கட்டுரைகள்

மத்திய கிழக்கில் ரஷ்ய வகிபாகம் …. ஈரான்….. இஸ்ரேல் போரில் நடுநிலமை? …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(ரஷ்யா பரஸ்பர உறவை இஸ்ரேல் – ஈரான் இருநாடுகளுடன் கொண்டிருந்தாலும், சமரச முயற்சிக்கு தலையிடுவது சாத்தியம் அற்றதாகவே புலப்படுகிறது. உண்மையில் அமைதியை நிலைநாட்டுவதில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டுமானால், ரஷ்யாவுக்கு ராஜதந்திர பலம் போதுமானதாக இருக்காது என்றே கருதப்படுகிறது)
மத்திய கிழக்கைப் பொருத்த வரையில், இந்தப் பிராந்தியம் பல முகங்களைக் கொண்டது. மதப் பிரிவினைகள், நம்பிக்கையின்மை, வெறுப்பு போன்றவை அதிகம் நிறைந்தது. தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமாகும் சூழ்நிலையில் சமரசம் ஏற்படுத்தும் சக்தியாக ரஷ்யா தலை எடுக்குமா என்பது பற்றி அரபுலகும், ஆசிய நாடுகளும் எதிர்பார்க்கின்றன.
இஸ்ரேல் – ஈரான் இருநாடுகளுடன் பரஸ்பர உறவை ரஷ்யா கொண்டிருந்தாலும், சமரச முயற்சிக்கு ரஷ்யா தலையிடுவது சாத்தியமற்றதாகவே புலப்படுகிறது.
உண்மையில் அமைதியை நிலைநாட்டுவதில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டுமானால், ரஷ்யாவுக்கு சமநிலையிலான ராஜதந்திர பலம் போதுமானதாக இருக்காது என்றே கருதப்படுகிறது.
மத்திய கிழக்கில் நீண்டகால பிணக்குகளால் மாஸ்கோ பயனடைகிறது என்றும் வாதிடப்படுகிறது. தற்போதய போர் முரணில் இஸ்ரேல் – ஈரான் முனைப்புப் பெற்று இருக்கையில்
மேற்கத்திய கவனத்தை ரஷ்யா உக்ரேனிலிருந்து திசை திருப்புமா எனவும் ஊகிக்கலாம். இஸ்ரேல்- ஈரான் மோதல் ஒரு பரந்த போராக விரிவடையும் பட்சத்தில், இப்பிராந்தியத்தில் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.
மத்திய கிழக்கில் சமரசம் செய்யும் சக்தி:
தற்போது மத்திய கிழக்கில் போரியல் மாற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது. 2015இல் சிரியாவில் ராணுவ நடவடிக்கைகளை மாஸ்கோ தொடங்கிய பின்னர், இந்தப் பிராந்தியத்தில் முக்கிய சக்தியாக அமெரிக்காவுக்குப் பதிலாக ரஷ்யா உருவாகியது.  அத்துடன் இந்தப் பிராந்தியத்தில் அதிகார சமரசம் ஏற்படுத்தும் சக்தியாகவும் மாறியது.
கடந்த பல ஆண்டுகளாக மேற்கு நாடுகளும் நேட்டோவும் மத்திய கிழக்கில், மாஸ்கோ அரசை பலவீனப்படுத்த முயற்சி செய்தன. அரபு நாடுகளுக்கு இடையில் உள்ளக் கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்தி இந்த முயற்சியில் நேட்டோ ஈடுபட்டது.
அதேவேளை சிரியா பிரச்சினையில் துருக்கிக்கும், மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட உரசல், ரஷ்யாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. அப்போது நேட்டோவுக்குள் பிளவை உருவாக்க மாஸ்கோ முயன்றது. ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக வான்பரப்பு பாதுகாப்பு ஏவுகணைகளைத் துருக்கி வாங்கியது குறித்து ஏற்கெனவே அமெரிக்கா அதிருப்தியில் உள்ளதும் அறிந்ததே.
ரஷ்யாவின் செல்வாக்கு வீழ்ச்சி:
உக்ரேனிய போரின் பின்னர், மத்திய கிழக்கில் ரஷ்யாவின் செல்வாக்கு குறைந்த அறிகுறிகள் தெரிகின்றன. தற்போது இஸ்ரேல்- ஈரான் போரை ஒரு பரந்த பிராந்திய மோதலாகவும், வல்லரசுகளுக்கு இடையே நேரடி மோதலுக்கும் கூட வழிவகுக்கும் என்ற அச்சம் அதிகமாக உள்ளது.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று IRGC-QF ஜெனரல்கள் மற்றும் நான்கு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டு, பாரிய ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் இஸ்ரேல் தண்டிக்கப்படும் என்று உச்ச தலைவர் அயதுல்லா கமேனி சபதம் செய்துள்ளார். அதே நேரத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதில் இல்லாமல் போகாது என்றும் கூறியுள்ளார்.
சிரியாவில் கால் பதித்த ரஷ்யா:
சோவியத் சிதைவின் பின்னர், ரஷ்யா கடந்த தசாப்தத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது செல்வாக்கை சிறிது சிறிதாக உயர்த்திக் கொண்டது. பெரும்பாலும் உள்ளூர் மோதல்களைப் பயன்படுத்திக் கொண்டது. இது சிரியாவில் மிகத் தெளிவாகத் தெரிந்தது. அங்கு நிகழ்ந்த உள்நாட்டுப் போரை ரஷ்யா பயன்படுத்திக் கொண்டது.
அத்துடன் சிரியாவில், ரஷ்ய தலையீடு 2015 இல் அசாத் ஆட்சியை உடனடி அழிவில் இருந்து காப்பாற்றியது.
பின்னர் ரஷ்யா தனது கால்தடத்தை சிரியாவில் விரிவுபடுத்தியதும் உண்மையே. அத்துடன் அதனது இராணுவத்தின் நிரந்தர இருப்பை நிறுவியது. 2019 இல் சிரியாவில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, ரஷ்யா அந்த வெற்றிடத்திற்குள் நுழைந்தது.
சிரிய அரசாங்கப் படைகள் நாட்டின் வடகிழக்கு பகுதியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற ரஷ்யா பாரியளவில் உதவியது. அதே ஆண்டு, ரஷ்யா எகிப்துடன் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்தியது. அந்த ஆண்டின் தொடக்கத்தில் எகிப்தில் ரஷ்யாவால் கட்டப்பட்ட அணுமின் நிலைய கட்டுமானம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சியை நிரூபித்தது.
சிரியா மற்றும் லிபியாவில் உறுதியற்ற தன்மையை பயன்படுத்தி ரஷ்யா தன்னை ஒரு பிராந்திய பாதுகாப்பு உத்திரவாதமாக நிலைநிறுத்திக் கொண்டாலும், இஸ்ரேல்- ஈரான் போர் தீவிரமடைந்தால் அது போன்ற பலன்களைப் பெற முடியாது என்பதும் வெளிப்படை.
உக்ரைன் போரில் தெஹ்ரான் உதவி:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, ரஷ்யா ஈரானுடனான தனது கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து அதிக பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஈரானிடமிருந்து ரஷ்யா பெறுகிறது.
மாஸ்கோவிற்கு ஆளில்லா வான்வழி அமைப்புகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை ஈரான் வழங்கியது. ஈரான் ஒரு முக்கியமான இராணுவ விநியோகத்தை ரஷ்யாவைடன் செய்துள்ளது. இந்த ஈரானுடனான நெருக்கமான உறவு, சர்வதேச தடைகளைத் தாங்கும் ரஷ்யாவின் திறனையும் மேம்படுத்தியுள்ளது.
தெஹ்ரானுடன் மாஸ்கோவின் வளர்ந்து வரும் நட்பு, மத்திய கிழக்கில் ரஷ்ய செல்வாக்கு மேலும் வலுவாக வளர்ச்சி அடைவதைக் குறிக்கிறது. ஆனால் இப்பிராந்தியத்தில் அதன் எதிர்கால பங்கு பாரியளவில் ஈரானுக்கு ஆதரவாக இருக்கும் என்பதை ரஷ்யா உணர்த்துகிறது.
மத்திய கிழக்கில் மாஸ்கோ அதன் நீண்டகால மூலோபாய நோக்கங்களை அடைய, அது தெஹ்ரானுடன் நெருங்கிய இராணுவ பணி உறவை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது .
ஏப்ரல் 1, 2024 அன்று சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கு அருகிலுள்ள கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய தாக்குதலை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. தற்போது ரஷ்யா-ஈரான் உறவின் பரிணாமம் இப்பகுதியில் ரஷ்யாவின் எதிர்கால நிரந்தர நிலைக்கான வெளிப்பாடாகும்.
அஜர்பைஜான் அரசுடன் நட்பு:
2015 ஆம் ஆண்டில் சிரியாவில் மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியபோது, சர்வதேச பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது தான் தங்கள் நோக்கம் என்று கிரெம்ளின் அரசு கூறியது. ஆனால் மத்திய கிழக்கில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை மீண்டும் உருவாக்குவது தான் முக்கியமான கருத்தாக இருந்தது என்பதே உண்மையாகும்.
கடந்த 2023 அக்டோபரில், போரில் அஜர்பைஜான் இராணுவப் படைகள் நாகோர்னோ-கராபக் என்ற இனரீதியிலான ஆர்மேனியப் பகுதியைக் கைப்பற்றியதால், முன்னாள் நட்பு நாடான ஆர்மீனியாவின் சார்பாக ரஷ்யா தலையிடத் தவறியது.
ஆயினும் ரஷ்யா தந்திரோபோயமாகவே ஆர்மேனியாவை கழட்டி விட்டதாகவும் கருதப்படுகிறது. அஜர்பைஜானுக்கு ஆதரவான ரஷ்யாவின் செயற்பாடு, இஸ்லாமிய நாடுகளுக்கு ஆதரவான நிலையை ரஷ்யா எடுத்துள்ளது. மத்திய கிழக்கில் ஒருபுறம் இருக்க, சோவியத்திற்குப் பிந்தைய கால கட்டத்தில் அரபு நாடுகளில் ஒரு ஸ்திரப்படுத்தும் சக்தியாக செயல்பட
ரஷ்யா முயல்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.