வாக்கு மூலம்! ….. 98 …. ……..தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.
தமிழர் அரசியல் பொதுவெளியில் 2024 இலிருந்து மாற்று அரசியல் அணி மேற்கிளம்ப வேண்டும்………தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.
பகுதி-1
2024 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. தமிழ் அரசியல் சூழலில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விடுக்கும் வழமையான சம்பிரதாயபூர்வமான புத்தாண்டுச் செய்திகள் அச்சு ஊடகங்களின் பக்கங்களையும் மின்னூடகங்களின் திரைகளையும் நிரப்பியுள்ளன. வழமைபோல் 2024 ஆம் ஆண்டும் திருப்தியான அரசியல் தீர்வுக்காகவும் – காத்திரமான அதிகாரப் பகிவுக்காகவும் ஏக்கமுடன் காத்திருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் அரசியல் தலைவர்களின் எந்தச் செய்தியும் நம்பிக்கையூட்டுவதாக இல்லையென்பதைக் கூறாமல் இருக்க முடியவில்லை. தத்தமது ( தேர்தல் ) அரசியல் நிலைப்பாடுகளில் நின்று கொண்டு அரைத்த மாவையே அரைத்து ஒவ்வொருவரும் ‘தனி ஆவர்த்தனம்’ வாசித்திருக்கிறார்கள்.
1999 ஆம்ஆண்டு தமிழரசுக்கட்சியின் தோற்றத்துடன் தொடங்கப்பெற்ற ‘தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட அரசியல்’ அதன் பலம், பலவீனம்; சரிபிழை; சாதித்தவை, சாதிக்க முடியாதவை என்பவற்றிற்கும் அப்பால் கூட்டிக்கழித்து ஒட்டு மொத்தமாக ஒரு ‘ஐந்தொகைக் கணக்குப் பார்த்தால் வெறுமனே உணர்ச்சிபூர்வமாகவும் – காலத்திற்குக் காலம் ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சியின் அதன்பின் இடையில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் இறுதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ( மீண்டும் தமிழரசுக் கட்சியின் ) பாராளுமன்றக் கதிரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நோக்கத்தையே முதன்மையாகக் கொண்டும் – ஆயுதப் போராட்ட காலத்தில் சாகசங்களைப் போற்றித் துதிபாடி மார்பு தட்டி மகிழ்ந்ததுமாகவே கடந்த எழுபத்தைந்து வருடங்களாகத் (1949-2023) தன்னைக் கட்டமைத்தும் வெளிப்படுத்தியும் வந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த விளைவு இருந்ததையும் இல்லாமற் செய்தமையே. இலங்கைத் தமிழர்கள் இதுவரை அடைந்துள்ள இழப்புகளுக்கும் இன்றைய கையறு நிலைக்கும் இதுவே காரணமுமாகும்.
இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தமிழர்களைச் சமூக பொருளாதார ரீதியாக ஏற்றமடையச் செய்வதற்கு ‘எதிர்ப்பு அரசியல்’ – போராட்ட அரசியல் (ஆர்ப்பாட்ட அரசியல்) – உணர்ச்சிமைய அரசியல் கைகொடுக்காது என்று
கருதி அவ்வப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுடன் ‘இணக்க அரசியல்’ செய்த அரசியல் கட்சிகளினாலும் தமிழ் மக்கள் திருப்தியடையும் வகையில் எதனையும் பெரிதாகச் சாதிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் அவ்வாறான ‘இணக்க அரசியல்’ கட்சிகளிடம் சகலரையும் உள்வாங்கிச் செயற்படும் மனப்போக்கும் குறைந்தபட்சம் ஒத்த எண்ணங்களையுடையவர்களுடனாவது இணைந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் செயற்படுவதற்குமான எந்தக் கரிசனையுமில்லாமல் தத்தம் கட்சிகளையும் அக்கட்சிகளின் தலைவர்களான தனிநபர்களையும் முன்னிலைப்படுத்தும் தன்முனைப்புக் குணாம்சம் மேலோங்கியிருந்தமையேயாகும். இக்கட்சிகளிடம் அரசியல்தீர்வை இலக்காகக் கொண்ட தொடர் முயற்சிகளைவிடவும் ஏனையகட்சிகளுடன் ஏட்டிக்குப் போட்டியாக அபிவிருத்தியைப் (உட்கட்டமைப்பு வசதிகளைப்) பிரதானமாகக் காட்டி மக்களிடம் வாக்குச் சேகரிக்கும் நோக்கமே அதிகமாக முனைப்புக் கொண்டிருந்தது.
அரசியல்தீர்வு என்பது இவ் ‘இணக்க அரசியல்’ கட்சிகளைப் பொறுத்தவரை வெறும் கொள்கையளவிலும் ( ஏட்டளவிலும் ) உதட்டளவிலுமே இருந்துவந்தன. அபிவிருத்தி என்பதன் உண்மையான அர்த்தம் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மட்டுமல்ல சமூகபொருளாதார கல்வி கலை இலக்கிய பண்பாட்டு ஆன்மீக மற்றும் சூழல் பாதுகாப்பு வளர்ச்சியையும் பிரதேச பாதுகாப்பையும் உள்ளடக்கியது என்பதையும் இவற்றை அடைவதற்கு அதிகாரப்பகிர்வை உள்ளடக்கிய அரசியல் தீர்வும் அவசியம் என்பதையும் தமது வசதிக்காகவும் – தாம் சார்ந்த அரசாங்கங்களின் தலைமைப்பீடங்கள் முகம் கோணாமலிருப்பதற்காகவும் இவ் ‘இணக்க அரசியல்’ கட்சிகள் மறந்தே செயற்பட்டன. ‘எதிர்ப்பு அரசியல்’ கட்சிகளும் (தமிழ்த் தேசியக் கட்சிகளும்) ‘இணக்க அரசியல்’ கட்சிகளும் தேர்தல்களத்தில் தமக்கிடையே மூர்க்கமாக மோதிக் கொள்வதிலும் ஒருத்தர் மீது ஒருத்தர் சேறடித்துக் கொள்வதிலுமே தமது நேரத்தையும் சக்தியையும் அதிகமாகச் செலவிட்டார்களேதவிர தாம் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் நலன் சார்ந்து புரிந்துணர்வுடன்கூடடிய கூட்டுச் செயற்பாடு (திரை மறைவிலும்கூட) இவர்களிடம் துளியளவும் இருக்கவேயில்லை.
இக்காரணங்களால் எதிர்ப்பு – போராட்ட அரசியலாலும் எதனையும் அடையமுடியவில்லை. இணக்க அரசியலாலும் எதனையும் உருப்படியாக அரசியல் தீர்வு விடயத்திலும் சாதிக்க முடியவில்லை; அபிவிருத்தியிலும் சாதிக்க முடியவில்லை. கடந்த எழுபத்தைந்து வருட கால அனுபவமாக இதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு- வடக்கு கிழக்குத் தமிழர்களுக்குக் கிடைத்துள்ளது.
இத்தகையதொரு பின்புலத்தில்தான் 2015 ஆம் ஆண்டுவாக்கில் குறிப்பாக 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் பராளுமன்றப் பொதுத்தேர்தல் காலத்தில் இலங்கைத் தமிழர்களுடைய- வடக்குக் கிழக்குத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் ‘மாற்று அரசியல்’ கருத்தியல் தோற்றம் பெற்றது. இம் மாற்று அரசியலை அல்லது கோட்பாட்டைத் தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் விதையூன்றியதிலும் அதனை முன்னெடுத்ததிலும் எத்திரி கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரனைத் தலைவராகவும் இப்பத்தி எழுத்தாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணனைச் செயலாளராகவும் கொண்ட ‘அகில இலங்கை தமிழர் மகாசபை’ எனும் அரசியல் கட்சிக்குப் பிரதான வகிபாகமும் பங்கும் உண்டு. 2015 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் இக்கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் இதனை வெளிப்படுத்திற்று.
இந்த ‘மாற்று அரசியல்’ என்பது அடிப்படையில் – உண்மையில் தனிநபர்களின் அல்லது தனிப்பட்ட கட்சியொன்றின் தேர்தல் வெற்றிகளை மட்டும் குறிவைக்காது – அவ்வெற்றிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்காது முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த சிந்தனைகளுடன் அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகளையும் அபிவிருத்தியையும் சமாந்தரமாகக் கொண்டுசெல்லும் வகையில் காலமும் களமும் அறிந்த அறிவுபூர்வமான அணுகுமுறைகளையும் – மூலோபாயங்களையும் – இராஜதந்திர வழி முறைகளையும் – இலக்கை அடைவதற்கான படிமுறைச் செயற்பாடுகளையும் கொண்ட ‘செயற்பாட்டு அரசியல்’ ஆகும்.
இந்த மாற்று அரசியல் – செயற்பாட்டு அரசியல் தமிழ் மக்களின் ஐக்கியம் கருதி தமிழர் அரசியல் தரப்பினர் அனைவரையும் உள்வாங்கிச் செயற்படுவதையே நோக்கமாகவும் கொண்டிருந்தது. இம்மாற்று அரசியல் சிந்தனையின் பிதாமகரான அகில இலங்கை தமிழர் மகாசபை தமிழ்த்தேசியக்கட்சிகள் உட்பட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் குறைந்தபட்சம் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும் விடயத்தில் மட்டுமாவது ஒரு பொது வேலைத்திட்டத்தின்கீழ் ஒன்றிணைய வைப்பதற்காகப் பகீரதப் பிரயத்தனம் செய்தது.
ஆனால் , துரதிர்ஷ்டவசமாகத் தம்மைத் ‘தமிழ்த்தேசிக்கட்சிகள்’ எனக் குறிசுட்டுக்கொண்டு ஏதோ தமிழ்த்தேசியத்தைத் தாங்கள் மட்டுந்தான் குத்தகைக்கு எடுத்தவர்கள் எனும் படியாகத் தமிழீழவிடுதலைபுலிகளுக்காக ‘முகவர் அரசியல்’ நடாத்தும் அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் (இவர்களையே ஜனநாயகரீதியான தேர்தல்களில் இலங்கையின் வடக்குக்கிழக்குத் தமிழர்கள் பெரும்பான்மையாக ஆதரித்து நிற்கின்றனர்.) நடைமுறைச் சாத்தியமான இம் ‘மாற்று அரசியல்’ – யதார்த்த அரசியல் –
செயற்பாட்டு அரசியல் தீண்டத்தகாதது ஆகிற்று. புலிசார் உளவியலிலும் தமிழ்த் தேசியக்கட்சிகளால் ஊட்டப்பட்ட உணர்ச்சிப் பிரவாகத்திலும் ஊறிப்போயிருந்த மக்களும் இம் மாற்று அரசியலை மனம்கொள்ளவில்லை.
2009 முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழ்மக்கள் அடைந்த பேரழிவுகளுக்குப் பின்னர்கூட தமது சுயலாப அரசியல் தேவைகளுக்காகத் தமிழ்த்தேசியக் கட்சிகளால் ‘தமிழீழம்’ அல்லது ‘சமஸ்டி’ அல்லது ‘புதிய அரசியலமைப்பினூடாக’ (13 ஆவது திருத்தத்திலும் பார்க்க) அதி கூடிய அதிகாரப் பகிர்வுக் கனவுலகிலேயே மக்கள் சஞ்சரிக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ்த் தேசியக்கட்சிகளின் போக்கு இதுவென்றால் அரசியல் ரீதியாக இந்த தமிழ்த் தேசியக்கட்சிகளுக்கு எதிரான அல்லது மாற்றீடான அரசியலை முன்னெடுத்த இணக்க அரசியல் கட்சிகள் தமது கட்சிகளின் (தேர்தல்) அரசியல் நலன்களையும் கட்சிகளின் தலைவர்களின் தனிநபர் நலன்களையும் விருப்பு வெறுப்புகளையும் துறந்து அல்லது விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்து இம் மாற்று அரசில் கருத்தியலுடன் இதயசுத்தியுடன் இணைந்துகொள்ளப் பின்வாங்கின. வெளிப்படையாகக் கூறப்போனால் ‘அகில இலங்கை தமிழர் மகா சபை’யுடன் ஒத்துழைப்பதில் பின்னடித்தன.
இதனால் இம்மாற்று அரசியலின் முதற்கட்டமாகவேனும் குறைந்த பட்சம் ஈழமக்கள் ஜனநாயக்கட்சி (ஈ.பி.டி.பி.) – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ( ரிஎம்விபி ) – தமிழர் விடுதலைக் கூட்டணி – அகில இலங்கை தமிழர் மகாசபை- தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் சமத்துவக் கட்சி ஆகிய ஆறு கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அகில இலங்கை தமிழர் மகாசபையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எந்திரி கலாநிதி கா.விக்னேஸ்வரனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு 09.04.2021 அன்று உருவான அதிகாரப்பகிர்வுக்கான இயக்கமும் (13ஆவது திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அர்த்தமுள்ளவிதத்திலும் அமுலாக்கம் செய்வதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதே இவ் அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் உடனடி இலக்காக அமைந்தது.) அதன் நீட்சியாகப் பின்னர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ்மக்கள் கூட்டணியையும் ஈழவர் ஜனநாயக முன்னணியையும் (ஈரோஸ்) இணைத்துக் கொண்டு கடந்த வருடம் 08.05 .2023 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அதிகாரப்பகிர்வுக்கான இயக்கத்தினால் கையளிக்கப் பெற்ற 13 ஆவது திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதற்கான வழிவரைபட முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.
இதற்கான அடிப்படைக் காரணம் மக்களால் அரசியல் அங்கீகாரம் வழங்கப்பெற்று பிரதிநிதித்துவ வலுவைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ( தமிழரசுக்கட்சி ) ஒத்துழைப்பு வழங்க முன்வராமையேயாகும்.
இந்த நிலைமை இந்தியாவின் அழுத்தம் காரணமாகச் சில சிங்களத் தரப்புகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை வழங்க முன்வந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதனைத் தள்ளிப் போடுவதற்கு – இழுத்தடிப்பதற்கு வாய்ப்பையே ஏற்படுத்திக் கொடுத்தது.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதில் வடக்குக் கிழக்குத் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் வாக்களித்துத் தெரிவான தமிழ்த் தேசியக் கூடட்டமைப்புக்கே (தமிழரசுக்கட்சிக்கே) கரிசனையில்லாதபோது அதனையும் மீறி இந்தியா கரிசனை கொள்ளுமென எதிர்பார்க்கவும் முடியாது.
மக்களும் தெரிந்தோ தெரியாமலோ வெறுமனே உணர்ச்சியூட்டும் எதிர்ப்பு அரசியல் கோஷங்களுக்குப் பின்னால் மட்டுமே (பெரும்பான்மையினர்) அல்லது (மீதிப்பேர்) அபிவிருத்திக் கோஷங்களுக்குப் பின்னால் மட்டுமே செல்லும் போக்கே காணப்படுகிறது. இக் காரணங்களால் ‘மாற்று அரசியல்’ சக்திகள் ஒரு மக்கள் திரட்சியாகப் பரிணமிக்க முடியவில்லை . விடைபெற்றுள்ள 2023 ஆம் ஆண்டின் இறுதிவரை இந்த நிலையே நீடித்துள்ளது. இதனையும் வெளிப்படையாகக் கூறப்போனால் ‘அகில இலங்கை தமிழர் மகாசபை’ அரசியல் ரீதியாகப் பலம் பெறவில்லை.
இலங்கையில் தேர்தல் ஆண்டாகக் கருதப்படும் 2024 ஆம் ஆண்டிலும் இந்த நிலைமையே தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் நீடிக்குமானால் 2024 ஆம் ஆண்டிலும் ஏன் அதற்குப் பின்னரும்கூட்ட இலங்கைத் தமிழர்கள் சமூகபொருளாதார அரசியல் இழப்புகளையே தொடர்த்தும் எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
அதற்குப் பின்னர் அதாவது கண்கெட்ட பின்னர் வழமைபோல் இலங்கை அரசுத் தலைவர்கள் மீதும் இந்தியா மீதும் சர்வதேச சமூகத்தின் மீதும் தமக்குள்ளே தமிழர் தரப்பினர் ஒருத்தர் மீது ஒருத்தர் குறைகாண்பதிலும் சொட்டை சொல்வதிலும் விரல் நீட்டுவதிலும் எந்தப் பலனும் விளையமாட்டாது. அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும். ஆதரவுச் சக்திகள் மருத்துவிச்சிகளாகவே உதவ முடியும்.
எனவே , இலங்கைத் தமிழர்களுக்கு இவ்வருடம் ( 2024 ) ஓர் எச்சரிக்கை ஆண்டாகும். இந்த எச்சரிக்கையை எதிர்கொள்ளத் தமிழ்ச்சமூகம் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் .
(அடுத்தபத்தியிலும் தொடரும் )