கட்டுரைகள்

2001 பொங்கு தமிழ் பிரகடனம்: அடக்கு முறைக்கு எதிரான பேரெழுச்சி! … நவீனன்.

தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி 2001 ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி இராணுவ அடக்குமுறைக்கு மத்தியில் யாழ் பல்கலைக்கழகத்தில் மக்கள் பேரெழுச்சியாக 2001 பொங்கு தமிழ் பிரகடனம் செய்யப்பட்டது.
பொங்கு தமிழ் பிரகடனத்தை நினைவுபடுத்தும் முகமாக அப்போதய யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நினைவுத் தூபியும் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொங்கு தமிழ் பிரகடனம் ஆனது, ஈழத்தில் இராணுவ அடக்கு முறைக்கு எதிரான மக்கள் பேரெழுச்சியின் உச்சமே இப் பிரகடனமாகும்.
இதன் முழுவிபரம் வருமாறு, “ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர தாயகத்துக்கான அடிப்படை அபிலாசைகளையும் நியாயங்களையும் சர்வதேசத்துக்கு ஒரே குரலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய தளமாக பொங்கு தமிழ் அமைந்தது.
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த தமிழரின் மரபுவழித் தாயகமும், அதனால் சிதைக்கப்பட்டிருக்கும் தன்னாட்சி உரிமையையும் வேண்டிநின்ற தமிழ் மக்கள், தமிழ் தேசியத்தின்பால் தாம் கொண்டுள்ள ஆழமான விடுதலை உணர்வை வெளிக்கொணர்வதற்கும், வலியுறுத்துவதற்குமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழகத்தில் மக்கள் பேரெழுச்சியாக திரண்ட நிகழ்வே ‘பொங்கு தமிழ்’ ஆகும்.
இதனைத் தொடர்ந்து, ஈழத்தின் அனைத்து மாவட்டங்களிலும், புகலிட தேசங்களிலும் பொங்கு தமிழாய் எம் மக்கள் விடுதலைக்காய் பேரெழுச்சி கொண்டனர்.
ஈழப்போரின் உச்சக்கட்ட காலங்கலான 2001இல் யாழ். மண்ணில் இராணுவத்தினரின் அடக்குமுறைகளையும், கொலை அச்சுறுத்தல்களையும், வீதி மறிப்புக்களையும், கெடுபிடியான சோதனை நடவடிக்கைகளையும் தாண்டி, குடியிருப்புக்களின் மதில்களினால் பாய்ந்தும், குறுக்கு பாதைகளினாலும் இளைஞர்கள், முதியவர்கள், மதகுருமார், பெண்கள், மாணவிகள் என்ற பாகுபாடின்றி திரண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுடன் பேரெழுச்சி கொண்டு 2001ஆம் ஆண்டு பொங்குதமிழ் பொங்கிப் பிரவாகித்து நின்றது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கொடுமைகளுக்கு எதிராகவும் தமிழ் தேசத்தின் திட்டமிட்ட அழிப்பிற்கு எதிராகவும் அவற்றைத் தகர்த்தெறிந்து எழுச்சி கொண்டு தமிழ் மக்கள் தமது உரிமைக் குரலை உயர்த்தி வெளிப்படுத்திய எழுச்சி மிக்க பிரகடனமே பொங்கு தமிழாகும்.
இந்நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைகின்றது. எனினும் பேரினவாத அடக்கு முறைக்குள் சிக்குண்டு எமது தேசத்தின் தாங்குதூண்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழர் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்க பின்வரும் தீர்மானங்களை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழகத்தில் மக்கள் பேரெழுச்சியாக ‘பொங்கு தமிழ்’ பிரகடனம் அறைகூவப்பட்டது.
1. வடக்கு கிழக்கு இணைந்த தமிழரின் தாயகம் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
2. தமிழரின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
3. தமிழ் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தி இப்பிரகடனம் வெளியிடப்பட்டது.
பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு :
யாழ்.பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நிறைவு நாள்  கடைப்பிடிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர்.
இதன் போது, யாழ். பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தும் மேற்கொண்டு வந்த தமிழ் தேசிய நிலைப்பாடு தற்போது அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது.
இந்த நிறைவு நாளில், பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இவ் எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
இரண்டு தசாப்தங்கங்களை கடந்த நிலையிலும் பொங்கி வழிந்த பொங்குதமிழ் பிரகடனம் ஈழத்தமிழரின் விடுதலை வேட்கையை இன்னமும் ஓர்மத்துடன் பேணி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.