்திக்கும் முத்தொள்ளாயிரம்”…. பாகம் 2 …. செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.
சேர நாட்டில் மட்டுமல்ல சோழநாட்டிலும், பாண்டிய நாட்டிலும்கூட, அவ்வந்த நாட்டு மன்னர்கள் வீதியுலா வரும்போது மக்கள் அவர்களைக் காண்பதற்கு விருப்போடு காத்திருப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அதிலும் இளமையும் அழகும் கொண்ட மன்னர்களும் , இளவரசர்களும் உலா வரும்போது அவர்களின் அழகும், மிடுக்கும், அவர்களைப் பார்த்த இளம் மங்கையர்களின் மனங்களைக் கவர்ந்திருக்கின்றன என்பதுபோன்ற அழகிய காட்சிகளை முத்தொள்ளாயிரம் தருகிறது. சேர நாட்டுப் பெண்கள் மன்னனைக் காண்பதற்காக வீட்டுக் கதவுகளுடன் பட்ட பாட்டை இதுவரை இரசித்தோம். அடுத்த பாடல் சோழ நாட்டில் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது.
கதவு திறக்கட்டும், கண்ணாரக் காணட்டும்.
உறந்தையர்கோன் எனப்படும் சோழ மன்னன், நெடுவேல் நலங்கிள்ளி வீதிவலம் வருகின்றான். அப்போது இளம்பெண்கள் அவனைக்காணவும், அவனின் அழகை இரசிக்கவும் விரும்புகின்றார்கள். மன்னனைக் கண்டால் அவர்கள் அவன்மேல் காதல்கொண்டு விடுவார்கள். பின்னர் அது தீமையாகப் போய்விடும். வேண்டாத பிரச்சினைகள் வந்து சேரும் என்று எண்ணி, அவர்களின் பெற்றோர் தங்களின் வீட்டுக் கதவுகளை மூடி வைத்திருக்கிறார்கள். அதனால் அந்தப் பெண்கள் மன்னனைக் காணமுடியாமல் தவிக்கிறார்கள். இதனை அறிந்த ஒருவர், ஐயோ இந்தப் பெண்கள் மன்னனைக் காண்பதால் காதலில் வீழ்வதையும், அதனால் பிரச்சினைகள் வருவதையும் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், மன்னனைக் காணமுடியாத ஏக்கத்தினால் அவர்கள் உயிரை விட்டுவிட்டால் என்ன செய்யமுடியும்? அது மிகப்பெரிய துன்பமல்லவா?அதனால் அந்தக் கதவுகளைத் திறந்துவிடுங்கள். மங்கையர்கள் மன்னவனைக் காணட்டும், கண்டு களிக்கட்டும் என்று சொல்வதாக ஒரு காட்சியை அடுத்துவரும் பாடல் தருகிறது.
திறந்திடுமின் தீயவைபிற்காண்டும் மாதர்
இறந்திடுபடின் ஏதந்தான் என்னாம் – உறந்தையர்கோன்
தண்ணார மார்பின் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு (பாடல் இல: 33)
கதவுகளைத் திறந்துவிடுங்கள். தீமைகளைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். (மன்னனைக் காணாத ஏக்கத்தில்) பெண்கள் இறந்துவிட்டால் துயரம்தான். குளிர்ச்சியான மலர் மாலையை மார்பில் அணிந்துகொண்டுவரும், தமிழரின் தலைவனான, உறந்தையின் அரசனை இந்தப் பெண்கள் கண்ணாரக் காணட்டும். என்பது இந்தப் பாடலின் நேரடிக் கருத்தாகும்.
சரி! மன்னனைக் காண மங்கையர்கள் விருப்பப்படுவது, சேர, சோழநாடுகளில் மட்டுமா நடக்கிறது. பாண்டிய நாட்டிலும் நிலைமை அதுதானே என்பதைப்போலச் சில பாடல்கள் காட்சிப்படுத்தியுள்ளன.
கைம்மாறு என்ன செய்வேன்?
மாக்கடுங்கோன் என்ற சிறப்புப்பெயருடைய பாண்டிய மன்னன், வழமைபோல வீதியுலா வருகிறான் என்ற செய்தி அறிவிக்கப்படுகிறது. உடனே, ஒருதாய் தன் மகளை நினைத்துக் கவலைப்படுகிறாள். தன் மகள் மன்னனைக் காண நேர்ந்தால், சிலவேளை அவனது அழகில் மயங்கிவிடலாம், தன்மனதை அவனிடம் பறிகொடுத்துவிடலாம் என்று நினைக்கிறாள். அப்படி நடந்தால், நிறைவேற முடியாத அவளது காதலால் அவளது மனநிலை பாதிக்கப்படலாம். அவளின் எதிர்காலம் வீணாகிப் போகலாம் என்று அஞ்சுகிறாள். உடனே, அவளை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அச்சுறுத்துகிறாள். அவள் வெளியே வரமுடியாதபடி வீட்டின் கதவை இழுத்து, நிலையோடு நன்கு பொருந்தும்படி அடைத்துப் பூட்டுகிறாள். மன்னனைக் காண்பதற்கு இனிமேல் மகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லையென்று உறுதிசெய்துகொண்டு வெளியே வருகிறாள். மன்னனைக் காண ஆவலோடு காத்திருந்த மகளோ என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறாள். அப்போது தற்செயலாக அந்தக் கதவில் உள்ள சாவித் துவாரம் அவளது கண்ணில் படுகிறது. அதனூடாக பார்க்கிறாள். வீதி தெரிகிறது. அடடா! மன்னன் வீதியால் நம் வீட்டருகே வரும்போது இந்தச் சாவித் துவாரத்தினூடாக அவனைத் தன்னால் பார்க்கமுடியும் என்று மகிழ்ந்து துள்ளிக் குதிக்கிறாள். இந்தக் கதவில் இப்படியொரு துவாரத்தை வைத்து இதனைச் செய்த அந்தத் தச்சருக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும் என்று நன்றியுணர்ச்சியோடு நினைக்கிறாள். இந்தக் காட்சியைப் புலப்படுத்துகிறது அடுத்த பாடல்.
காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து
யாப்படங்க வோடி யடைத்தபின் மாக்கடுங்கோன்
நன்னலங் காணக் கதவந்துளை தொட்டார்க்கு
என்னைகொல் கைம்மாறு இனி? ( பாடல் இல: 99)
தன் காவலுக்குள் அடங்கியவளாக வீட்டிலேயே இரு என்று மிகவும் பாதுகாப்பான இந்த வீட்டுக்குள் என்னை வைத்துக் கதவை இறுக்கமாகப் பூட்டிவிட்டு அன்னை சென்றுவிட்டாள். வீதியில் உலா வரும் மன்னனின் அழகை இந்த வீட்டின் கதவுத் துவாரத்தினூடாக நான் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இந்தத் துவாரத்தை வைத்துக் கதவைச் செய்த தச்சனுக்கு என்னதான் கைமாறு என்னால் செய்ய முடியும்? என்பது இதன் நேரடிக் கருத்து.
மெல்ல நட! குதிரையே மெல்ல நட!
பாண்டிய மன்னன், மாறன் வழுதி தனது அழகான குதிரையில் வீதியுலாச் செல்கின்றான். வீதியுலாச் செல்லும்போது அவன் தனது குதிரையை விரைவாகச் செலுத்துவானா? இல்லையே! வீதி நெடுகிலும் அவனைக் காண்பதற்கும், வாழ்த்துவதற்கும் காத்துக்கொண்டு நிற்கும் மக்களை மக்களை பார்த்துகொண்டு தான் செல்கிறான். அதற்கேற்றாற்போல அவனது குதிரை மெல்லமெல்ல அசைந்தவாறுதான் நடந்து செல்கிறது. ஆனால், வீதியருகேயுள்ள வீடுகளின் கதவோரங்களில் நின்றவாறு மன்னனின் வரவை எதிர்பார்த்து, அவனது காத்துக்கொண்டிருந்த இளம் பெண்களுக்கோ அந்தக் குதிரைகள் மிகவும் வேகமாகச் செல்வதுபோல இருக்கிறது. அதனால் அந்தக் குதிரைகளைப் பார்த்து அவர்கள், “மெல்லப்போ..மெல்லப்போ.. துள்ளி ஓடாதே, குதிரையே, மன்னனை நாங்கள் பார்க்கக்கூடியவாறு மெல்லப்போ” என்று சொல்வதுபோல, ஒரு காட்சியை அழகாகச் சித்தரிக்கிறது அடுத்த பாடல்.
போரகத்துப் பாயுமா பாயாது உபாயமா
ஊரகத்து மெல்ல நடவாயோ கூர்வேல்
மதிவெங் களியானை மாறன்றன் மார்பங்
கதவங்கொண் டியாமுந் தொழ (பாடல் இல: 102)
“ஏய்! குதிரையே! போர்க்களத்தில் பாய்ந்தோடிச் செல்வதுபோல இந்த ஊருக்குள்ளேயும் விரைவாகச் செல்லாதே. கூர்மையான வேற்படையினரையும், மதம் பிடித்த யானைப்படையையும் கொண்ட மன்னன் மாறனின் மார்பழகை, எங்கள் கதவுகளின் அருகே நின்று நாங்கள் காண்பதற்கும், அவனை வணங்குவதற்கும் வசதியாக மெல்ல நடந்துசெல்லமாட்டாயா?” என்பது இதன் நேரடிக் கருத்தாகும்.
ஆசையும், நாணமும்
ஆசைக்கும் நாணத்திற்கும் இடையிலான மனப் போராட்டம் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதனை இலக்கியங்களும் பதிவுசெய்துள்ளன. வீதி உலா வருகின்ற சோழ மன்னன் கிள்ளிவளவனைக் காண்பதற்கு ஆசைப்படுகிறாள் ஒருத்தி. ஓடிச்சென்று வாசற்கதவைவின் அருகே நின்றாவது ஒருதடவை அவனைப் பார்த்துவிடவேண்டுமென்று உள்ளம் துடிக்கிறது. ஆனால் நாணம் அவளைத் தடுக்கிறது. தனது இந்த மனப் போராட்டத்தை ஓர் உவமையோடு அவள் வெளிப்படுத்துகிறாள். “நான் படுகின்ற இந்த வேதனை எப்படிப்பட்டதென்றால், ஒரு மூங்கில் குழாயினுள் எறும்பொன்று சிக்கிக் கொண்டது. மூங்கில் குழாயின் இருபக்கங்களிலும் தீப்பிடித்து எரிகிறது. எறும்பு அக்கரைக்கும் போக முடியாமல் இக்கரைக்கும் வரமுடியாமல் அனலிடைப்பட்டுத் துடிக்கிறது. அந்த எறும்பைப்போல இந்த நள்ளிரவு நேரத்திலும் நான் தவிக்கிறேன்” என்று சொல்கிறாள்.
அவ்வாறு அந்த இளம்பெண் சொல்வதை அப்படியே பாடலாக அமைத்திருக்கின்றார் புலவர்.
நாண் ஒருபால்வாங்க நலன்ஒருபால் உண்நெகிழ்ப்ப
காமருதோள் கிள்ளிக்கு என் கண்கவற்ற யாமத்து
இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு போல
திரிதரும் பேரும் எந்நெஞ்சு
(பாடல் இல: 48)
(தொடரும்)