கட்டுரைகள்
சர்வதேச நீதிமன்றில் தென்னாபிரிக்கா வழக்கு ! போரை நிறுத்த இஸ்ரேலிடம் கோரிக்கை !!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(பொஸ்பரஸ் குண்டுகளை வீசியதும், மீட்பு மற்றும் நிவாரண முகாம்களை தாக்கியது, தஞ்சமடைந்த அகதிகளின் முகாம்களை அழித்தது, மருத்துவமனை, பள்ளிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி நோயாளிகளை கொன்றது, குழந்தைகளை கொன்றது போன்றவை போர் குற்றங்களாக பார்க்கப்படுகின்றன)
காசா போர்க் களத்தில் இஸ்ரேல் இனப்படுகொலையில் (South Africa Genocide Case Against Israel) ஈடுபட்டு வருவதாக தென் ஆபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
இஸ்ரேலின் இனப் படுகொலை:
காசாவில் ஹமாஸுக்கும் – இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐ.நாவின் அறிவுரைகளை ஏற்க மறுத்து இடைவிடாத தாக்குதலை பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டங்களை பதிவு செய்து வரும் நிலையில் தென் ஆபிரிக்கா ஒரு படி மேலேபோய் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
தென் ஆபிரிக்க அரசு இதுகுறித்து தெரிவிக்கையில், காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகள் இனப்படுகொலை தன்மை கொண்டவையாகும். காரணம், பாலஸ்தீன தேசத்தவர்கள் மற்றும் பாலஸ்தீனிய இனக்குழுவின் பெரும் பகுதியினரை அழிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தப்படுகிறது.
பாலஸ்தீனியர்களைக் காசாவில் கொலை செய்வதும், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறார்கள். அவர்களை உடல் ரீதியான பாதிக்கப்பட செய்து திட்டமிட்டு அவர்களின் வாழ்க்கை சூழலை மோசமாக்குவது சந்தேகமளிக்கிறது என்று தென் ஆபிரிக்கா அழுத்தமாக தனது எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறது.
ஏற்கனவே காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் நிற வெறி தாக்குதல்களுக்கு ஈடானவை என பல நாடுகள் விமர்சித்து இருந்தன. இஸ்ரேலும், தென் ஆபிரிக்காவின் ஐநாவின் உறுப்பினர்களாக உள்ள நிலையில், தென் ஆபிரிக்க அரசு தொடர்ந்து இருக்கும் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச நீதிமன்றம்:
சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) என்பது, ஐ.நா சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின்படி 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் 1946 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கியது.
இது முன்னர் இயங்கிவந்த நிரந்தர சர்வதேச நீதிமன்றம் (Permanent Court of International Justice) என்பதற்கான பதிலீடாகச் செயல்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பதும் அனைத்துலக அளவிலான நீதி வழங்குதலுடன் தொடர்புடையதாகும்.
இதன் உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், முறையான அதிகாரம் பெற்ற அனைத்துலக அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆகியவை முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய பணிகளாகும்.
இதன் வரலாற்றில் மிகக் குறைந்த வழக்குகளையே கையாண்டுள்ளது எனினும், 1980 களுக்குப் பின்னர் இந்நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில், வளர்ந்துவரும் நாடுகள் மத்தியில் ஆர்வம் காணப்படுகின்றது.
தென் ஆபிரிக்க அரசின் வழக்கு:
பாலஸ்தீனர்க்கு சொந்தமான பெரும் பகுதி நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்து அந்நாட்டு மக்கள், வழிபாட்டு தளங்கள் மீது பல ஆண்டுகளாக தாக்குதல்கள் நடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மட்டும் இதுவரை 8,800 குழந்தைகள், 6,300 பெண்கள் உட்பட 23,672 பேர் கொல்லப்பட்டு உள்ளார்கள். 8,663 குழந்தைகள், 6,327 பெண்கள் உட்பட 56,165 பேர் படுகாயமடைந்து உள்ளார்கள். இஸ்ரேல் தரப்பில் 1,405 ஆக உயரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
காசா மீதான இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பொஸ்பரஸ் குண்டுகளை வீசியதும், மீட்பு மற்றும் நிவாரண முகாம்களை தாக்கியது, போரில் ஈடுபடாமல் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்த அகதிகளின் தங்கியுள்ள முகாம்களை அழித்தது, மருத்துவமனை, பள்ளிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி நோயாளிகளை கொன்றது, குழந்தைகளை கொன்றது போன்றவை போர் குற்றங்களாக பார்க்கப்படுகின்றன.
சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள்:
இந்த சர்வதேச நீதிமன்றுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஐந்து நீதிபதிகள் என்ற அளவில் தேர்தல் நடைபெறும். சீனா மட்டும் சில ஆண்டுகாலத்திற்கு தன் நாட்டு நீதிபதியை இந்த குழுவில் கொண்டிருக்கவில்லை. ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, பிரான்சு, ரசியா உள்ளிட்ட நாடுகள் அனைத்து தடவைகளிலும், தங்கள் நாட்டு நீதிபதிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் நியமித்துள்ளன.
சர்வதேச நீதிமன்ற அமைப்பின் சட்டத்தின்படி, ஓர் நாட்டின் அடிப்படையில் அல்லாமல், உயர்ந்த குணங்களின் அடிப்படையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் பதவியில் உள்ல நீதிபதிகள் பிற இடங்களில் பணியாற்றக் கூடாது என்பது விதி. நீதிபதி ஒருவரை நீக்க நீதிமன்றத்தின் பெரும்பான்மையினரது வாக்குகள் தேவை. வழக்கின் நிலையைப் பொருத்து, தற்காலிகமாக நீதிபதிகள் இணைந்து கொள்ளலாம். அதிகபட்சமாக, ஒரு வழக்கிற்கு பதினேழு நீதிபதிகள் தீர்ப்பு வழங்க முடியும். நீதிபதிகளின் தீர்ப்புகள் ஒரே மாதிரியோ, வேறுபட்டோ இருக்கலாம். வேறுபட்டு இருந்தால், அதிகம் பேரின் கருத்துக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும்.
சம அளவில் வேறுபட்ட கருத்துகள் இருந்தால், தலைவரின் முடிவே இறுதியானது. ஐநா சபையின் சட்டத்தின் 93வது வரையரைப்படி, அதன் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர். ஐநா சபையில் இல்லாத நாடுகளும் இதன் உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம். சுவிட்சர்லாந்தும், நாவுருவும் ஐநா சபையில் இல்லாத போதே இதன் உறுப்பினராகச் சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் நிராகரிப்பு:
இஸ்ரேல் அரசு இனப்படுகொலையை தொடர்ந்து செய்வதாக தென்னாபிரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்ற புகாரை ஆதாரமற்றவை என்று இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் இனப்படுகொலை வழக்கின் இரண்டு நாள் பொது விசாரணை (11.1.2024) நடைபெற்றது.
அத்துடன் குறித்த வழக்கை கொண்டு வந்ததற்காக தென்னாபிரிக்காவை கடுமையாக சாடிய இஸ்ரேல் இந்த வழக்கை “அபத்தமானது” என்றும் இது “இரத்த அவதூறு” என்றும் கூறியுள்ளது.
காசா மீதான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் இடைநிறுத்த வேண்டும் என்பதற்கான அவசர நடவடிக்கைகள் அவசியம் என தென்னாபிரிக்கா விடுத்துள்ள வேண்டுகோள் குறித்தே சர்வதே நீதிமன்றம் விசேடமாக ஆராயவுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன், கொல்லப்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் நிறவெறி கொள்கை:
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா 1994 இல் முடிவடைந்த வெள்ளை சிறுபான்மை ஆட்சியால் திணிக்கப்பட்ட தனது நாட்டின் கடந்தகால நிறவெறி ஆட்சியுடன் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் கொள்கைகளை ஒப்பிட்டுள்ளார்.
பல மனித உரிமை அமைப்புகள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் கொள்கைகள் நிறவெறி என்றே கூறியுள்ளன. இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்குதல்களில் கடந்த மூன்று மாதங்களாக 22,500 க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களைக் கொன்றதுடன் முற்றுகையிடப்பட்ட பகுதியில் பரவலான அழிவை ஏற்படுத்தியது.
காசாவில் பாலஸ்தினர்களைக் கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மனத் தீங்கு விளைவிப்பது மற்றும் அவர்களின் உடல் ரீதியான அழிவைக் கொண்டு வருவதற்காக கணக்கிடப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை அவர்கள் மீது சுமத்துவது ஆகியவை அடங்கும்.
தென்னாபிரிக்கா காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை தன்மை கொண்டவை, ஏனெனில் அவை பாலஸ்தீனிய தேசிய, இன மற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கம் கொண்டவை என்று குற்றப்பத்திரிகையில் விவரித்து உள்ளது.