வாக்கு மூலம்!…. 99 …. தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.
தமிழர் அரசியல் பொதுவெளியில் 2024 முதல் மாற்று அரசியல் அணி மேற்கிளம்ப வேண்டும்
சென்ற வாரத் தொடர்ச்சி பகுதி 2 …
தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஓர் எச்சரிக்கை ஆண்டாக இருக்கப்போகின்ற 2024 ஆம் ஆண்டைத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு எதிர்கொள்வது .
தமிழ் அரசியல் பொதுவெளியில் மிகப் பழமையான கட்சிகளெனக் கருதப்படும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும் (தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனும் பெயர்ப் பலகையை மாட்டிக்கொண்டுள்ளது) இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அவற்றின் அரசியல் செயற்பாடுகளைப் பொறுத்தவரை அவை இதுகாலவரையும் கூறிவந்த அரசியல் இலக்குகளை அடையமுடியாதவாறு கையாலாகாதவையாகிக் காலாவதியாகிவிட்ட கட்சிகளாகும் . (Outdated parties) .
இவற்றின் வழமையான பாராளுமன்ற மரபுவழி அரசியல் செயற்பாடுகள் எதுவும் இனிமேலும் தமிழ்மக்களுக்கு எந்தவிதமான சமூகபொருளாதார ஏற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. பழமையான கட்சிகள் என்பதற்காகவோ முறையே அமரர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ( தந்தை செல்வா ) ஆகிய தலைவர்களினால் உருவாக்கப்பெற்ற கட்சிகள் என்பதற்காகவோ வினைத்திறனற்ற இக்கட்சிகளை இன்னும் வைத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை . அதனால், இந்த இரு கட்சிகளும் 2024 இல் எந்தவிதமான தயவுதாட்சண்யமுமின்றித் தமிழ்மக்களால் முதலில் முற்றாக நிராகரிக்கபட வேண்டியவையாகும் .
மூன்றாவது பழம்பெரும் கட்சியான ( தற்போது வீ.ஆனந்தசங்கரியைச் செயலாளர் நாயகமாகக் கொண்ட) தமிழர்விடுதலைக் கூட்டணி தற்போது தனித்துவிடப்பட்டுள்ளது . இக்கட்சியும் பாராளுமன்ற மரபுவழி அரசியலுக்கே இசைவாக்கம் அடைந்துள்ளதால் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் , இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகிய கட்சிகளைப் போல் இதுவும் காலாவதியான கட்சியெனக் கருதப்பெற்று நிராகரிக்கப்பட வேண்டியதொன்றே .
தமிழரசுக் கட்சியிலே வடமாகாண சபைத் தேர்தலிலே நிறுத்தப்பட்டு – வடமாகாண முதலமைச்சராகி – வடமாகாண சபையின் ஆயுட்காலம் முடிந்தபின்னர் தமிழரசுக்கட்சியை விட்டுப் பிரிந்து சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையிலான ஈபிஆர்எல்எஃப் ஐத் தமிழ்மக்கள் தேசியக்கூட்டணி எனப் பெயர்மாற்றம் செய்யவைத்து அக்கட்சியின் தலைவராகவுமாகி 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக்
கூட்டணியிலே (மீன் சின்னம்) யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகிவந்தபின்னர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடமிருந்து விலகித் ‘தமிழ்மக்கள் கூட்டணி ‘ எனும் தனியான அரசியல் கட்சியை தேர்தல்கள் திணைக்களத்திலும் பதிவுசெய்துகொண்டு அக்கட்சித் தலைவராகவும் இருந்து அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சி.வி. விக்கனேஸ்வரனின் – அவர் தமிழ்த் தேசிய அரசியலில் இறங்கி அல்லது இறக்கப்பட்டு இதுவரையிலான அரசியல் வெளிப்பாடுகளைப் பொறுத்தவரை அவரது தற்போதைய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியானது புதிய கட்சியெனினும்கூட அதனையும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி வகையறாக்குள்ளேயே அடக்கி நிராகரிப்பதைத் தவிர வேறு வழியேதுமில்லை.
மேற்கூறப்பெற்றுள்ள அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் , இலங்கைத் தமிழரசுக் கட்சி , தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய நான்கு கட்சிகளையும் தவிர்த்தால் (நிராகரித்தால்), ஆயுதப் போராட்ட இயக்கங்களாகவிருந்து 1987 இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தையடுத்து ஜனநாயக வழிக்கு மீண்டு தம்மை அரசியல் கட்சிகளாக்கிக் கொண்ட (தற்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான) ஈழமக்கள்புரட்சிகர விடுதலை முன்னணி ( EPRLF ) , தமிழீழவிடுதலைக் கழகம் (TELO) , ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF / PLOTE) மற்றும் ஈழவர் ஜனநாயக முன்னணி ( EROS ) ஆகிய நான்கு கட்சிகள் உள்ளன.
மேற்கூறப்பெற்ற எட்டுக்கட்சிகளுள் ( வீ.ஆனந்தசங்கரியைச் செயலாளர் நாயகமாக் கொண்ட) தமிழர் விடுதலைக்கூட்டணியைத் தவிர்த்து ஏனைய கட்சிகளான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி), இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எஃப், ரெலோ, புளொட் , ஈரோஸ் மற்றும் தமிழ்மக்கள் கூட்டணி ஆகிய ஏழு கட்சிகளையுமே தற்போது தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ எனத் தமிழ் ஊடகங்கள் குறிசுட்டு வைத்துள்ளன. இந்த ஏழு கட்சிகளும் எப்போதும் ஏட்டிக்குப் போட்டியாக அவ்வப்போது தனித்தோ அல்லது அரைகுறையாகக் கூட்டுச் சேர்ந்தோ எதிர்ப்பு அரசியலையே தமது அடிப்படைக் குணாம்சமாக வெளிப்படுத்தி வந்துள்ளன. மட்டுமல்லாமல் தமிழ்த்தேசியம் எனும் போர்வையைப் போர்த்திக்கொண்டு அல்லது பெயர்ப்பலகையை மாட்டிக் கொண்டு தம்மைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலிகளாக – முகவர்களாக – தீவிர ஆதரவாளர்களாகவும் அடையாளப்படுத்தியுமுள்ளனர் .
இதனால் ‘தமிழ்த்தேசியக்கட்சிகள்` எனக் குறிசுட்டுக்கொண்ட- புலி முத்திரை குத்தப்பெற்றுள்ள இக்கட்சிகளில் எதனையும் தனியாகவோ கூட்டாகவோ இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்கள் – பாதுகாப்பு ஆலோசகர்கள் – புலனாய்வுத்துறையினர் நம்பவில்லை . காரணம் 1987 இல் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஏமாந்த அனுபவம் ஏற்கெனவே இந்தியாவுக்கு இருக்கிறது . இந்தியாவைப் பொறுத்தவரை அது தமிழீழ விடுதலைப்புலிகளிடம் (தமிழ்த் தேசியத் தரப்பிடம்) ‘சூடுகண்ட பூனை’ யாகும் . ஆதலால், மேற்கூறப்பெற்ற ‘தமிழ்த்தேசியக்கட்சிகள்’
தமிழ்மக்களால் தேர்தல்களில் பெருவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்கூட இக்கட்சிகளால் தனித்தோ அல்லது கூட்டாகவோ முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்று இந்தியா செயலில் இறங்காது.
13 ஆவது திருத்தத்தைத்தானும் அமுல் செய்வதில்கூட இந்தியா ”அசிரத்தை’யாக இருப்பதற்குரிய காரணம் அல்லது ‘தலையீடு’ செய்வதற்கான தடை – அடைப்பு (Bottle neck) இதுவேயாகும்.
அன்றியும் , மேற்கூறப்பெற்ற எட்டுக்கட்சிகளினதும் கடந்தகாலங்களை – வினைத்திறனை எடுத்து நோக்கினால் , காலஞ்சென்ற அ.அமிர்தலிங்கத்தைச் செயலாளர் நாயகமாகக்கொண்ட அப்போதைய (1976/1989) தமிழர் விடுதலைக் கூட்டணியையும் தோழர் பத்மநாபாவைச் செயலாளர் நாயகமாகக் கொண்டு செயற்பட்ட அப்போதைய (1987/1990) ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்) யையும் தவிர ஏனைய கட்சிகளெதுவும் தமிழ்மக்களுக்கு எந்த அரசியல் அடைவையும் பெற்றுத்தரவில்லை .
தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரை அதன் ஸ்தாபகத்தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் (தந்தை செல்வா) தலைமையிலான அல்லது அவரது வழிநடத்துதலுக்குட்பட்ட காலத்தில் எந்த அரசில் அடைவுகளையும் எய்தாவிட்டாலும்கூட அக்கட்சியின் சரிபிழைகளுக்கும் அப்பால் . குறைந்தபட்சம் எதிர்காலத்திலாவது- பின்னாளிலாவது ஓர் அரசியல் அடைவைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படையை – அரசியல் தளத்தை இலங்கையின் வடக்குக் கிழக்குமாகாணத் தமிழர்களைத் தமிழ்த்தேசியக் கருத்தியலை – ( தாயகம் – சுயநிர்ணய உரிமை- இறைமை) நோக்கி அரசியல்மயப்படுத்தியதனுாடாகக் கட்டமைத்தார்.
அந்தத் தளத்தில்தான் தமிழ்த்தேசிய அரசியல் அதன் பலம் பலவீனங்களுக்கும் அப்பால் கோட்பாட்டுரீதியாகக் கட்டியெழுப்பப்பட்டது. இதனை எவ்வாறு மறுக்க முடியாதோ அதுபோலவே, அப்போதைய ( 1976/1989 ) தமிழர் விடுதலைக் கூட்டணியையும் அப்போதைய ( 1987/1990 ) ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியையும் பொறுத்தவரை அக்காலகட்டத்தில் இக் கட்சிகளின் செயலாளர் நாயகங்களாக விளங்கிய முறையே அ. அமிதலிங்கத்தினதும் தோழர் பத்மநாபாவினதும் வகிபாகமே, கடந்த எழுபத்தைந்து வருடகாலத் ( 1949 -2024 ) தமிழ்த்தேசிய அரசியலின் (குறைந்தபட்ச) அடைவான 1987 இல் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் அதன்விளைவான 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தையும் அதனூடாக, அதிகாரப்பகிர்வுப் பொறிமுறையாக மாகாண அரசு முறைமையையாவது பெற்றுத்தந்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. இதனை விளக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் , துரதிர்ஷ்டம் என்னவெனில் இந்த இரு தமிழ்த் தேசியத் தலைவர்களையும் ( அ.அமிர்தலிங்கம் மற்றும் தோழர் பத்மநாபா) இந்த இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் நெம்புகோலான இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியையும்
தமிழ்மக்களின் மீட்சிக்காக ஆயுதமேந்தியதாகக் கூறிய தமிழீழ விடுதலைப்புலிகளே படுகொலை செய்தார்கள் . இது உலகறிந்த விடயம் .
பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாகப் படம் பிடித்து வெளிக்காட்டுவதற்கும் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் இருந்த நியாயங்கள் புதையுண்டு போவதற்கும் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளுக்கு இலங்கைத் தமிழர்கள் மீதிருந்த கரிசனையையும் அனுதாபத்தையும் அபிமானத்தையும் இழக்கச் செய்வதற்கும் இப்படுகொலைகளும் பங்களித்தன.
விடுதலைப் போராட்டத்தில் எதிரி யார் ? நண்பன் யார் ? . துரோகி யார் ? தியாகி யார் ?. என்று இனம் காணும் சிந்தனைத் தெளிவில்லாத – தத்துவார்த்தத் தெளிவில்லாத தன்முனைப்புப் போக்கின் விளைவு இது.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பெற்ற காலத்தில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் (தந்தை செல்வா) உயிரோடிருந்திருப்பாரேயானால் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்தே நடந்திருப்பார் என்பதையும் இலங்கைத் தமிழர்களின் நேசசக்தியாக விளங்கிய / விளங்கவேண்டிய இந்தியாவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பகைத்துக் கொண்டதை ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார் என்பதையும் தற்போது தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் தம்மை மட்டும் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என நாமகரணம் சூட்டிக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும் வெளிநாடுகளில் – புலம் பெயர்நாடுகளிலுள்ள அவர்களது ‘வாரிசு’ களுக்காவும் இலங்கையில் ‘முகவர் அரசியல்’ (போலித் தமிழ்த் தேசிய அரசியல்) செய்யும் மேற்குறிப்பிட்ட எட்டுத் தமிழ் (தேசிய) அரசியல் கட்சிகளின் தலைவர்களில் எவரும்கூட மறுக்கமாட்டார்கள் மறுப்பார்களாயின் அன்று தந்தை செல்வா உயிரோடிருந்திருந்தால் அவரையும்கூடத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் போட்டுத் தள்ளியிருக்கும் என்பார்களா?
(அடுத்த பத்தியிலும் தொடரும் )