கட்டுரைகள்
தைப்பொங்கலும் மாட்டு வண்டிச் சவாரியும்: ஈழத் தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டு! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.
ஆதிகாலத்தில் உழவுத் தொழிலே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்து வந்துள்ளது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த மாடுகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைத் தொன்று தொட்டுக் கொண்டாடி வருகின்றனர்.
தைப்பொங்கலும் மாட்டு வண்டிச் சவாரியும்:
தைப்பொங்கல் தமிழர் திருநாளாகும். உழவர் திருநாள் என்றும் இதை அழைப்பர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று சொல்வதற்கமைய தையே தமிழரின் புத்தாண்டு என்றும் கூறிடுவர்.
தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல், அல்லது பட்டிப் பொங்கல் என்று சொல்லி, உழவர்களுக்குத் துணையாக இருந்த மாடுகளுக்குப் பொங்கிப்படைப்பது தமிழர் வழமை.
புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் ‘தைத்திங்கள்’ பற்றிக் குறிப்புகள் இருக்கின்றன. ‘தைத்திங்கள் தண்கயம் படியும்,’ ‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம்.
சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரத்தில் இந்திரவிழாவான பொங்கல் பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. ‘வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும்..’ என்று உழவுத் தொழில் பற்றி ஒளவையார் குறிப்பிடுகின்றார். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் – உழந்தும் உழவே’ என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
தைப்பொங்கல் என்றாலே தமிழ் மக்களின் வாழ்வில் விழாக்கோலம் தோன்றிடும் பண்டிகைக் காலமாக அமைந்திடும். தமிழ் மக்களின் வாழ்வில் புது விடியலாக பிறக்கும் தைப் பொங்கல் நாட்களிலேயே , தமிழரின் வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு தமிழகத்திலும், மாட்டு வண்டிச் சவாரி ஈழத்திலும் செழிமையாக காலங்காலமாக நடாத்தப்படுகிறது.
தமிழரின் பாரம்பரிய விளையாட்டு :
தை பிறந்த பின்னரே உழவரின் வாழ்வும் சிறப்படையும். உழவர்களின் வாழ்வியல் திறமைகளை வெளிக்கொணரும் விளையாட்டே மாட்டு வண்டிச் சவாரியாகும்.
விழாக்கோலம் தோன்றிடும் பண்டிகைக் காலமாக அமைந்திடும் தைப்பொங்கல்
தமிழ் மக்களின் வாழ்வில் புது விடியலாக பிறக்கும். தமிழரின் வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு தமிழகத்திலும், மாட்டு வண்டிச் சவாரி ஈழத்திலும் செழிமையாக காலங்காலமாக தைப் பொங்கல் நாட்களிலேயே விமர்சையாக நடாத்தப்படும்.
ஈழத்தில் தமிழர்களுக்கே உரித்தான பாரம்பரியம் மிக்க விளையாட்டுக்களில் ஒன்றாக மாட்டு வண்டிச் சவாரி விளங்குகின்றது. மாட்டு வண்டிச் சவாரி ஆரம்ப காலம் தொடக்கம் தற்காலப் பகுதி வரையில் சிறந்ததொரு வீர விளையாட்டாகவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பிப் இரசிக்கப்படும் விளையாட்டாகவும் காணப்படுகின்றது.
மாட்டு வண்டிச் சவாரி தமிழர்களின் பண்பாட்டை ஒருபுறம் அடையாளங் காட்டி நிற்க, மறுபுறம் விவசாயத்தின் முதுகெலும்பான தரமான காளைகளை வளர்க்கும் கால்நடை வளர்ப்பின் முக்கிய உந்து சக்தியாகவும் அது காணப்படுகின்றது.
சவாரிக்கான மாடுகள் அவற்றின் பிறப்பிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இது ஒரு வீர விளையாட்டு என்ற காரணத்தினால் சவாரி வண்டியில் பூட்டப்படும் காளை மாடுகளும் கம்பீரமும், வீரமும் மிக்கவையாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
யாழில் மாட்டு வண்டிச் சவாரி :
ஏறு தழுவுதல் தமிழ் நாட்டின் வீர விளையாட்டு என்றால் ஈழத் தமிழர்களின் வீர விளையாட்டாக மாட்டு வண்டிச் சவாரி அமைகிறது. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது. முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு. திருகோணமலை ஆக்கிய இடங்களிலும் மாட்டு வண்டிச் சவாரி காலம் காலமாக தொடர்வதை நாம் அவதானிக்கலாம்.
அக்காலப்பகுதிகளில் யாழ்பாணம் முழுவதும் பிரபலமான சவாரி ஓட்டுநர்களாக அளவெட்டி சிவஞானம், சவாரிக்கார வன்னித்தம்பி, பண்டத்தரிப்பு தங்கராஜா, சவாரிக்கார சபாபதி, சிதம்பரப்பிள்ளை, கரவெட்டி இளையாம்பி போன்றவர்கள் காணப்பட்டனர். மாட்டு வண்டில் சவாரியைப் பொழுதுபோக்காக மாத்திரமன்றித் தொழிலாகவும் செய்தவர்கள் பலருளர். அவ்வாறு மாட்டுவண்டிச் சவாரித் தொழிலில் ஈடுபடுவோரை ‘சவாரி’ என்றே அடைமொழிவைத்து அழைப்பதும் பழக்கத்தில் இருந்துள்ளது. சவாரி வண்டிலில் ஆசனப் பலகையில் இருந்து மாடுகளை சுறுசுறுப்பாக அவர் வழி நடத்திச் செல்லுவார்.
தினகரன், ஈழநாடு நாள் ஏடுகள் நடத்திய போட்டி மாட்டுச் சவாரியைத் தேசிய விளையாட்டு நிலைக்கு உயர்த்தின என்றால், 1974 இல் நடந்த அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இக்கலையை அனைத்து உலக நிலைக்கு உயர்த்தியது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்து மக்கள் பார்த்துச் சுவைத்த இப்போட்டியை வேளிநாடுகளில் இருந்து வந்த பார் வையாளர் பார்த்துப் பாராட்டினர். கைதட்டி மகிழ்ந்தனர். தமிழ் நாட்டில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடந்த அனைத்துலகத் தமிழ் மாநாடுகளின்போது சல்லிக்கட்டுக் காளை விளையாட்டு எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. அதேபோன்ற பாராட்டு யாழ்ப்பாணத்துச் சவாரிக்கும் கிடைத்தது.
யாழ்ப்பாணத்துக் கமக்காரர் மட்டும் சவாரியில் ஆர்வம் உடையவர்களெனக் கொள்தல் பொருந்தாது. கோப்பாய் நாகநாதன், தமிழரசுத் தந்தை சா. ஜே. வே. செல்வநாயகம், சட்டத்தரணி “ஐயக்கோன் ‘ செல்லத்துரை போன்றவர் இக்கலையில் பெரும் ஈடுபாடுடையவர். இக்கலையை நவீன மயப்படுத்தி விதிமுறைகளை ஏற்படுத்தவேண்டும் என்பதில் கற்றவர் பலரும் ஆர்வம் காட்டி வந்தனர்.
அரசாங்க அலுவலராகக் கடமை புரிந்த “இலங்கையர்கோன்” சிவஞானசுந்தரம், ‘சவாரி’ செல்வரத்தினம், அரசாங்க மரக்
கூட்டுத்தாபன உத்தியோகத்தர் சுன்னாகம் இ. இளையதம்பி போன்றோர் ஈழத்தில் மாட்டுவண்டிச் சவாரிக்கு பெரும் பணி ஆற்றியுள்ளனர்.
ஈழத்தில் மாட்டுவண்டிச் சவாரியானது ஒரு இடத்தில் நடக்கப்போகின்றது என்றால், அது அனைவருக்கும்; பெரும்பாலும் ஊடகங்கள் வாயிலாகத் தெரியப்படுத்தப்படுகின்றது. ஆரம்பகாலங்களில் இந்தப்போட்டியானது நீர்வேலி சவாரித்திடல், முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளம், முழங்காவில், கிளிநொச்சி, மன்னார், கரவெட்டி, ஆவரங்கால் போன்ற இடங்களில் பெரும்பாலும் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.
எமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு எமது அடுத்த தலைமுறையிரிடம் இருப்பதால் இவ் விளையாட்டுக்களை பற்றி, முக்கியமாகப் புலம்பெயர்ந்த அடுத்த தலைமுறையினருக்கும் அறியத்தருவோம்.
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தையும், பழந்தமிழ் வீர விளையாட்டுக்களையும், தமிழ் பண்பாட்டு விழுமியங்களையும் பேணிப் பாதுகாப்பது தாயக மக்களின் கடமை மாத்திரமன்றி, புலம்பெயர் தமிழர்களின் பெருங்கடமையும் காலத்தின் கட்டாயமுமாகும்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா.