அனுபவம் புதுமை…..! தொடர்.….2…..சங்கர சுப்பிரமணியன்
எனக்கு இடைவிடாத இருமல் இருந்த அன்று நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. சரியாக மாட்டிக் கொண்டேன். எப்படியோ சமாளிப்போம் என்று நடந்த குறுக்கு விசாரணையை தொகுத்து வழங்கினேன். அப்போது மொழிபயர்ப்பாளர்களில் சிலர்இடைமறித்து நான் தொகுத்துதான் வழங்குகிறேன் குறுக்கு விசாரணை முழுவதையும் மொழிபெயர்க்கவில்லை என்றார்கள்.
அவர்கள் சொன்னது முற்றிலும் சரி. அதிக நேராமல் பேசாமல் இருமலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்தான் அப்படிச் செய்தேன். காரணம் எதுவானாலும் தவறு தவறுதான். நம் செய்யும் தவறை பிறர் சுட்டுக் காட்டும்போது கோபம் வருவது மனித இயற்கை.
நானொன்றும் முற்றும் துறந்த முனிவன் இல்லையே. ஆனால் அங்கு மொழிபெயர்ப்புக்கான படிப்பை படித்து என்னிலும் அனுபவமிக்க மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தும் யாரும் குறுக்கு விசாரணையை ஏற்றுக் கொள்ளாதது எனக்கு வியப்பளித்தது.
நான் அன்று கடைசியாக நீதிமன்றத்துக்கு வந்ததால் என்னிடம் குறுக்கு விசாரணை தள்ளி விடப்பட்டிருந்தது. என்னுடைய பணிபற்றிய அறிவிப்பிலும் குறுக்கு விசாரணை என்றும் குறிப்பிடவில்லை. குறுக்கு விசாரணை மிக முக்கியம் என்பதால் அவசியம் குறிப்பிடப்பட்டிருக்கும். குறுக்கு விசாரணை என்பதே கடைசி நேரத்தில்தான் எனக்கு தெரியவந்தது.
முழுவதையும் மொழிபெயர்க்க விடாமல்இருமல் என்னை தடுத்தது. நீதிவான் என்னிடம் அவர்கள் சொன்னது சரிதானா என்று கேட்டார். உண்மைதான் என்றேன். மேலும் குறுக்கு விசாரணையில் எனக்கு அனுபவம் குறைவு என்ற உண்மையையுயம் சொன்னேன். உண்மையை சொல்ல வெட்கப்படவில்லை.
அப்படி சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. என்னைவிட இருமடங்கு அனுபவமும் அதற்குண்டான படிப்பையும் படித்திருந்தவரும் என்னை சரியாக மொழிபெயர்க்கவில்லை என்ற சொன்னவர்களில் ஒருவராக அங்கு இருந்தார்.
உடனே நீதிவான் குறுக்கு விசாரணையில் அதிகமாக அனுபவம் பெற்றவர் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார். உடனேஎன்னுடன் வந்திருந்த மொழிபெயர்ப்பாளர்களில் நான் மொழிபெயர்த்தது சரியில்லை என்று சொன்னவர்களில் எவரும் முன்வராதபோது வந்தவர்களில் அதிகம் அனுபவம் கொண்டவர் மட்டும் முன்வந்து மொழிபெயர்க்க இசைந்தார்.
அந்த மொழிபெயர்ப்பாளர் திறமையாக மொழிபெயர்க்க குறுக்கு விசாரணை நன்றாக நடந்து முடிந்தது. எனக்கும் இருமலில் இருந்து குறுக்கு விசாரணையைமொழிபெயர்க்காததால் தற்காலிக விடுதலை கிடைத்தது.
பணிமுடிந்து அன்று மாலை தொடர்வண்டியில் மெல்பனுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். நான் மொழிபெயர்த்தது சரியில்லை என்று சொன்னவர்களில் ஒருவரான பெண் மொழிபெயர்ப்பாளரும்என்னோடு வந்தார். தொடர்வண்டியில் ஏறியதிலிருந்து மெல்பன் வரும்வரை நான் இடைவிடாது இருமிக் கொண்டிருந்ததைஅப்பெண் மொழிபெயர்ப்பாளர் அறிந்தார்.
இருமலுக்காக நான் பொய் சொல்லியிருக்கிறேன் என்பதைஉணர்ந்திருப்பார். அல்லது மொழிபெயர்க்கும் திறமையற்றவன் என்றும் எண்ணியிருக்கவும் வாய்ப்புண்டு.
தமிழில் ஒரு பழமொழி. “பஞ்சத்துக்கு ஆண்டியும் பரம்பரை ஆண்டியும்” என்பதே அப்பழமொழி. பழமொழி அனுபவத்தால் சொல்லப்படுவதுதானே. இந்த பழமொழியை இங்கு விளக்குவதற்குமுன் மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய உண்மை நிலையையும் விளக்கவேண்டும். அப்போதுதான் புரிந்துகொள்ள இயலும்.
மொழிபயர்ப்பாளர்கள் ஏனைய தொழில் புரிபவர்களைப்போல் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கல்லூரிகளுக்கோ பல்கலைக் கழகங்களுக்கோ சென்று மொழிபெயர்ப்பு தொழிலுக்காக கல்வி கற்பதில்லை. இந்த மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரும் சூழ்நிலை காரணமாக இத்தொழிலுக்கு வந்துள்ளார்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது சதவீதம் நான் நினைப்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருசதவீதம் அல்லது அதற்கும் குறைவானவர்களே அந்த தொழிலின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவும் சமூகத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்ற நல்லலெண்ணத்தாலும் இத்தொழிலை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது என் கணிப்பு.
நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம். நான் கண்டவரை உணர்ந்தவற்றின் அடிப்படையில்தான் இதைக்கூறுகிறேன். எனது அனுபவத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் அத்தொழிலை செய்வதற்குண்டான காரணத்தைக் கூறுகிறேன்.
ஒரு நாட்டிலிருந்து இன்னொருநாட்டிற்கு பல காரணங்களுக்காக குடியேறுகிறார்கள். இதில் படித்து தத்தம் நாட்டில் பணிபுரிந்தவர்கள் அவர்களது நாட்டில் வாழும் வாழ்க்கையைவிட வளமான வாழ்க்கையை வாழ வருகிறார்கள்.
இன்னொரு காரணம் அவர்கள் நாட்டில் வாழவழியின்றி வேறு நாட்டில் ஏதாவது தொழில் புரிந்து வாழலாம் என்ற எண்ணத்துடன் குடியேறுகிறார்கள்.
மூன்றாவது உள்நாட்டுப் போர் அல்லது வெளிநாட்டுடன் போர் போன்றவற்றால் வாழ்வாதாரத்தை இழந்தும் அடக்குமுறைகளுக்கு பயந்தும் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். இவர்களுக்குள் யாருக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதைப் பற்றி பார்ப்போம்.
தமது நாட்டிலேயே படித்து பணிபுரிந்து வளமான வாழ்வைநாடி குடியேறுபவர்களுக்ககு மொழிபெயர்பாளர் தேவைப்படாது. வாழவழியின்றி வேறு நாட்டிற்கு தொழில் புரிய வருபவர்களுக்கும் அவ்வளவாக மொழிபெயர்பாளர்கள் தேவைப்படாது.
உள்நாட்டுப் போர் மற்றும் வெளிநாட்டுப்போர் போன்றவற்றால் வாழ்வாதாரத்தை இழந்து வாழவழியின்றி வெளியேறும் பாமரமக்கள் மொழி தெரியாத நாட்டில் குடியேறும்போது அவர்களுக்கு மட்டுமே மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆதலால் இந்த தொழிலை நிரந்தரமான தொழில் என்றோ மற்ற தொழில்களைப்போல சம்பாதிக்க இயலும் என்றோ எண்ண முடியாது.
பின் இத்தொழிலைச் செய்ய யார் முன் வருகிறார்கள் என்பதைப் பார்ப்போம். தான் படித்த படிப்புக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வேலையை தேடமுடியாதவர்கள் அல்லது தகுந்த வேலை கிடைக்காதவர்கள் மற்றும் மற்ற வேலைகளைச் செய்ய மனமில்லாதவர்கள் கடைசி புகழிடமாக இந்த வேலையை தேர்ந்தெடுக்கிறார்கள்.
இப்படியாகத் தேர்ந்தெடுத்தவர்களை பரம்மபரை ஆண்டிகள் என்று சான்றுக்காகசொல்லலாம். இவர்கள் தொடர்ந்து இந்த வேலையை செய்து கொண்டிருப்பார்கள். வேறு வேலையை நாடாமல் அதற்குண்டான படிப்பையும் படித்து அனுபவத்தையும் அதிகரித்துக்கொள்வதால் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படாலாம். அதுவும் சிலருக்கு சிலதேரங்களில் மட்டுமே ஏற்படும்.
-சங்கர சுப்பிரமணியன்.
(தொடரும்)