அனுபவம் புதுமை…..! தொடர்.….3…..சங்கர சுப்பிரமணியன்
பெரும்பாலானோர் தற்காலிகமாக மொழிபெயர்ப்பாளராக இருந்து கொண்டு கொக்கொக்க கூம்பும் பருவத்து என்பதைப் போல அவர்களுக்கு தகுந்த வாய்ப்பு வரும்போது தனது தொழிலுக்கு திரும்பி விடுவார்கள். எத்தனை நாள் தான் வாடகை வீட்டில் இருப்பது? சொந்தவீட்டில் இருப்பதே ஒரு மதிப்பு தானே.
அதனால் இவர்கள் பரம்பரை ஆண்டி என்ற சான்றுக்குள் வரமாட்டார்கள். இவர்கள் பஞ்சத்து ஆண்டிகளே. இவர்களைத்தவிர இன்னும் பலர் பஞ்சத்து ஆண்டிகளாக இருக்கிறார்கள். அதாவது தொழிலில் இருந்து ஓய்வுபெற்றபின் சோம்பியிருக்காமல் பொழுதைப் போக்க மொழிபெயர்ப்பாளராக வருகிறார்கள்.
இவர்களுக்கு இத்தொழில் கரும்பு தின்ன கூலி போன்றது. பொழுதும் போகிறது அத்தோடு பணமும் கிடைக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இவர்கள் மொழிபெயர்ப்பு செய்ய தேவையான படிப்பை படித்திருக்க மாட்டார்கள். மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் வேலை கொடுத்தால் கொடுக்கட்டும் கொடுக்காவிட்டால் போகட்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்கள். ஏனெனில் அவர்களுக்கு கட்டாயம் சம்பாதித்தே ஆகவேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை.
மொழிபெயர்ப்பு நிறுவனங்களுக்கு இவர்களின் பங்களிப்பும் தேவை. ஏனென்றால் இவர்களில் பெரும்பாலானோர் மொழிபயர்ப்பு செய்வதற்குண்டான படிப்பை படிக்காவிட்டாலும் திறமைசாலிகள். அதேவேளையில் மொழிபயர்ப்புக்காக படித்தவர்கள் அனைவரையும் திறமைசாலிகள் என்று சொல்லிவிடவும் முடியாது. எனவே இத்தொழிலில் எப்போதுமே ஒரு சமநிலையற்ற நிலை இருந்து கொண்டே இருக்கிறது.
அடுத்படியாக மொழிபெயர்ப்புக்காக படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் கிடைக்கும் ஊதியத்தில் மலைக்கும் மடுவுக்கும் போன்று அதிக வேறுபாடும் இல்லை. மொழிபெயர்ப்பு நிறுவனங்களுக்கும் குறைந்த ஊதியத்துக்கு ஆள் கிடைப்பதாலும் அதற்கான படிப்பை படித்தவர்கள் குறைவாக இருப்பதாலும் படிக்காதவர்களுக்கும் வேலை கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.
மேலும் இத்தொழிலின் நிலை வேறு. மருத்துவம் படித்தவர்களால் மட்டுமே மருத்துவராக முடியும். சட்டம் படித்தவரால் மட்டுமே சட்டத்தரணியாக முடியும். பொறியியல் படித்தவரால் மட்டுமே பொறியாளர் ஆக முடியும். ஆனால் மொழிபெயர்ப்புக்கு படித்திருந்தால் மட்டும் மொழிபயர்ப்பாளராக முடியும் என்றில்லை. ஆங்கிலத்திலும் மொழிபயர்க்க வேண்டிய மொழியிலும் திறமை இருந்தால் போதுமானது.
இனிமேல் தடம் புரண்ட குதிரையின் கடிவாளத்தை இழுத்து தடத்திற்கு கொண்டு வருவோம். அன்று குறுக்கு விசாரணைக்கு மொழிபெயர்த்தவர் பரம்பரை ஆண்டியாவார். அதாவது அவர் மொழிபெயர்ப்புக்கான படிப்பை படித்து மிகவும் அனுபவம் வாய்ந்தவர். ஆஸ்திரேலியாவில் வேறு தொழிலை தேடாமல் மொழிபெயர்ப்பு தொழில் ஒன்றையே நம்பியிருக்கும் நடுத்தர வயதினர்.
நானோ பஞ்சத்துக்காக ஆண்டியானவன்.
அதாவது என் பணியில் இருந்து ஒய்வு பெற்றபின் பொழுதைக் கழிப்பதற்காக மொழிபயர்ப்பாளர் பணியைத் தேர்ந்தெடுத்தவன். அதற்குண்டான படிப்பையும் படித்து தேர்வு பெற்றவனல்ல.
நான் படிப்பைக் காட்டிலும் என்னால் முடியும் என்ற திறமையை மட்டுமே நம்பினேன். ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள். How well you are qualified is not important but how well you sell yourself is important. என்பதே அது. இதை அனுபவத்தில் காணமுடியும். இது பெரும்பாலானோருக்குபொருந்தும்.
பலர் அதிகம் படித்திருப்பார்கள் ஆனால் பணியைத் தேடமுடியாமலும் பணி கிடைத்தாலும் அதில் முன்னேறிச்செல்ல முடியாமலும் இருப்பார்கள். இன்னும் பலர் அதிகமாக படித்திருக்க மாட்டார்கள் ஆனால் வெகுவாக முன்னேறியிருப்பார்கள். முன்னேறியவர்களைப் பார்த்து முன்னேறாதவர்கள் எல்லாம் நேரம்தான் காரணம் என்று சொல்லி தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டு சமாதானமடைவார்கள்.
சந்தையில் தரமான பொருளை வைத்திருந்தாலும் கூவி விற்காதவனால் விற்பனையில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால் சுமாரான பொருளை வைத்திருப்பவன்கூட வியாபாரத்துக்கு தேவையான பேச்சுவன்மையால் சிறிது நேரத்திலேயே எல்லாவற்றையும் விற்று விடுகிறான்.
ஆன்மீகச் சொற்பொழிவாற்றுவர் பெற்ற பிள்ளையை கொன்று இறைவனுக்கு பக்தன் கறி சமைத்தான் என்று கூறும்போது இது நடக்குமா? பெற்ற பிள்ளையை கொல்ல முடியுமா என்று எண்ணமுடியாதபடி அவரின் பேச்சுவன்மை கட்டிப்போடுகிறதல்லவா? நடக்க முடியாத ஒன்றையே பேச்சாற்றலால் நடக்கக் கூடியதாக எண்ணவைக்கும்போது திறமையால் எதையும் ஏன் சாதிக்கமுடியாது?
வெளிநாடு வந்தவர்கள் தாங்கள் படித்த படிப்புடன் பணிக்காக அங்குள்ள ஏதாவதொரு படிப்பை படித்து தேர்வுபெறுவார்கள். இது அவரவர் சூழலைப் பொருத்து அமைவது.
என்னைப் பொருத்தவரை இந்தியாவில் படித்த படிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து அதற்கேற்ற பணிபுரிந்து ஓய்வும் பெற்றேன். அதுபோன்றே மொழிபயர்பாளருக்கும் அதற்குண்டான படிப்பை படிக்காமல் என்னுடைய திறமையை மட்டும் வைத்தே பத்தாண்டுகளுக்கும் மேலாகமொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறேன்.
நான் என்னை மிகவும் சிறந்த மொழிபெயர்ப்பாளன் என்று சொல்ல மாட்டேன். என்னைவிட பன்மடங்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர்களும் இருக்கிறார்கள்.
எவனொருவன் தன்னை சிறந்தவனாக எண்ணிக் கொள்கிறானே அவன் சீக்கிரமாக சறுக்கி விழுவான். தனது திறமையை நம்பலாம் ஆனால் தானே சிறந்தவன் என்று எண்ணக் கூடாது. தன்னால் முடியும் என்பது வேறு. தன்னைத்தவிர வேறு எவராலும் முடியாது என்பது வேறு.
மொழிபயர்ப்பாளருக்குண்டான படிப்பை படித்துவிட்டு சவாலான வேலையை ஏற்க முடியாதவர்களும் இருக்கிறார்கள். கையில் ஆயுதம் இல்லையென்று தெரிந்தும் என்னோடு களமாடியவர்களும் இருக்கிறார்கள்.
ஒரு தமிழரே நான் பேசும் தமிழ் புரியவில்லை தவறுதலாக புரிந்து கொண்டு தப்பு தப்பாக மொழிபெயர்க்கிறார் என்று கூறுவதைக் கேட்டபோது நான் திறமைசாலியா திறமையற்றவனா என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் என்னைப் பார்த்து ஆங்கிலம் சரியாகப் பேசவில்லை என்றால்கூட வருந்தியிருக்க மாட்டேன். ஏனெனில் அம்மொழி என் தாய்மொழி அல்ல.
அதேசமயம் சந்துரு நீ கலக்குறடா என்பதைப்போல தமிழ்ச் சங்கங்களில் தலைவராக இருந்ததும் புரவலராகவும் இருப்பதும் எப்படி சாத்தியமானது என்றும் என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு. அதற்காக நான் எவருக்கும் கும்பிடு போட்டு எதையும் அடைந்ததில்லை.
விக்டோரிய தமிழ்க் கலாச்சாரக் கழகத்தின் ஊடாக எனக்கு Justice of Peace பதவிக்கு அழைப்பு வந்தது. அப்போது அதை நான் நிராகரித்தேன். அதற்கு காரணம் அந்த சங்கத்தில் நான் இருப்பது இதுபோன்ற சலுகைக்காகத்தான் என்று மற்றவர்கள் எண்ணிவிடக் கூடாது என்பதற்காகத்தான். வீட்டின்முன் ஆஸ்திரேலிய நாட்டின் கொடி பறக்கும் என்றெல்லாம் ஆசை காட்டினார்கள். நான் அதற்கெல்லாம் மயங்கவில்லை.
உண்மையில் தமிழருக்குள் வெறுப்பு நிலை உருவாக காரணம் யாரும் இல்லை. அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளில் சிக்கிய தமிழர்களே இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். எய்தவன் இருக்க அம்பை நோவது போல பனைமரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்துக்கு நெறிகட்டுவதுபோல் எவரோ செய்த தீமைக்காக ஏதுமறியா தமிழர் பலர்பாதிக்கப்படுகிறார்கள்.
இருப்பினும் என்றாவது ஒருநாள் வேறுபாடின்றி எங்கு வாழ்ந்தாலும் தமிழர் தமிழரே என்ற நிலை உருவாகும். அதுவரை “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே” என்ற வார்த்தைகள் செவிகளில் சிங்காரமாய் ரீங்காரமிடட்டும்.
-சங்கர சுப்பிரமணியன்.
(முற்றும்)