கட்டுரைகள்

சிறீதரனின் வரட்டுச் சிந்தனை! …. ஏலையா க.முருகதாசன்.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிறீதரன் பேசுவதற்காகவே நாடாளுமன்றம் சென்றவர்.

ஒரு இணையத்தளத்தளத்தில் ஒரு செய்தியை வாசித்தேன்.அதில் ஆங்கில மொழி முக்கியமானதென்றால் திரு.எஸ:ஜே.வி செல்வநாயகம் அவர்களாலேயோ திரு.ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களயாலேயோ ஏன் உரிமையைப் பெற முடியவில்லை என்பது போன்ற கருத்துப்படப் பேசியிருந்தார்.

நீண்டகால அனுபவமுடைய திரு.சி.சிறீதரன் அவர்கள் சாhசரி மனிதர்களில் சிலர்; போகிற போக்கில் ஏதோ அப்பொழுது எது வாயில் வருகின்றதோ அதை எந்த யோசனையுமில்லாது பேசுவது போல பேசியிருக்கிறார்.

இதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனுடன் தன்னை ஒப்பிட்டு,திரு.பிரபாகரன் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதையும் சுட்டிக்காட்டி அவரால்தான் தமிழினம் ஒன்று இருப்பதையே உலகம் அறிந்து கொண்டது அது போல தன்னால் ஈழத்தமிழினம் இருப்பதை உலகிற்கு உணர்த்த முடியும் எனப் பேசியிருக்கிறார்.

இவர்களையா ஈழத்தமிழர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்கள் என யோசித்து எம்மை நாமே நோக வேண்டியுள்ளது.தன்னைத் திரு.வே.பிரபாரன் அவர்களுடன் ஒப்பிடுவதற்கு காரணமாக ஐயா நீங்கள் தலைவரைப் போல என்று யாராவது சொல்லியிருக்கலாம்,அந்தப் புழுகத்தில் இவர் அதைக் கிழக்கு மாகாணத்தில் சொல்லியிருக்கிறார்.

பேசிய, பேசுவதற்கான காலமும் முடிந்து, ஆயுதவழியில் எதையாவது செய்யலாம் என்ற காலமும் முடிந்து, நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டு போன கதையாக இருந்ததையும் தாரைவார்த்துக் கொடுத்ததன் பின்னரும் கதைப்பதையே ஈழத்தமிழரின் அரசியலாகக் கருதி இப்ப கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவிக்கு திரு.சி.சிறீதரன் அவர்கள் கண் வைத்து திரு.வே.பிரபாகரனையும் அதற்குள் இழுத்துவிட்டு குழந்தைத்தனமாக உரையாற்றியிருக்கிறார்.

ஈழத்தமிழர்களுக்கு இந்த அரசியல்வாதிகள் இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் தமிழ் அரசியலின் அரிச்சுவடியைச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியாது.

அரசியல்வாதிகளின் பேச்சிலிருந்தும் அவர்களின் நடவடிக்கைகளிலிருந்தும் அவரவரின் அரசியல் ஞானத்தையும்,அரசியல் தேடலையம் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுதல் என்ற சமகாலத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் அரசியல் ஆற்றலையும் அறிந்து கொள்ள முடியும்.

ஆழக்கடல் எங்கும் சோழமகராசன் ஆட்சி செய்தானே என்றோ, தொன்மைகளை மட்டுமே பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வாசிப்பதாலோ பத்திரிகை மகாநாட்டைக் கூட்டி

அவரிலை பிழை இவரிலை பிழை என்று சொல்வதாலோ எமது உரிமைகள் கிடைத்துவிடப் போவதில்லை.

பெருமை பேசுவதாலோ உணர்ச்சிகரமாகப் பேசுவதாலோ தமிழர்களை புளகாங்கிதம் கொள்ளச் செய்யலாம் அதுவே தமது இருப்பைத் தக்க வைக்கும் என இனிமேலும் தமிழரசியல்வாதிகள் நினைப்பது தவறு.

இதுவரைகாலமும் தமிழ் அரசியல்வாதிகள் போன பாதை தவறு என்று ஈழத்தமிழர்களை தலையைச் சுற்றி மூக்கைத் தொட வைத்துவிட்டு நாடாளுமன்றத்தக்குப் போன திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,திரு.செல்வராஜா கஜேந்திரன்,மாண்புமிகு முன்னாள் நீதியரசர்,முன்னாள் வடமாகாண முதல்வர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான ஆசையை மட்டும் அவர்கள் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்கள்.அதற்காகவே மக்களை ஏமாற்றி வாக்களிக்க வைத்துச் சென்றார்கள்.

இவர்களில் திரு.சி.சிறீதரன் அவர்கள் அரசியலின் அடையாள வார்த்தைகள் என தப்பாக எண்ணி அடிக்கடி நாடாளுமன்றத்திலும் சரி,பொதுமக்களின் முன்னிலையிலும் சரி சொல்வது எலும்புத் துண்டுகளுக்கு ஆசைப்படுபவர்கள்,பின்கதவால் போவபவர்கள் என்பதைத்தான்.

ஒரு அரசியல்வாதி பேசும் போது பயன்படுத்தப்படும் வார்த்தைகளைக் கவனித்தாலே தெரிந்துவிடும் அவர்களின் அரசியல் தகுதி என்னவென்று.

எனது கணிப்பின்படி மூன்றே மூன்று அரசியல்வாதிகள்தான் இனி இலங்கையில் தமிழர்களுக்கான அரசியலை எவ்வாறு செய்ய வேண்டுமென்பதை அறிந்தவர்களாக இருக்கின்றனர்.

அவர்கள் திரு.சாணக்கியன்,திரு.சுமந்திரன்,திரு.மனோ கணேசன் ஆகியோரே.

திரு.சி.சிறீதரன் அவரவர்க்கு அவரவர் தாய்மொழி தவிர்ந்த மற்றைய மொழியறிவே தேவையில்லை என்பது போலப் பேசியிருக்கிறார்.அதற்காக திரு.வே.பிரபாரனை; அவர்களைத் தன்னுடன் ஒப்பிட்டதுமல்லாமல்,திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களும்,திரு.ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களும்: ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு என்னத்தைச் சாதித்தார்கள் எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பல்லினம் வாழும் ஒரு நாட்டில் அரசியல்வாதிகளுக்கு, அந்நாட்டு மொழிகள் அத்தனையும் எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டுமென்பது திரு.சி.சிறீதரன் அவர்களுக்குத் தெரியவில்லையே..

தினம் தினம் வெளிவரும் மும்மொழிப் பத்திரிகைகளையும் ஒவ்வொரு நாளும் அரசியல்வாதிகள் வாசிக்க வேண்டும்.சிங்கள அரசியல்வாதிகளின் மனநிலை என்ன சிங்கள மக்களின் மனநிலை என்ன என்பதை சிங்களப் பத்திரிகைகள் எவ்வாறு சொல்கின்றன என்பதை தமிழ் அரசியல்வாதிகள் அறிந்திருக்க வேண்டும்.அதற்காகவாவது மொழியறிவு வேண்டாமா?.

நாடாளுமன்றக் கூட்டங்களில் இலங்கையின் ஏதோ ஒரு இடத்தில் ஒரு பாலம் இடிந்துவிழுந்து அதில் பலர் காயமடைந்தாலோ அதைப்பற்றிப் பேசும் போது,முழு இலங்கை மக்களுக்குமாக குரல் கொடுப்பேன் என்று சத்தியப்பிரமாணம் எடுத்து வந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமாகவல்லவா பேச வேண்டும்.அதையும் பேசி தமிழ் மக்களின் உரிமைபற்றியும் பேச வேண்டும்.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் அதுபற்றி வாயே திறக்கமாட்டார்கள்.அதிகம் ஏன் இராவணனன் சைவத்தமிழன் என்பதைக்கூட மறந்து அவனைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசத் தயங்குவார்கள்.ஆனால் சிங்கள மக்களும் சிங்கள அரசியல்வாதிகளும் இராவணனன் தமது சக்கரவர்த்தி முதல் விஞ்ஞானி என்று கொண்டாடுகிறார்கள்.

தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தான் பேசுவார்கள் என்பதை அறிந்த சிங்கள அரசியல்வாதிகள் இவர்களைப் பற்றி அக்கறைப்படுவதே இல்லை,கணக்கில் எடுப்பதுமில்லை.

இப்பொழுது இன்னொருபடி முன்னே போய் தமிழ்ப் பகுதிகளுக்கு பணி செய்யப் போகும் சிங்கள உத்தியோகத்தர்கள் தமிழ் படிக்கத் தொடங்கிவிட்டார்கள்.இது சிங்களப் பள்ளிக்கூடங்களில் தமிழ்மொழியைச் சிங்களப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் காலத்தை உருவாக்கப் போகின்றது.

மொழியை வைத்துத்தானே தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் நடாத்துகிறார்கள் அதை நாங்களே கற்றுக் கொள்வோம் என கற்கத் தொடங்கினால் என்ன நடக்கும்.

பல்மொழியறிவு மிக முக்கியம் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் உணர வேண்டும்.யதார்த்த அரசியலைப் புரிந்து கொண்ட திரு.எம்.ஏ.சுமந்திரன் அவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தலைமை தாங்குவதற்கு தகுதியானவர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.