எழுத்தும் வாழ்க்கையும்! …. ( இரண்டாம் பாகம் ) …. அங்கம் – 90 …. முருகபூபதி.
எனது படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் வரிசையில் தோழர் மஃரூப் நூர் முகம்மட் !
முருகபூபதி
கடந்த 89 ஆவது அங்கத்தில் எனது படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவரும் மெல்பனில் வதியும் இளம் சட்டத்தரணியும் சமூக ஆர்வலருமான திருமதி நிவேதனா அச்சுதன் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
இந்த வாரம் மேலும் ஒருசிலர் பற்றி தெரிவிக்க விரும்புகின்றேன். இலக்கிய ஆர்வலரும் மொழிபெயர்ப்பாளருமான தோழர் மஃரூப் நூர் முகம்மட் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர்தான் எனக்கு அறிமுகமானார்.
மேற்கு அவுஸ்திரேலியாவில் வதியும் பொருளியல் துறை பேராசிரியர் , எமது இனிய நண்பர் அமீர் அலி அவர்கள் மெல்பனுக்கு நாம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றுவதற்கு வருகை தந்து, இங்கே மருத்துவராக பணியாற்றும் திருமதி வஜ்னா ரஃபீக் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தார்.
வஜ்னா, எங்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கம் வகித்திருந்த எழுத்தாளரும் கவிஞருமான ஆசிரியர் மருதூர்க்கனியின் புதல்வி. மருதூர்க்கனி, அஷ்ரஃபின் முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகித்தவர். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். இவர் பற்றி ஏற்கனவே விரிவான பதிவு எழுதியிருக்கின்றேன்.
வஜ்னாவின் கணவர் இப்ரகிம் ரஃபீக் அவர்களும் எனது அருமை நண்பர். இவர் அமைச்சர் அஷ்ரஃப் , கப்பல் போக்குவரத்து, துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவிருந்த காலப்பகுதியில், அதன் அதிகார சபையின் பிரதித்தலைவராக இருந்தவர். சிறந்த சமூகப்பணியாளர்.
ரஃபீக் – வஜ்னா தம்பதியர் வீட்டில், அமீர் அலி அவர்களை பார்க்கச்சென்றவிடத்தில்தான் மஃரூப் நூர் முகம்மட் மற்றும் வானொலி ஊடகவியலாளர் – அறிவிப்பாளர் சகீம் மத்தாயஸ் ஆகியோரும் எனக்கு அறிமுகமாகி, எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்தனர்.
“ நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் “ என்று எனது பதிவுகளில் அடிக்கடி எழுதி வந்திருக்கின்றேன்.
இலங்கைத் தலைநகரில் பிறந்திருக்கும் மஃரூப் நூர் முகம்மட், ஆங்கில மொழி மூலம் ஒரு தனியார் ஆரம்பப் பாடசாலையில் கற்றவர். பின்னர் மருதானை சாகிறா கல்லூரியில் உயர்தரம் வரையில் பயின்றார்.
இளமைப்பராயத்தில் இவரால் சரளமாக தமிழ் பேசமுடியாத சூழலில், இவரது அண்ணன் விரும்பிப்படிக்கும் தமிழகத்தின் பிரபல சினிமா இதழில் வரும் திரையுலக நட்சத்திரங்களின் வண்ணப் படங்களைப்பார்ப்பதற்காக கேட்பாராம்.
“ உனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது “ என்று தம்பியை கிண்டல் செய்யும் அண்ணனுடன் இவர் தினமும் தொடரும் வாய்த்தர்க்கம் , சண்டைகளையடுத்து, பெற்றவர்கள், வீட்டுக்கு வந்து திருக்குர் ஆன் சொல்லித்தந்த ஒரு லெப்பையிடத்தில், “ தமது மகனுக்கு தமிழும் சொல்லிக்கொடுங்கள் என்றனர்.
அவ்வாறு தமிழை எழுத்துக்கூட்டி படித்த மஃரூப், சாகிறா கல்லூரியிலும் ஆங்கில மொழி மூலமே படித்திருக்கிறார்.
அங்கு சேக்ஷபியரின் நாடகங்கள் முதல் ஆங்கில இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தவர்.
அங்கு தன்னையும் சக மாணவர்களையும் சிறந்த மாணாக்கர்களாக உருவாக்கிய பெருமை அங்கு அக்காலப்பகுதியில் பணியாற்றிய தமிழ் ஆசிரியர்களையே சாரும் என்றும் சொல்கிறார் மஃரூப்.
அதிபராகவிருந்த ஷாபி மரைக்கார், சாகிறாவில் படிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்புகளை இழக்க நேர்ந்தாலும், ஆங்கில மொழியில் புலமைபெற்றவர்களாகிவிட்டால், எங்காவது சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்று முன்னேறிவிடுவார்கள் என்ற நோக்கத்துடன் ஊக்குவித்து வந்துள்ளார்.
உயர்தர வகுப்பு நிறைவுசெய்யப்பட்டதும், எம். டீ. குணசேனா நிறுவனத்தில் தவச பத்திரிகையில் தமது பதினெட்டு வயதில் இலிகிதராக வேலைக்கு சேர்ந்திருக்கும் மஃரூப், பின்னர் கணக்கியலில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பட்டயக்கணக்காளராக சவூதி அரேபியா, பஃரேய்ன் முதலான நாடுகளிலும் பணியாற்றியிருக்கும் மஃரூப், தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுதலோடு, தமிழ் இலக்கியங்களையும் படித்தவர்.
அவுஸ்திரேலியா மெல்பனுக்கு 1991 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தவர். ஏற்கனவே வேறும் சில நாடுகளில் கணக்கியல் முகாமைத்துவத்துவத்தில் பணியாற்றியிருக்கும் இவர், கவியரசு கண்ணதாசனின் கவிதைகள், திரைப்படப் பாடல்களிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
அத்துடன் மகாபாரதம், இராமாயண இதிகாசங்களையும் ஆங்கிலத்தில் படித்திருக்கிறார். கவியரசரின் புகழ்பெற்ற சுயசரிதை நூல்களான வனவாசம் – மனவாசம் ஆகியனவற்றை முழுமையாகப் படித்துவிட்டு, அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதாக என்னிடம் சொன்னார்.
சென்னை தி. நகரில் கண்ணதாசன் பதிப்பகத்தை நீண்டகாலமாக நடத்திவரும் கண்ணதாசனின் புதல்வர் காந்தி கண்ணதாசனுடன், இவருக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
குறிப்பிட்ட ஆங்கில மொழிபெயர்ப்புகளை கண்ணதாசன் பதிப்பகமே வெளியிடுவது பொருத்தமானது என நாமிருவரும் கருதினோம்.
பதிப்புரிமை விவகாரம் இதுவிடயத்தில் தாமதங்களை ஏற்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது. கண்ணதாசனின் நூல்களை முன்னர் சென்னையில் வானதி பதிப்பகம்தான் வெளியிட்டு வந்தது.
அதன்பின்னர், கண்ணதாசன் பதிப்பகம் வெளியிடத் தொடங்கியது.
இந்தப்பின்னணிகளுடன், ஒருநாள் தோழர் மஃரூப், என்னைத் தொடர்புகொண்டு எனது ஆக்கங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புவதாகச் சொன்னார்.
நான் எழுதிய அரசியல் சார்ந்த சில கட்டுரைகளை அவருக்கு அனுப்பினேன். அவற்றை சிறப்பாக மொழிபெயர்த்து தந்ததுடன், இலங்கையில் Colombo Telegraph முதலான ஊடகங்களுக்கும் அனுப்பி, வெளிவரச்செய்தார்.
அவற்றின் தொடர்ச்சியாகத்தான், கிழக்கிலங்கையிலிருந்து வெளிவந்த நண்பர் பூபாலரத்தினம் சீவகனின் அரங்கம் வார இதழில் நான் எழுதிய நடந்தாய் வாழி களனி கங்கை தொடரைப்படித்துவிட்டு, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.
அதன் மூல நூல் கொழும்பில் குமரன் பதிப்பகத்தினால், சில வருடங்களுக்கு முன்னர் வெளியானது. அதன் ஆங்கில வடிவத்தை (Mystique of Kelani River ) முழுமைப்படுத்தியபின்னர், மின்னூலாக வெளியிட்டோம்.
தற்போது இதனை அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.
குறிப்பிட்ட ஆங்கில நூலுக்கும் தோழர் மஃரூப் நூர் முகம்மட் அருமையான அணிந்துரையும் எழுதியிருந்தார். அதனை மெல்பனில் வதியும் தேர்ந்த வாசகி, இலக்கிய சகோதரி திருமதி விஜி இராமச்சந்திரன் அழகாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
விஜி இராமச்சந்திரன் பற்றிய விரிவான பதிவை, எனது வாசிப்பு முற்றம் என்ற மற்றும் ஒரு தொடர் ஆக்கத்தில் எழுதியிருக்கின்றேன். விஜி அவர்களும் அவ்வப்போது எனது வேண்டுகோளை ஏற்று எனது சில ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
மஃரூபின் ஆங்கில அணிந்துரையை விஜ இராமச்சந்திரன் தமிழில் அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார்.
அதிலிருந்து சில வரிகள்:
” குந்திதேவி தங்களுக்கு நேர்ந்த துயரங்களைச் சொன்னபோது, “எந்தவொரு நல்லொழுக்கமுள்ள மனிதனும் எல்லா நேரங்களிலும் நல்லொழுக்கத்துடன் வாழும் அளவுக்கு வலிமையானவனும் அல்ல, எந்த ஒரு பாவியும் எப்போதும் பாவத்தில் உழலும் அளவுக்கு மோசமானவனும் அல்ல. வாழ்க்கை என்பது ஒரு சிக்கலான வலை மற்றும் நன்மை, தீமை இரண்டுமே செய்யாதவர்கள் உலகில் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் செயலின் விளைவை அனுபவிக்க வேண்டும். துக்கத்திற்கு வழிவிடவேண்டாம் “. வியாசர் இவ்வாறு அவளை ஆறுதல்படுத்தினார். ( சி.ராஜகோபாலாச்சாரியின் மகாபாரத மொழிபெயர்ப்பு)
முருகபூபதியின் நினைவுப் பாதையில் அவர் எழுதியிருக்கும் நடந்தாய் வாழி களனி கங்கை நூலில் , அது கடந்த பயணத்தை வாசிக்கும்போது ஏற்பட்ட அதே சிந்தனைத் தூண்டுதலும் வசீகரமும் மொழிபெயர்க்கும் போதும் ஏற்பட்டது.
“நடந்தாய் வாழி களனி கங்கை” என்பது இலங்கை வரலாற்றின் அறியப்படாத, வசீகரிக்கும் விபரங்களை அடக்கியுள்ளது . நீங்கள் கேள்விப்படாத நிகழ்வுகள், ஆச்சிரியமூட்டும் அல்லது அதிர்ச்சிக்குள்ளாக்கும் சில பகுதிகள் கூட இருக்கலாம். ஆனால், இவை அனைத்தும் சேர்ந்து அந்தக்கால நினைவுகளையும் நாம் இலங்கையர்கள் என்ற நமது அடையாளத்தையும் மீட்டெடுக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
கம்பீரமான களனி நதி மற்றும் ஆற்றங்கரைகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதையானது, வழி நெடுக ஓடி பல திருப்பங்கள், நெளிவு சுளிவுகள் என்று குறுக்கும் நெடுக்குமாக அதன் வழியை விரிக்கிறது. இது பல வியப்பூட்டும் அரசியல் தலைவர்கள் அவர்களின் சூழ்ச்சிகள், லட்சியங்கள், துரோகங்கள், படுகொலைகள் மற்றும் அவர்கள் விட்டுச்சென்ற மரபுகள் போன்ற சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது.
தெய்வங்கள் மற்றும் புராண பாத்திரங்கள், பிரமுகர்கள், அண்டை நாடான இந்தியாவில் இருந்து வந்த பிரபலங்கள் மற்றும் அமைதித் தூதர்கள், தீவில் அவர்களின் குறுகிய ஊடுருவல்கள் பற்றிய சுவாரசியமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
தொழில்முனைவோர், பொழுதுபோக்கு வித்தகர்கள், தேர்ந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலை மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தி வளப்படுத்திய மூங்கில் மரங்கள், பழுப்பு காகித பைகள், பால்பாயிண்ட் பேனா மற்றும் பீடி முதல் சப்பாத்து வரையிலான பல சுவாரஸ்யமான குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டு அமையப்பெற்றுள்ளது. இவை அனைத்தும் நம் நினைவில் ஓடிச் சுழன்று களனி நதி போல் பாய்ந்து இறுதியாக கடலெனும் நம் உணர்வுடன் சங்கமிக்கிறது.
தமிழை வாசிக்க முடியாத அனைவருக்கும், இந்த புத்தகம் ஒரு பார்வையை வழங்குவதோடு, அவரது மற்ற சிந்திக்கத் தூண்டும் படைப்புகளை மொழிபெயர்ப்பதற்கான பசியைத் தூண்டும் என்று நம்புகிறேன். ”
இவ்வாறு எழுதியிருக்கும் தோழர் மஃரூப், எனது மேலும் சில ஆக்கங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
மெல்பனில் வதியும் தோழர் லயனல் போப்பகேயின் வாழ்க்கைச்சரிதம் பேசும் சிங்கள – ஆங்கில நூல்களின் அறிமுகமும் அவர் பற்றிய ஆவணப்படத்தின் திரையிடலும் அண்மையில் நடந்தபோதும், தோழர் மஃரூப் எனது உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
இலங்கை அரசியலிலும் இலக்கியத்திலும் பெளத்த பிக்குகளின் வகிபாகம் என்ற தலைப்பில் மூன்று அங்கங்கங்களைக்கொண்ட எனது மற்றும் ஒரு தொடரையும் மஃரூப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
பாரதியின், ” இ”ங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன். என்ற வரிகள்தான் எனது நினைவுக்கு வருகின்றது.
( தொடரும் )