கதைகள்

“அலோ….நா….ஐ….ச்சீ பேசறேன்” …. சிறுகதை ….. ( சோலச்சி )

 அந்த அலுவலகத்தில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவ்வப்போது அருகே இருப்பவர்களிடம் அரட்டை அடிப்பதும் குடும்ப நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வதுமாகவும் இருந்தனர். முத்துச்சாமி மட்டும் யாருடனும் எதுவும் பேசாமல் வேர்த்துக்கொட்டும் வெய்யிலில் கம்பளி போர்வையை போர்த்தியதுபோல் கடுகடு முகத்துடனே காணப்பட்டார்.

எத்தனை வருசம் வேலை பார்த்தாலும் நிம்மதியான வாழ்க்கை ஒருநாளும் வாழ முடியாது என்பது போல் அவரது சிந்தனை முழுக்க வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் அலை பாய்ந்தது. எவ்வளவு சம்பாதிக்கிறது…. எவ்வளவு நேரம்தான் உழைக்கிறது. எவ்வளவு ஒழச்சாலும் ஒத்தக்காசு கையில பையில நிக்க மாட்டேங்கிது. எனக்கு மட்டும்தான் இந்த சோதனை வரணுமா..? இல்லை எல்லாருக்கும் இப்படியான நிலை வந்துருக்குமா..? ம்க்கூம்… ஒவ்வொருத்தனும் ஆட்டம்பாட்டமுனு கூத்தடிச்சு கும்மாளம் போடுறதப் பாத்தா… எனக்கே நேந்துவிட்டமாறி இருக்குமோனுதான் தோணுது.. இந்தக் கேள்விகளை அவரால் தனக்குள் கேட்டுக்கொள்ளத்தான் முடிந்தது. அதற்கான பதிலை யாரிடமிருந்தும் பெறுவதற்கான முயற்சியில் இறங்கவில்லை. யாரிடமாவது பேசினால்தானே ஏதாவது ஒரு முடிவு கிடைக்கும்.

மின்விசிறி நிற்காமல் சுழன்று பெருங்காற்றை உருவாக்கியபோதும் உடல் கசகசத்தது. சட்டைக்காலரை தூக்கிவிட்டு உஷ்….உஷ்… என கழுத்திலும் நெஞ்சிலும் ஊதிக்கொண்டே பெரிய நோட்டு ஒன்றில் எதையோ குறித்துக் கொண்டிருந்த முத்துச்சாமியைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. இன்னும் நாலு மின்விசிறிகளை சுழலவிட்டாலும் அவருக்குள் இருக்கும் புழுக்கம் விலகுவதாக இல்லை. அறை முழுவதும் வெப்பக்காடாய் இருப்பதாக உணர்ந்தார்.

முத்துச்சாமியைக் கண்டும் காணாததுபோல் அவரவர் வேலையைப் பார்ப்பதும் அக்கம்பக்கத்தில் அரட்டையடிப்பதும் தொடர்ந்தது. இத்தனக் காத்தாடி சுத்துது. சன்னலோரக் காத்தும் உள்ள வந்து அதுபாட்டுக்கு ஓடி ஆடி விளையாடுது. இவ்வளவு

இருந்தும் இவருக்கு மட்டும் இப்புடி வேர்க்குது. ஒரு எடத்துல உட்காராம அங்கிட்டும் இங்கிட்டும் நகண்டு நகண்டு உட்காருறாரு. இந்த மனுசனுக்கு என்னாச்சு. என்ன…. ஒருநாளு பாத்தாப்ல நெதமும் இப்புடியா… எல்லோரும் மனசு விட்டு பேசி கலகலப்பாக வேலை பாக்குறப்ப… இவரு மட்டும் எதுக்காக தனிச்சுவிடப்பட்டவரு மாறி எப்ப பாத்தாலும் இப்புடி பினாத்துறாரு… என்கிற நெனப்பு டைப்பிஸ்ட் ஈசுவரி மனசை மத்துப்போட்டுக் கடைந்து கொண்டு இருந்தது. என்ன நடந்தாலும் சரி… அவரிடம் பேசியாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.

“சார்…. ஏதும் பிரச்சனையா… உம்முனு இருக்கீங்க..” மெதுவாக பேச்சை இழுத்தாள் டைப்பிஸ்ட் ஈசுவரி.

ஈசுவரியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு இடது கையால் கழுத்தை ஒரு தேய் தேய்த்தார். கை முழுவதும் ஈரமாக மாறியது. அதை சட்டையில் துடைத்துக் கொண்டார். கண்களை உருட்டி “ம்… பிரச்சனைனா…. தீர்த்து வைக்க போறியா. கொசுவத்திய கரைச்சு தெளிச்சுவிட்டமாறி ஒடம்புல எதையாவுது தெளிச்சுக்கிட்டு ஜிங்குஜிங்குனு வந்தர்றது. அப்பறம் அந்தக்கத சொந்தக்கதனு மூச்சுவிடாம பேசிப்புடுறது. அதுக்குத்தானே சீவிசிங்காரிச்சு வர்றோம். வந்தம்மா வேலையை பார்த்தமான்னு போகணும். அதை விட்டுட்டு தொணத்தொணன்னு…… அவனவனுக்கும் மூட்டக்கணக்கா வேலை முதுகுக்குப் பின்னாடியும் முன்னாடியும் குமுஞ்சுக் கெடக்குது….” எறிஞ்சு விழுந்தார் முத்துச்சாமி.

ஒருநாளும் இல்லாம.. இத்தனபேரு இருக்கும்போது முந்திரிக்கொட்டக் கணக்கா ஏன்தான்… இந்த ஆளுக்கிட்ட வாயக்கொடுத்தோம்னு உதடுகளைப் பிதுக்கி நொந்துகொண்டாள் ஈசுவரி.

“அந்த ஆளு எந்த நேரத்துல எப்படி இருப்பானே தெரியாது. ம்…. இப்ப ஒனக்கு என்னத்த பையிப்பையா அள்ளிக் கொடுத்தாரு. ஏன்டி தெனமும் அந்த ஆளுகிட்ட வாங்கிக் கட்டிக்கிற. நானும் வந்த நாளுலருந்து பாத்துட்டேன்.. காவார்த்த அரவார்த்த யார்க்கிட்டயும் ஒழுங்கா பேசிப் பாத்ததில்ல. இங்கதான் இப்புடினா வீட்ல உள்ளவங்கள என்னபாடு படுத்துவாரோ..!” நக்கல் அடித்தாள் சுமதி.

“ஒன்னா ஒரே எடத்துல வேல பாக்குறோம். பத்துரூவா காச நீட்டி பத்து வார்த்த பேசுங்கன்னா சொல்ல முடியும். ஏதோ மனசு

கேக்காம அவருக்கிட்ட கேட்டாக்க…. அந்த ஆளு வழக்கம்போல நொய்யிநொய்யினு கடிச்சா.. அதுக்கு நானு என்ன பண்றது..” சுமதியின் காதில் விழுமாறு சொல்லிக்கொண்டே லேசாக உதட்டை அங்கிட்டும் இங்கிட்டும் சிலுப்பி நமட்டுச் சிரிப்பு சிரித்தாள் ஈசுவரி.

அப்போது, மின்விசிறி சுழன்றதில் பெரிய நாட்காட்டியின் தாள்கள், கண்மாயில் மீனுக்காக காத்திருந்த கொக்கு திடீரென பறப்பதுபோல் படபடத்தன.

பாத்தியா….. அந்தக் காலண்டர் கூட உன்னப் பாத்து கைதட்டி சிரிக்குது.. மேலும் கிண்டல் அடித்த சுமதியை கையெடுத்து கும்பிட்டு ஆளவிடு தாயே என்பதுபோல் சைகை காட்டினாள் ஈசுவரி.

சுமதியையும் முத்துச்சாமியையும் மாறிமாறி பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே வேலையைப் பார்க்கத் தொடங்கினாள் ஈஸ்வரி.

மேலாளர் அழைப்பதாக பியூன் ஷேக் தாவுது சொன்னதும்.. ஒராயிரம் தடவ கூப்புடுவானுக. ஒரே நேரத்துல கூப்புட்டு ஒரேயடியா சொல்லித் தொலைய வேண்டியதுதானே. எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு நாமளும் ஈ…..னு இழிச்சுக்கிட்டு வர வேண்டியதுதான்…. வேண்டா வெறுப்பாக எழுந்தார் முத்துச்சாமி.

பெரிய அதிகாரினா… இப்புடித்தான் போல… இந்த ஆளுக்கு வேற வேலை இல்லை. இதுதான் வேலைனு நெனைக்கிறேன். சும்மாச்சும்மா என்னையக் கூப்பிட்டு கழுத்தறுக்குறது. அவனவன் நெலைமை அவனுக்குத்தான் தெரியும்.. முனுமுனுத்துக் கொண்டே சென்ற முத்துச்சாமியை மேலாளர் கருணா கவனிக்கத் தவறவில்லை.

முகத்தை வெறுங்கையால் துடைத்துக்கொண்டு பிரகாசமாக இருப்பது போல் பாவனையை செய்து கண்ணாடிக் கதவை தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைவதை மேலாளர் கருணா கவனிக்காதது போல் இருந்தார்.

சார் வணக்கம்… வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்னகையை வாய் நிறைய சூடிக்கொண்டு நாணலே நாணும்படியாக இருந்தது முத்துச்சாமியின் குரல்.

வாங்க முத்துச்சாமி. உட்காருங்க.. கருணாவின் பேச்சில் அதிகாரிக்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. ஓர் உறவுக்காரரை வரவேற்பதாகவே இருந்தது.

பரவா……ல்லங்க சார். பவ்யமாக வார்த்தைகளைக் கோர்த்தார் முத்துச்சாமி.

உங்ககிட்ட பேசனும்னு தோணுச்சு.. அதான். எது…ம்..தொந்தரவா இல்லயே….

அதெல்லாம் இல்லங்க சார்..

அப்டினா ஓகே… முதல்ல உக்காருங்க.

தயங்கியபடியே எதிரே உட்கார்ந்தார் முத்துச்சாமி.

“நம்ம ஆபீசுக்கு நான் வந்து ஏழு மாசம் ஆகுது. இதுவரைக்கும் யாரையும் எங்க வீட்டுக்கு கூப்பிட்டது இல்ல…” கருணாவின் கண்களில் இனம்புரியாத ஏதோ ஓர் உறவு குடிகொண்டிருந்ததை முத்துச்சாமியால் உணர முடிந்தது.

“திடீர்னு இதச் சொல்லக் காரணம்…. வேல பாக்குற நேரத்துல அப்புடி என்ன அவசரம்…” என்கிற யோசனையை மனசுக்குள் ஓட விட்ட முத்துச்சாமியை ஏரெடுத்துப் பார்த்தார் கருணா.

“நாம பாக்குற வேலையோட பொறுப்புதான் வேற வேற. ஆனா ரெண்டு பேருக்கும் ஒரே வயசுதானு ஒத்துக்குறீங்களா…?”

இதையெல்லாம் எதுக்கு இப்ப சொல்லிக்கிட்டு.. எதுவும் புரியாதவராக… ம்…. உண்மைதாங்க சார்.. உதட்டை மெல்லியதாக சிரிக்க வைத்தார் முத்துச்சாமி.

ம்… ரொம்ப நாளா உங்கள…. வீட்டுக்கு கூப்டனும்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன்.. எனக்கும் நேரம்காலம் ஒத்து வரல. சாய்ந்தரம் வேறயெங்கேயும் ப்ரோகிராம் இல்லன்னா நம்ம வீட்டுக்கு வாங்களே. டீ சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு போகலாம்… மடமடனு பேசி முடித்தார் கருணா.

திடுதிப்புனு கூப்புட்டா என்ன பதில் சொல்றது… சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு செய்வதறியாமல் முகத்தைச் சொரிந்து கொண்டார் முத்துச்சாமி.

எப்படியாவது முத்துச்சாமியை வீட்டுக்கு அழைத்தே போக வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார் கருணா. இருந்தாலும் முத்துச்சாமி என்ன சொல்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்காக “வர விருப்பம் இல்லைனா விட்ருங்க முத்துச்சாமி. ஒரு நண்பனா ஒரு சகோதரனா கூப்புட்டேன் அவ்ளோதான். எப்ப உங்களுக்கு தோதுப்படுதோ அப்ப போவோம். ஆம…. ஆளும் ரொம்ப டல்லா இருக்கீங்களே…? என்னாச்சு..

அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். வெயில் ஒத்துக்கல அவ்ளோதான்… என்று மழுப்பலாக சொன்னதை கருணா உணராமல் இல்லை.

முத்துச்சாமி எப்போதும் கடுகடு என்று இருப்பதும் மேலதிகாரிகளை பார்த்தால் மட்டும் முகமலர்ச்சியை சிறிது நேரம் வாடகைக்கு வாங்கி வந்து வைத்துக் கொள்வார் என்பதும் வீட்டில் ஏதோ பிரச்சினை என்பதையும் ஏற்கனவே கருணா அறிந்திருந்தார். அவருக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம் அதை எதுக்கு நாம கேட்டுக்கிட்டு… மனசு சங்கடப்படுத்த வேண்டாம் என நினைத்து..,

“அப்படினா இன்னொரு நாளைக்கு போய்க்கலாம்…” என்று சொன்னதும் முத்துச்சாமியின் முகம் சட்டென தடுமாறியது.

எதுக்கு மேலதிகாரிககிட்ட கெட்ட பேரு… சொன்னதுக்காக ஒரு எட்டு போயிட்டு வந்துருவோமே…. என உள்மனசு சொல்ல, பரவாயில்லங்க சார் சாயந்திரமே போவோம்… என்றார்.

புன்முறுவல் பூத்தவாறு “சரிங்க.. முத்துச்சாமி. மாத்திரை ஏதும் வச்சிருந்தீங்கன்னா போட்டுக்கிட்டு வேலையை கவனிங்க.. சாயந்தரம் பேசிக்குவோம்” கைகுலுக்கி அனுப்பினார் கருணா.

வாழ்க்கையை அனைவரும் கொண்டாட வேண்டும். எல்லோரும் மகிழ்ச்சியாக வேலை பார்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவர் கருணா. அதனால்தான் மேலாளர் என்கிற கெத்து இல்லாமல் அனைவரிடமும் நன்றாக பழகுவார். முத்துச்சாமி தலைமை எழுத்தர். இவரது பணி முக்கியமானது. கடுகடு முகத்துடன் முத்துச்சாமி காட்சி அளிப்பதில் கருணாவுக்கு உடன்பாடு இல்லை.

முகத்தில் எண்ணை வழிந்தவனை போல் வேண்டா வெறுப்பாக தன் இருக்கையில் உட்கார்ந்தார் முத்துச்சாமி.

ஏற்கனவே, மேலாளராக பணியாற்றிய மோகனும் இதேபோல் ஒருநாள் எல்லோரையும் தனது வீட்டுக்கு வரவழைத்து பார்ட்டி கொடுத்தார். பார்ட்டி என்கிற பெயரில் தனது சுயபெருமையை தம்பட்டம் அடித்தது நினைவுக்கு வந்தது.

இந்த வீடு நாற்பது இலட்சத்துக்கு வாங்குனது. எலிவிசன் வொர்க்கெல்லாம் இப்பத்தான் செஞ்சோம். சொந்த ஊர்ல தோட்டம்தொரவுனு எக்கச்சக்கம் இருக்கு. நம்ம தோட்டத்துல பத்துப்பதினஞ்சு பேரு எப்பவும் வேலப்பாத்துக்கிட்டே இருப்பாங்க. மாடுகன்னுனு நெறைய இருக்கு. மரம் செடி கொடினு குளுகுளுனு வாழ்ந்துட்டோமா… அதான் இங்க வெய்யிலு ஒத்துக்காம ரெண்டு ஏசிய பிட் பண்ணிட்டேன். என்னத்த பெருசா கொண்டுபோகப் போறோம். அதான் இருக்கவரைக்கும் அனுபவிப்போம்னு பதினேழு இலட்சம் ரூபாய்க்கு காரும் வாங்கிட்டேன். பசங்க சிபிஎஸ்சி ஸ்கூல்ல படிக்கிறானுக. எந்தக் குறையும் இல்ல….. எனக்கு இந்த ஆடம்பரமெல்லாம் புடிக்காது. இருந்தாலும் வெளி உலகத்துக்காக வாழ வேண்டிருக்குல…. பக்கம்பக்கமாய் சுயபெருமையை பேசி முடித்ததும் இரவு விருந்து கொடுத்து ஆளுக்கொரு பையில் பழங்களை நிரப்பி அனுப்பி வைத்ததை அசை போட்டார் முத்துச்சாமி.

வேறெதுக்கு நம்மல கூப்புடுறான்… இவ்ளோ பெரிய ஊர்ல வசதியான பங்களாவுல இருப்பான். அவனோட பெருமைய இப்பக் காட்டியாகனும். இங்க வந்து இத்தன மாசத்துல வேற யாரையும் கூட்டிப்போகல. என்னய கூட்டிப்போற சாக்குல இவனுக அருமபெருமைய நானு தெரிஞ்சுக்கிட்டு இங்க உள்ளவனுககிட்ட வாய்கிழிய பேசனும். அதத்தான் எதிர்பாக்குறானுக. வரலனாலும் விட்ருவானுகளா..? என்னைக்கு இருந்தாலும் போயித்தானே ஆகனும். அத இன்னைக்கே போயித் தொலையிறது நல்லதுதானே…? முணுமுணுத்துக்கொண்டே காலரைத்தூக்கிவிட்டு வெறுங்கையால் கழுத்தை துடைத்து சட்டையில் அப்பிக்கொண்டார்.

மேலாளர் இவ்ளோ நேரமா என்ன பேசிருப்பாரு…. என்ற யோசனையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். எல்லோருமே உதடுகளைப் பிதுக்கி தெரியல என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

முத்துச்சாமியை உற்றுநோக்கினாள் ஈசுவரி. அவரோ எதையும் காட்டிக்கொள்ளாமல் எழுதிக்கொண்டு இருந்தார். முத்துச்சாமி தனது

வேலையில் மூழ்க நினைத்தாலும்… அதற்கு மனசு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தது.

மேலதிகாரி சொன்னா எல்லாத்துக்கும் தலையாட்டனுமா..? எல்லா என்னோட கெரகம். வீட்டுல என்னடானா கட்டிக்கிட்டு வந்தவ உசுர எடுக்கிறா. நேரங்காலம் தெரியாம அவ வறுத்தெடுக்குறதுக்கு இன்னொருத்தனா இருந்தா ஊரவிட்டே ஓடிருப்பான். ஐயோ…. இதுல வேற ரெண்டு பெத்திருக்கேனே. அதுக படுத்துற பாடு நிம்மதியா தூங்கக் கூட முடியல.

இவருக்கு என்ன பெரிய உத்யோகம். கை நிறைய சம்பளம் வாங்குறாரு. எந்தப் பிரச்சினையும் இல்ல. சந்தோசமா திரியுறாரு.. எனக்கு அப்படியா..?

ஒன்னாம் தேதியானா முதியோர் இல்லத்தில் இருக்க அம்மாவுக்கு பணத்தை கட்டணும். இல்லன்னா… போனுமேல போனுபோட்டு நச்சரிச்சுருவாங்க. பெத்ததுக ரெண்டும் மெட்ரிகுலேஷன்ல படிக்குது. அதுகளுக்கு மாசா மாசம் அவுக்கனும். இதுல ஊரு மெச்சுக்க தவணைல பொருள கொடுத்தவனுக கரெக்டா வந்துருவானுங்க. அப்புறம் பத்தாததுக்கு ஆவ தேவைன்னு அது வேற வந்துரும். ஏம்புட்டு சம்பாத்தியம் எவ்ளோனு தெரிஞ்சுக்கிட்டே பத்தாம் தேதிக்கு மேல என்னத்த சம்பாதிச்சு கிழிச்சீங்க. அவரு உங்கள மாறியா… இவரு உங்கள மாறியா… அப்பறம் செவரு உங்கள மாறியானு பழைய குருடி கதவ தொறடினு சுப்ரபாதம் பாட ஆரம்பிச்சுருவா…. அவகிட்ட பத்தாம் தேதிக்கிப் பொறவு ஒருவாய் சோறு திங்கிறதுக்குள்ள…. என முனுமுனுத்துக் கொண்டே தன் பணியை தொடர்ந்தார் முத்துச்சாமி.

மாலை மணி 5:10 என அலுவலக கடிகாரம் காட்டியது. எல்லோரும் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். கருணாவும் முத்துச்சாமியும் அவரவர் இருசக்கர வண்டியில் அசோக் நகருக்கு சென்று கொண்டு இருந்தனர். அலுவலகத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் இருக்கும்.

அசோக் நகர் மூணாவது வீதி வந்ததும் “முத்துச்சாமி… வலது பக்கம் திருப்புங்க இதுதான் நம்ம வீடு..” கருணா சொன்னதும் வண்டியின் வேகத்தைக் குறைத்தார்.

என்ன சார்…. எவ்வளவு பெரிய ஆளு நீங்க இவ்ளோ… பெரிய டவுன்ல ஓட்டு வீடா என்பது போல் முத்துச்சாமியின் கண்கள்

வார்த்தைகளை தொடுத்தன. கண்களின் சொற்களைப் புரிந்துகொண்டு மெல்லியதாய் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தது அவரது உதடுகள்.

வீட்டுக்குள் குழந்தைகளின் சத்தம் கல்குவாரியில் வெடிக்கும் வேட்டுச் சத்தத்தைப்போல் டுமீல்….டுமீல்…. எனக் கேட்டது.

கருணாவின் வண்டி சத்தத்தை கேட்டதும் காற்று புகாத வண்ணம் வீட்டுக்குள் அமைதி.

“எல்லார் வீட்டையும் போல இங்கேயும் புள்ளைக தொல்லையோ.. சொன்னதுக்காக இவ்ளோ தூரம் வந்தது வந்துட்டோம். ஒரு டீயோ.. காப்பியோ…. கெடைக்கிறதக் குடிச்சுட்டு வெரசா கெளம்ப வேண்டியதுதானே.. மனசுக்குள் நொந்து கொண்டார் முத்துச்சாமி.

வாசல் கதவைத் திறந்ததும் ம்….. வாங்க வாங்க நல்லா இருக்கீங்களா..? நான்தான் அவங்க தங்கச்…சீ. இருந்து சாப்பிட்டுதான் போகணும். கி….கி….ஈ….ஈ…. வெயில்ல வந்தியலோ. அதான் கருத்திட்டிங்க. ம்…கீ…சீ… வாங்க வாங்க இப்பதான் வந்தீங்களா..? க்ம்… ஆ…ஆ. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அத்தனை பல்லையும் ஒட்டுமொத்தமாய் காட்டி நாலஞ்சு வீட்டுக்கு கேட்கும்படி சிரித்துவிட்டு வாசலைக் கூட்ட ஆரம்பித்தாள் செண்பகம்.

வாசல்ல குப்பையே இல்லாட்டியும் கூட்டி சுத்தமா வச்சுக்கிறாங்களே…. ஓட்டு வீடா இருந்தாலும் சுத்தபத்தமாத்தான் இருக்குது. ஆம….. நானே ரோட்டுல பூசுன தார்மாறி அட்டக்கருப்பு.. இதுல வெயிலுல வந்ததால கறுத்துப்போயிட்டேனு இந்தம்மா நக்கலு வேற பண்ணுது. இதுதான் கிசும்புங்கிறது… ஆத்தாடி.. நமக்கெதுக்கு வம்பு… உயர் அதிகாரி வீட்டுக்கு வந்தோம்மா போனோம்மானு இருக்கனும்… முத்துச்சாமி மனசுக்குள் முணுமுணுத்தது முகத்தில் பளிச்சிட்டது.

முத்துச்சாமியை பார்த்து “என்ன ஆச்சு நின்னுட்டீங்க… வாங்க” என்றார் கருணா.

அப்போது மேல்தாழ்வாரத்தில் லொக்…லொக்…க்கூ என இருமல் சத்தம்.

“அப்பா மதியானம் சாப்பிட்டீங்களா..? கொஞ்சம் நேரம் காலாற நடக்கலாமா…?” உரக்கச் சொல்லிக்கொண்டே வாசற்படியை மிதித்தார் கருணா.

“க்…கூ… க்…கூ.வ்….வோவ் இன்னும் கொஞ்ச நேரம் ஆ…..கட்டும்பா” இருமிக் கொண்டே பேசினார் கருணாவின் அப்பா.

அப்பாவுக்கு பக்கவாதம். நடக்கிறது ரொம்ப செரமம். தூக்கி பிடிச்சுக்கிட்டா ரெண்டடி எடுத்து வைப்பாரு. ஆஸ்துமாவும் சர்க்கரையும் கூடவே இருக்குல… படுத்தே கெடக்குற உடம்ப காத்தாட ரெண்டடி எடுத்துவச்சா ஒருமாறியா இருக்கும்ல. என்ன நானு சொல்றது சரிதானங்க..? சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வீட்டுக்குள் இருந்து வரவேற்பறைக்கு வந்தாள் மாலதி. ஓட்டு வீட்டின் வாசல் பக்க தாழ்வாரம்தான் கருணாவின் வரவேற்பறை.

“உள்ளே வாங்கண்ணே..” புன்முறுவல் பூத்தபடி அழைத்தாள்.

உட்காருங்க அண்ணே…. நாற்காலியை காண்பித்தவள் சட்டென சமையலறைக்குள் சென்றாள்.

“மாலதி இவரு எங்க ஆபீஸ்லதான் ஹெட் கிளாக்கா இருக்காரு. பேரு முத்துச்சாமி… ஏற்கனவே சொல்லிருக்கேன்ல…” பேசிக்கொண்டே மேல்பக்க தாழ்வாரத்துக்கு வந்த கருணா தன் அப்பாவின் கட்டிலுக்கு கீழிருந்த மூத்திர சட்டியை எடுத்து கழிப்பறையில் ஊற்றிவிட்டு கழுவினார்.

ம்…சரிங்க என்றவள் தனக்குள் அப்பாடா…..இப்பதான் இந்த மூத்திர நாத்தமே போகுது. மேனஜராத்தானே இருக்காரு…. சீக்கிரம் சொல்லிட்டு வர்றது இல்லயா… ஒருநாள பாத்தாப்ல இப்புடியா வர்றது. அப்புடி கரைட்டா வேலப்பாத்து பெருசா என்னத்த சேத்து வச்சுருக்காறாம். ம்….எங்குட்டோ சுத்தம் பண்ணுனா சரி… என பெருமூச்சு விட்டவள் முத்துச்சாமிக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

அப்பாவின் அறைக்கு வரும்போதெல்லாம் வழக்கம்போல் மாலதி என்ன நினைத்திருப்பாள் என நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார் கருணா.

இங்க என்ன நடக்குது… இவரு எதுக்கு என்னயக் கூட்டிவந்துருக்காரு…. என்கிற சிந்தனையோடு அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார் முத்துச்சாமி.

கால் கை முகம் கழுவி விட்டு உள்ளே வந்த கருணாவிடம் “சார் உள்ள வரும்போது குழந்தைங்க கத்துற சத்தம் கேட்டுச்சு… ஒரு வேளை டீவி சத்தமோ…..” தனது சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ள கேட்ட முத்துச்சாமியிடம்,

ம்… அதுவா இப்ப பாருங்க நீங்களே புரிஞ்சுக்குவீங்க என்றவர்…

“ம்……ம்……எனக்கு எல்லாம் தெரியும்.. நா… கண்டுபுடிச்சிட்டேன்.. நா…. இப்போ…. போன் பண்ண…. போறேன்…” என்று தனது வலது கையால் போன் பேசுவது போல் காதில் வைத்து அ………லோ என்றதுதான் தாமதம்.

அலோ… அப்பா… நா… ஐ…ச்சீ பேசறேன்..”

. அப்புடியா…. ஆம.. எந்த ஊர்லருந்து பேசுறீங்க..?

நா…ஊட்டி… ஐ.. ச்சீ பேசுறேன்.

ஊட்டில என்னோட பெரிய மயன் சுதாகர்தானே ஐச்…சீ.யா இருக்காரு.

அச்….சோ அப்பா…. நான்தான் சொல்லிக்கொண்டே ஓடிவந்த ஐந்து வயது சுதாகர் கருணாவின் கால்களை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டான்.

கீழே குனிந்து அவனிடமிருந்து இரண்டு கன்னத்திலும் முத்தத்தை பெற்றுக் கொண்டு தானும் பதிலுக்கு அவனை முத்தமிட்டார்.

ம்…. டாக்டர் ஒருத்தரு இருப்பாரே. அவரு எங்க..? நானே கண்டுபிடிக்கிறேன்..” சொல்லிக்கொண்டே வீடு முழுவதும் தேட ஆரம்பித்தார்.

கதவு பின்புறம் கார்த்திக் ஒளிந்திருப்பது தெரிந்ததும்… தெரியாதது போல் ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டிருந்தார்.

எங்க ஆளையே காணோமே.. அ…..லோ ஐ ஜி சார். டாக்டர் எங்க இருக்காரு…? சுதாகரிடம் கொஞ்சலாக கேட்டார்.

அச்சோ அப்பா…. தெரியலையா ஒங்களுக்கு..? அந்…தாப் பாருங்க” என்று கதவை சுதாகர் சுட்டிக் காட்டவும் கண்களை உருட்டி விழித்துக்கொண்டு சிரிக்காமல் சிரித்தபடி ஓடி வந்து

கருணாவை கட்டி அணைத்துக் கொண்டான் மூன்று வயது மகன் கார்த்திக்.

நா… இஞ்சாப்ப இன்னின்… நீ… பாச்சலயா…? தனக்கான மழலை மொழியில் கார்த்திக்.

தேடித்……தேடி பாத்தேனா.. ஒன்ன கண்டே புடிக்க முடியலப்பா…. சின்னக் குழந்தை போல கைகளை விரித்துக் காட்டிய கருணாவை ஆச்சரியமாகப் பார்த்தார் முத்துச்சாமி.

நம்ம கலெக்டரையும் ஆபிஸர் அம்மாவையும் காணோமே….? தன் குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டே தன் முகத்தை விரல்களால் தடவியபடி நோட்டமிட்டார்.

அப்போது “அண்ணா.. இந்தாங்க காப்பி.. பாத்தீங்கள இவர… கூட்டி வந்த உங்கள கவனிக்காம பசங்களோட வெளையாடப் போயிட்டாரா… அவரு எப்பவுமே இப்புடித்தான்… சொல்லிக்கொண்டே காபி குவளையை மாலதி கொடுக்கவும் வாங்கிக் கொண்டார் முத்துச்சாமி. காப்பியை குடித்துக்கொண்டே வீட்டில் நடப்பவற்றைக் கவனித்தார்.

என்ன பாக்கறீங்க..? காபி குடிச்சுக்கிட்டே கொஞ்ச நேரம் டீ…வி பாருங்க… இவங்ககூட ஒரு ஆட்டத்தை முடிச்சிட்டு வந்தறேன்… பக்கத்து அறைக்குள் நுழைந்தார் கருணா.

பரவா இல்லைங்க சார்… முத்துச்சாமியின் முகம் வளர்பிறையாக ஒளிரத் தொடங்கியது.

ப்ளீஸ்…… நீங்களாவது…. அவங்க ரெண்டு பேரும் எங்கன்னு சொல்லக்கூடாதா என்று தரையில் கைகளை ஊன்றி குனிந்தார் கருணா.

யோ…. இன்ன குயிய சொன்னீ… வலது ஆள்காட்டி விரலை ஆட்டி சிரித்தவாறு மிரட்டினான் கார்த்திக்.

“சரிங்க ஐயாவு நா குனிஞ்சுகிறேன்..” அவன் ஏறி அமர்வதற்கு ஏற்றார் போல் குனிந்து கொண்டார். குனிந்த உடன் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டான் கார்த்திக். அவனை சுமந்து கொண்டு குதிரை போல் நடந்து பக்கத்து அறைக்குள் நுழையும்போது ஓடி வந்து சுதாகரும் ஏறிக்கொண்டான்.

“சோ… மெதுவா போ குருதே…. ஜிக்குடி…ஜிக்குடி..” என்றபடி சொல்லிக் கொண்டே இருந்தான் கார்த்திக். குதிரையைத்தான் குருதே என்றான்.

“அச்சச்சோ மாமா கண்டுபுடிச்சிட்டீங்களே….” சிரித்துக் கொண்டே ஓடி வந்தான் ஏழு வயது அரசு.

ம்….. அப்புடின்……னா ஆபிஸர் அம்மாவும் இதுக்குள்ளதான்…. எனக்கு தெரிஞ்சிருச்சு… சிரித்துக் கொண்டே தலையாட்டினார் கருணா. பீரோ பின்பக்கம் இருந்து தலையில் முக்காடு போட்டவாறு….

“பே….பே…. நா தான் பூச்சாண்டி….. ப்…பே….” கத்திக் கொண்டே ஓடி வந்தாள் அஞ்சரை வயது சாதனா.

அம்…..மாடி…… பூச்சாண்டி என்று அனைவரும் கத்திக்கொண்டே வரவேற்பறைக்குள் ஓடி வந்தனர்.

மாமா பயந்துட்டீங்களா…? நான்தான் ஏமாத்துனேனே…. நல்லா பயந்தீங்களா… போங்க… சிரித்துக் கொண்டாள் சாதனா.

நீ என்னப்பா இப்படி பயமுறுத்துற. ம்…. நாங்கெல்லாம் பயந்துட்டோம். சரி….சரி….எல்லோரும் வந்துருக்க மாமாவுக்கு வணக்கம் சொல்லுங்க….” என்றார்.

மா…மா மயக்கம் என்றான் கார்த்திக்.

ஆம…ஆம…. மயக்கம்தான்…. சிரித்துக் கொண்டே கார்த்திக்கை தூக்கி முத்தமிட்டார் முத்துச்சாமி.

இப்போது முத்துச்சாமியின் முகத்தில் மகிழ்ச்சி இயற்கையாகவே வந்து அமர்ந்திருந்தது. அவருக்குள் இருந்த இறுக்கம் அவரை கைவிட தொடங்கியது.

என்னோட பையில பால்கோவா இல்லீ….யே…? தலையாட்டிக்கொண்டே சொன்னார் கருணா.

கண்டுபுடிச்சிட்டேன்…. அப்புடின்…னா பையில பால்கோவா இருக்கு. ஐ……யா நமக்கு சாலி…. சாலிதான்” துள்ளிக் குதித்தான் சுதாகர்.

ஓடிப்போய் பையை எடுத்து வந்து “இந்தாங்க மாமா” என்றான் அரசு. ஆளுக்கு ஒரு பாக்கெட் எடுத்து கொடுத்தார்.

ம்….. எனக்குச்…. சிஞ்சமா…. ஈக்கு… உதட்டைச் சுழித்தான் கார்த்திக்.

“நாளக்கு பெசுச்…..சா வாங்கி வரேன். போய் வெளையாடுங்க. மாமாக்கிட்ட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு மாமா போனதும் நா… வரேன்.

புள்ளைங்க கிட்ட விளையாடுறது அவ்வளவு ஆனந்தம். நமக்கு சொத்து சொகம் இவங்கதானே….. என்று ஆரம்பித்து இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தனர்.

பொழுது போனதே தெரியவில்லை. சற்று நேரம் கழித்து..

சார் மணி ஏழாயிருச்சு. அப்போ… நா… கெளம்புறேன்.. நா… வரேன்ம்….மா. மாலதியிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார் முத்துச்சாமி.

இருங்க முத்துச்சாமி வாசல் வரைக்கும் நானும் வரேன்.

“வாங்க… வாங்க எப்ப வந்தீங்க. வீட்ல எல்லாரும் சவுக்கியம் தானே..? நான் அவங்க தங்கச்சிதான். வெயில்ல வந்தியலோ…. அதான் இப்படி இருக்கீங்க. கி…கி….ஆ…. சாப்புட்டு போங்க சாப்புடுங்க… க்…..ஆ…..ஆ….ஆ…ஆ.. என்று பக்கத்து வீட்டுக்கு கேட்குமாறு சத்தமாய் சிரித்தவாறு வாசல் திண்ணையை தண்ணீர் விட்டு கழுவிக் கொண்டு இருந்தாள் செண்பகம்.

செண்பகத்தின் குரல் கேட்டதும் வீட்டுக்கு கிளம்பும் வேகத்தில் இருந்த முத்துச்சாமியின் நடையில் ஒரு சுணக்கம் விழுந்தது. செண்பகத்தை ஏற இறங்க பார்த்தார். உள்ள வரும்போதும் இதேதான் சொன்னாங்க.. இப்பவும் என்னம்மோ திரும்பவும் புதுசா பாக்குறமாறி அதையே சொல்றாங்க. இல்ல…. நம்மல கிண்டலு ஏதும் பண்றாங்களா….? திண்ணைய ஏற்கனவே தண்ணி ஊத்தி கழுவி பளிச்சினுதான் இருக்கு. அந்த ஈரம் கூட காயல. திரும்பவும் கழுவுறாங்க. ஒருமாறியா சிரிக்கிறதப் பாத்தா…. ச்சே… ஆளப்பாக்க அப்படியொன்னும் தெரியல… ஆனா பேச்சும் செயலும் அப்படித்தான்னு சொல்லுது… முத்துச்சாமியின் யோசனை கருணா பக்கமாக திரும்பியது.

“என்ன பாக்குறீங்க….? என் தங்கச்சி புருசன் நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட்ல செத்துட்டாரு. அதுல இருந்து இப்படித்தான்…. நம்ம சர்மா சார்கிட்டதான் காட்டிக்கிட்டு

இருக்கேன்…. குறிப்பால் உணர்ந்து பட்டுனு போட்டுடைத்தார் கருணா.

என்ன…து எவ்ளோ பெரிய சோகமான சேதிய பொசுக்குனு சொல்லிப்புட்டாரு. என்ன மனுசன்…யா நீ.. நமக்கு கேட்டவுடனே மனசு படபடக்குது… இவரு என்னடானா…. என்பதுபோல் கருணாவைப் பார்த்துவிட்டு,

சர்மா…… என இழுத்தார் முத்துச்சாமி.

“இதுக்கு அவர்கிட்டதானே காட்ட முடியும்..? பேசிக்கொண்டே வண்டி நிற்கும் இடத்திற்கு வந்தனர். இருள் சூழ்ந்த நகரின் காற்று வெளியில் ஆங்காங்கே மின்விளக்குகள் ஒளி பாய்ச்சி இருளை அகற்றிக்கொண்டு இருந்தன.

மூணு பிள்ளைகளும் பக்கத்துல கவர்மெண்ட் ஸ்கூல்லதான் படிக்குதுங்க. சின்னவன் பக்கத்துல பால்வாடி போறான்……

“எப்புடி சார்… உங்களால இவ்ளோ… மகிழ்ச்சியாக இருக்க முடியுது..” முத்துச்சாமியின் கண்கள் மீண்டும் கேள்வியை தொடுத்துக்கொண்டே இருந்தன.

கருணாவின் கண்களும் உதடும் மெல்லியதாய் சிரித்தன.

ஆமா… உடம்பு சரியில்லைன்னு சொன்னிங்களே. நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு மறுநாள் வாங்களே…

இந்த மனுசன் என்னைய ரொம்ப நாளைக்கு முன்னாடியே இங்க கூட்டி வந்துருக்கக் கூடாது… எண்ண அலைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்தன….

என்னங்க நா… சொன்னதுக்கு…. பதில் சொல்லாம ஏதோ யோசிக்கிறீங்க…

ஒரு யோசனையும் இல்லங்க சார். ஒடம்புக்கும் மனசுக்கும் ஒரு குறையும் இல்ல. நல்லா இருக்கு சார்….. சொல்லிக்கொண்டே வண்டியை நகர்த்திய முத்துச்சாமியை கவனித்த கருணாவின் கண்களும் உதடுகளும் மெல்லச் சிரித்தன.

முத்துச்சாமியின் எதிரே படர்ந்திருந்த மூடுபனி விலக ஆரம்பித்து இருந்தது. தெருவெங்கும் மின்விளக்குகள் பளீச்சென எரிந்து கொண்டு இருந்ததை அதிசயமாய் ரசிக்கத் தொடங்கினார்.

லொக்….லொக்…. இருமல் சத்தம் கேட்டதும். கருணாவின் கால்கள் அவரது அப்பா இருக்கும் அறை நோக்கி நடை போட்டன.

 

 

***********

Loading

2 Comments

  1. ஒவ்வொரு மனிதனும் தனது நிறை குறைகளை மனதிற்குள்ளே போட்டு புதைக்காமல் பிறரிடம் நம்பிக்கை ஆனவர்களிடம் வழி காட்டினால் மனநோய் என்பதே ஏற்படாது இதுவே இக்கதையின் முக்கிய கருத்து வாழ்த்துக்கள் மச்சான் சோழச்சி எழுத்தாளர் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.